தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 ஏப்ரல், 2015

சுவிஸில் புலிகளின் எச்சரிக்கைக்கு பணிய மறுத்த மாவையும் ஜனாவும் -இரா.துரைரத்தினம்!


சுவிஸில் புலிகளின் எச்சரிக்கைக்கு பணிய மறுத்த மாவையும் ஜனாவும் -இரா.துரைரத்தினம்
இலங்கையில் பொதுத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருக்கும் இவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் என தம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும் ஒரு தரப்புக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு மிக இரகசியமாகவே நடைபெற்றது. எனினும் இந்த விடயங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இச்சந்திப்பின் நோக்கம், பேசப்பட்ட விடயங்கள், அதன் பின்னணிகள் பற்றிய தகவல்களை விபரமாக முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் மேற்குலக நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு இரண்டு அல்லது மூன்று குழுக்களாக இயங்குகின்றன. அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தான் விடுதலைப்புலிகளின் உண்மையான அமைப்பு என சொல்லிக்கொள்கிறார்கள்.

அந்த அமைப்புக்களில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமைச் செயலகமாகும். வுpநாயகம் என்பவரின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு இயங்குகிறது. ( இந்த சந்திப்பில் விடுதலைப்புலிகளின் சார்பில் கலந்து கொண்டவர்களின் விபரங்களை அவர்களின் நன்மை கருதி வெளியிடுவதை தவிர்த்திருக்கிறேன். )

இவர்களே இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை செய்தனர். வேடிக்கை என்ன என்றால் இவர்கள் யார், இவர்களின் பின்னணி என்ன, நோக்கம் என்ன என்று அறியாத நிலையிலேயே இவர்கள் அழைத்த உடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்தனர்.

மோகன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர்தான் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரை தொடர்பு கொண்டு சுவிட்சர்லாநதிற்கு வருமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி பேச வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த சந்திப்பிற்காக தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். புளொட் தலைவர் சித்தார்த்தன் இதில் கலந்து கொள்ளவில்லை.

மாவை சேனாதிராசாவுக்கும், ஜனாவுக்கும் இச்சந்திப்பு ஆரம்பமாகும் வரை இச்சந்திப்பை நடத்துபவர்கள் யார்? இதன் நோக்கம் என்ன என்ற எந்த விபரமும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு இந்த விடயங்கள் ஏற்கனவே தெரிந்திருந்தது. சுரேஷிற்கு இந்த சந்திப்பில் இருந்த வகிபாகங்கள், மற்றும் அவரின் நோக்கங்கள், காய்நகர்த்தல்கள் பற்றி இன்னொரு வாரம் விரிவாக எழுத இருக்கிறேன்.
இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகத்தின் சார்பில் மோகன் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்ததன் நோக்கம் பற்றி மோகன் என்பவர் பின்வருமாறு கூறினார்.

நாங்கள் தான் உண்மையான விடுதலைப்புலிகள் அமைப்பு, நாங்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம். 2009ஆம் ஆண்டு வரைக்கும் எமது ஆணையின் கீழ்தான் செயல்பட்டீர்கள், 2009ஆம் ஆண்டின் பின்னர் நீங்கள் தனியாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். இனிமேல் எங்கள் ஆணையின் கீழ்தான் நீங்கள் செயல்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழுவை நாம் நியமிப்போம். அந்த செயற்குழுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும். சம்பந்தனோ அல்லது இப்போது இருக்கும் நாடாளுமன்ற குழுவோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்குழுவோ இனிமேல் எந்த முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்க முடியாது. முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் கீழ் தான் நீங்கள் செயல்பட வேண்டும்.

எதிர்வரும் தேர்தலில் நாங்கள் தயாரித்து தரும் வேட்பாளர் பட்டியலைத்தான் நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ( 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியலை தயாரித்தார்கள்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவி கஜேந்திரகுமாருக்கு வழங்கப்பட வேண்டும், அடுத்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக கஜேந்திரகுமாரின் பெயர் இடம்பெற வேண்டும், விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த அனந்தி உட்பட நாங்கள் தரும் பட்டியலையே வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து விடயங்களும் இனிமேல் எம்மை கேட்டுத்தான் செய்ய வேண்டும். முடிவுகளை நீங்கள் எடுக்க முடியாது. அறிக்கைகளை நீங்கள் விட முடியாது. இவ்வாறு பல நிபந்தனைகளை விதித்த அக்குழு தாங்கள் தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தம் ஒன்றையும் அங்கு சமூகமளித்திருந்த மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கருணாகரம் ஆகியோரிடம் கொடுத்து அதில் கையொப்பம் இடுமாறும் கோரினர்.
அந்த ஒப்பந்தத்தில் பின்வரும் விடயங்கள் அடங்கியிருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழுவை விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் நியமிக்கும். அந்த செயற்குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.

இலங்கை அரசாங்கத்துடன் அல்லது சர்வதேச நாடுகளுடன் நடத்தப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கான பிரதிநிதிகளில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் நியமிக்கும் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். அப்பேச்சுவார்த்தைகளில் தலைமை பிரதிநிதியாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் நியமிக்கும் பிரதிநிதியே செயற்படுவார்.

அனைத்து பேச்சுவார்த்தைகளுக்கும் முதலும் பேச்சுவார்த்தையின் பின்னரும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

தேர்தல்களில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு மாவட்ட ரீதியாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் வேட்பாளர் தெரிவுக்குழுவை நியமிக்கும். அவர்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முடியும்.

இலங்கை அரசாங்கத்துடன் பேசப்படும் விடயங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசப்படும் விடயங்கள் அனைத்தும் உடனடியாக அறிக்கையாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இது போன்ற சில விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்டன.

இதனை செவிமடுத்துக் கொண்டிருந்த தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூறிய விடயங்களை விடுதலைப்புலிகளின் தலைமை செயலகம் என தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மாவை சேனாதிராசா தனது பாணியில் பேசத்தொடங்கினார்.

தம்பி, நீங்கள் இங்கு அழைத்த போது உங்களை யார் என்று தெரியாத நிலையிலும் உங்கள் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து இங்கு வந்தோம். உங்கள் பேச்சும் நடவடிக்கைகளும் இந்த ஒப்பந்தமும் எனக்கு வியப்பாக இருக்கிறது.
நான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் 25வருடங்களுக்கு மேலாக பழகியிருக்கிறேன். நீங்கள் பிரபாகரனை சந்திப்பதற்கு முதல் நான் அவருடன் பழகியிருக்கிறேன்.

வன்னிக்கு பல தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூட்டாகவும் நான் தனியாகவும் பல தடவைகள் சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அரசியல் பொறுப்பாளர் தமிழ் செல்வனையும் சந்தித்திருக்கிறேன்.

எந்த ஒரு கட்டத்திலும் தலைவர் பிரபாகரனோ அல்லது தமிழ்செல்வனோ இப்படி நிபந்தனைகளை விதித்ததும் இல்லை, ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து இதில் கையொப்பம் இடுமாறு கோரியதும் இல்லை. சில ஆலோசனைகளை வழங்கினார்கள். அவ்வளவுதான் எதனையும் அவர்கள் எங்கள் மீது திணித்தது கிடையாது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலமை வேறு, இப்போது உள்ள நிலமை வேறு, வெளிநாடுகளில் இருந்து கொண்டு நீங்கள் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. களநிலமைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் நிலமைகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்களின் விரும்பங்களை பிரதிபலித்தே நாம் செயற்பட முடியும்.

உங்கள் கோரிக்கைகளையோ அல்லது ஒப்பந்தங்களையோ இப்போது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழரசுக்கட்சிக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. அது போல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. இந்த விடயங்கள் பற்றி நான் முடிவு எடுக்க முடியாது. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுக்களே முடிவு எடுக்க முடியும். உங்களின் ஒப்பந்தத்தில் என்னால் கையொப்பம் இடமுடியாது. இந்த ஒப்பந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என மாவை சேனாதிராசா கூறினார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தலைவர் கஜேந்திரகுமாரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து கொள்வதற்கு எனக்கு ஆட்சேபனை கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை ஏற்றுக்கொண்டு மீண்டும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு தடையே கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமாரை நாங்கள் விலக்கவில்லை, தானாகத்தான் விலகி சென்று 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். இப்போது மீண்டும் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்பினால் தாராளமாக வரலாம்.

அனந்தியை தமிழரசுக்கட்சிதான் வடமாகாணசபை தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இணைத்து கொண்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு மாறாக செயற்பட்டதால் தமிழரசுக்கட்சி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பினால் தமிழரசுக்கட்சியிடம் விண்ணப்பித்தால் அது பற்றி தேர்தல் வேட்பாளர் தெரவுக்குழு அதனை பரிசீலிக்கும் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வழமையாகவே சகலரையும் சமாளிக்கும் வகையில் நழுவல் போக்குடன் பேசும் மாவை சேனாதிராசா அன்று மிக உறுதியாக பதில் அளித்து அவர்களின் கோரிக்கைகளையும் ஒப்பந்தத்தையும் நிராகரித்தது இச்சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் எதுவும் பேசாது மௌனமாக இருந்தார். ( இந்த மௌனத்தின் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன, அது பற்றி பின்னர் பார்க்கலாம்)

ரெலோ சார்பில் கலந்து கொண்ட ஜனாவும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட மறுத்ததுடன் நீங்கள் கூறிய விடயங்கள் பற்றி தமது கட்சி தலைமையிடம் கூறுவதாக கூறினார். எங்கள் கட்சிக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. அது போல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு செயற்குழு இருக்கிறது. முடிவுகளை அச்செயற்குழுக்களே எடுக்கும். யாரும் எம்மீது எந்த விடயத்தையும் திணிக்க முடியாது என ஜனா கூறினார்.

இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக பின்வரும் விடயங்களே இருந்ததை அவதானிக்க முடிகிறது.

1. மேற்குலக நாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் தமது உத்தரவின் கீழ்தான் செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றனர்.

2. தமது தாளத்திற்கு ஆடக்கூடியவர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும்.

3. முடிவுகளையும் தீரமானங்களையும் எடுக்கும் அதிகாரம் தம்மிடமே இருக்க வேண்டும்.

4. தற்போது பெரும்பான்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கில் செயற்பட்டு வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

5. சர்வதேச நாடுகள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே சர்வதேச நாடுகளுடனான சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பது.

6. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ஊடாக தங்கள் செயற்பாட்டையும் ஆதிக்கத்தையும் அங்கு நிலை நிறுத்த முடியும்.

7. தங்கள் தாளத்திற்கு ஆடக்கூடிய கஜேந்திரகுமார் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக வழிவகைகளை செய்வது. தமிழ் காங்கிரஷ் சார்பில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் கஜேந்திரகுமார் போன்றவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வைத்து வெற்றிபெற செய்வது.

இந்த நோக்கங்களுக்காகவே விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் என தம்மை அழைத்து கொள்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை அழைத்து இந்த உத்தரவுகளை வழங்கியதுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடுமாறு வலியுறுத்தினர்.

ஆனால் இவர்கள் யதார்த்தங்களை புரியாதவர்களாகவே உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் ஒரு நிலப்பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆயுத பலம் இருந்தது. விடுதலைப்புலிகளின் உத்தரவை மீறினால் அவர்கள் சுட்டுக்கொன்றுவிடுவார்கள் அல்லது வன்னியில் பிடித்து சிறையில் அல்லது பங்கருக்குள் போட்டு விடுவார்கள் என்ற பயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது.

ஆனால் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பி வந்து சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வாழுபவர்கள் போடும் உத்தரவுகளை வாய் மூடி மௌனிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களோ ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்க்க முடியாது.

சுவிட்சர்லாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் அகதி தஞ்சம் கோரி இருப்பவர்கள் ஒரு நாட்டின் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அச்சுறுத்தல் விடுப்பதையும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறு நெருக்குதல் கொடுப்பதையும் சுவிட்சர்லாந்து அரசு ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இங்கு முன்வைக்கப்பட வேண்டிய கேள்வியாகும்.

தாங்கள் அகதி தஞ்சம் கோரியிருக்கும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இன்னமும் வன்னி என நினைத்து கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்ப்பது எவ்வளவு தவறு என்பதை ஏன் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை?

இத்தனைக்கும் விடுதலைப்புலிகளின் அனைத்துலக தலைமை செயலகம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தால் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு. இப்படி இருக்கும் போது இலங்கையின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்று தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமா? என்ற கேள்விகளும் எழுகிறது.

பிரபாகரன் இருந்த காலத்தில் விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலத்தில் கூட இவ்வாறான நிபந்தனைகளை விதித்ததில்லை, ஒப்பந்தம் ஒன்றை செய்யுமாறு வலியுறுத்தியதும் இல்லை.

Mukil Vasantham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக