உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய்களில் ஒன்று காசநோய்.
சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, மனித குலத்தின் எதிரியாக அசுர உருவம் எடுத்துள்ள இந்நோய்க்கு, இன்றளவும் பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளியே இந்த அவலநிலை காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
காசநோய் என்பது என்ன? அறிகுறிகள்?
டிபி (Tuberculosis) எனப்படும் காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்க்குலோஸிஸ் (Micobacterium Tuberculosis) என்ற கிருமியால் ஏற்படுகின்றது.
காற்றின் மூலம் பரவும் இந்நோய் கிருமிகள், பெரும்பாலும் சுவாசப்பையை தாக்குகின்றது.
நகம், முடியைத் தவிர எல்லா உறுப்புகளையும் தாக்கும் இந்த கிருமிகள், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் போது தான் மற்றவர்களுக்கும் பரவுகிறது.
· தொடர்ச்சியாக மூன்று வாரங்களிற்கு மேலான இருமல்
· சளியுடன் இரத்தம் வெளியேறல்
· நெஞ்சுவலி
· இரவு நேரக் காய்ச்சல்
· உடல் எடைகுறைதல்
· உணவில் விரும்பமின்மை
· இரவு நேரத்தில் வியர்த்தல்
· களைப்பாகக் காணப்படுதல்
· சுவாசிப்பதில் சிரமம்
காசநோய் பரவும் விதம்
நுரையீரல் காசநோய் உள்ள நோயாளி தும்மும்போதும், இருமும்போதும் கிருமியானது பரவுகிறது, இப்படி பரவும் கிருமி அடுத்தவர் நுரையீரலுக்குச் செல்கிறது.
அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நுரையீரலிலேயே தங்கிவிடுகிறது. ஒருவேளை அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், அது நோயாக உருவெடுத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சளி சிறுசிறு நீர்த் திவலைகளாக காற்றில் பரவுகிறது. ஒரு நீர்த் திவலையில் ஆயிரக்கணக்கான கிருமிகள் இருக்கும்.
திவலையின் அளவு 5 மைக்ரானுக்கு கீழ் இருந்தால், காற்றில் மிதக்கும். நுரையீரல் வரை சென்று வெளியே வந்துவிடும்.
10 மைக்ரானுக்கு மேல் இருந்தால் மூக்கு, அதற்கு அடுத்துள்ள பகுதியிலேயே தங்கிவிடும். சளியில் வெளிப்பட்டுவிடும்.
நீர்த் திவலையின் அளவு 5 முதல் 10 மைக்ரானாக இருந்தால், நுரையீரலில் சென்று தங்கிவிடும்.
ஒருவருக்கு நோய் தொற்றுவது அவர் காசநோய்க்கிருமிகள் உள்ள காற்றினை எவ்வளவு நேரம் சுவாசிக்கிறார் என்பதிலும் காசநோய்க்கிருமிகளின் செறிவிலும் தங்கி உள்ளது.
எனவே காற்றோட்டமான, சூரிய ஒளி உள்ள இடத்தில் வாழ்வதால் காசநோய்க்கிருமிகள் தொற்றும் வாய்ப்புக்குறைவு.
கண்டறியும் முறைகள்
தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் இருந்தால், சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும்.
சளியில் 105 ml கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டுபிடிக்க முடியும்.
மான்டோ பரிசோதனை, இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே படம் மூலமும் இந்நோயினை கண்டுபிடிக்கலாம்.
மாண்டோ சோதனை என்பது சருமத்தில் ஒருவித நீர்மம் உட்செலுத்தப்படும். அப்படி உள்ளே நீர்மத்தை செலுத்திய பின், அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால், உங்களுக்கு காசநோய் இருப்பது உறுதிபடுத்தப்படும்.
சிகிச்சைகள்
நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், காசநோய் முற்றிலும் குணமாகிவிடும்.
காசநோய்க்கு மருந்து சாப்பிடாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்தை உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது.
சாப்பிட வேண்டிய உணவுகள்
காசநோயைப் பொறுத்தவரை மருந்துகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குச் சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் அவசியம்.
குறிப்பாக, புரத உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
பால், முட்டை, பருப்பு, பயறு, ஆட்டுக்கறி, எலும்பு சூப் போன்றவற்றைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
மேலும் ஆப்பிள், பார்லி, ப்ரோக்கோலி மற்றும் அடந்த பச்சை வகை கீரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக