தென்னைமரத்தின் பழமான தேங்காய் உயரிய உணவுகள் மற்றும் நடுத்தர உணவுகள் என எல்லாவகை உணவுகளிலும் முதலிடம் பிடிக்கின்றது.
வீட்டில் நடைபெறும் நல்ல காரியங்கள், விசேஷ உணவுகள் என இவை இல்லாத சுப நிகழ்ச்சிகள் இல்லை என்றே சொல்லலாம்.
தேங்காய்
இது கெட்டியாக இருப்பதால் பழமாக இருப்பினும், வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுகின்றது.
தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய் என அழைக்கப்படுகின்றது.
தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான் தேங்காய்.
அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும்.
இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர்.
இளநீர்
இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது.
இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும்.
இது இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.
உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது.
வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது.
இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.
மருத்துவ குணங்கள்
தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெருவயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக