காதலின் சின்னத்தையும், மனிதனின் கண்களை எத்திசையும் சுழலவிடும் அழகிய கட்டிடங்களை கொண்டு காட்சியளிக்கிறது ஆக்ரா.
வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் காதலின் சின்னமாய் வீற்றிருக்கும் தாஜ்மஹாலை பார்க்காமல் செல்வதில்லை.
ஆக்ரா கோட்டை
தங்கள் ஆட்சியின் தலைநகராக, அதிகார பீடமாக கொண்டிருந்த ராஜ புதன அரசர்கள் 1080ம் ஆண்டில் கட்டியது(ஆக்ரா) மண்கோட்டை.
400 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு, அவர்களைத் தோற்கடித்த சிக்கந்தர் லோடியின்(1487-1517) ஆட்சியின் கீழ் இக்கோட்டை வந்தது.
அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி.
சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார்.
இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
1526ம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது.
ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் - அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் - முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது.
பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர் ஷா கைவசமானது இக்கோட்டை.
1556ல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு மாற்றினார்.
இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷா ஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேர்ரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.
பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷா ஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன.
இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷா ஜஹானுக்கே உரியது.
)
தாஜ்மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றாகவும் , காதலர்களின் சின்னமாகவும் காணப்படுகிறது தாஜ்மஹால்.
ஆக்ரா என்ற இடத்தில் யமுனை ஆற்றங் கரையோரம் தாஜ்மஹால் அமைந்திருக்கிறது.
ஆசியாவின் மிகவும் பிரபலமான இடமாகவும் , ஏராளமான உல்லாச பிரயாணிகள் வந்து பார்க்கும் இடமாகவும் உள்ளது.
மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் தான் இந்த அழகிய மஹால், என்ன அழகு, கண்களை பறிக்கிறது, படங்களை பார்க்கும் போதே இவ்வளவு அழகு என்றால் நேரில் பார்த்தால் என்ன அழகாக இருக்கும்.
பளிங்கு கற்கள் சீனாவிலிருந்தும், வைரங்கள் பன்னாவிலிருந்தும், சிவப்புக் கற்கள் பதேபூர் சீக்ரியிலிருந்தும், நீலக்கற்கள் இலங்கையிலிருந்தும் கொண்டுவரப்பட்டன.
அவற்றை கொண்டு பல பேரின் உழைப்பால் கட்டி முடிக்கப்பட்டது, தாஜ்மஹாலு்க்கு ஷாஜகான் பயன்படுத்திய சலவைக்கற்களே வேறு. அது மேக்ரான் என்ற உயர்ந்தபிரிவைச் சேர்ந்தவை எந்த ஒரு அமிலமும் இதனைக் கறுப்பாக்க முடியாது,சேதப்படுத்த முடியாது.
இந்தவகைக்கற்களின் மேல்படியும் அழுக்குகள் பிசுபசுப்பாகி ஒட்டிக்கொள்ளாது. அதனால் தான் எப்போது பார்த்தாலும் பளிங்கு போல இருக்கின்றது பார்ப்பதற்க்கு.
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.
தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள்(ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன.
கல்லறை மண்டபத்தில் வெள்ளை மார்பிள் கற்களும், விலையுயர்ந்த மணி வகைகளும் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
தொலைவிலிருந்து மட்டுமல்ல... வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும்.
ஆனால்... உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப்பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக