தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 26, 2015

இரு தேசிய இனங்கள்! ஒரு நாடு

தமிழரசுக் கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது.
தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம், தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில் இருந்தே பாவனையிலிருந்து வருகின்றது.
18.12.1949அன்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாவது கூட்டத்தில் கட்சியின் அமைப்புத் தீர்மானத்தை பிரேரித்துப் பேசிய தந்தை செல்வநாயகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
''நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகமற்ற முறையில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளை நீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தீர்ப்பதற்கு ஒரே வழி ஐக்கிய இலங்கை சமஷ்டியின் ஓர் அங்கமாக இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவுவதே என்பதைத் தெளிவாகக் கண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியாக அமைந்து இந்த நாட்டு தமிழ்பேசும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் "சுயாட்சி" என்ற இலக்கை அடைவதற்கு இடையறாது உழைக்க உறுதி பூண்ட தமிழ்பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குவதென்று தீர்மானிக்கிறது."
'தமிழ் பேசும் தேசிய இனம் பெரிய தேசிய இனத்தால் விழுங்கப்பட்டு அழியாதிருக்கவேண்டுமானால் இவ்வித சமஸ்டி ஏற்படுவது அவசியமாகிறது' 
"யாம் கோருவதும் இதுதான். ஒரு சுயாட்சி தமிழ் மாகாணமும் ஒரு சுயாட்சி சிங்கள மாகாணமும் அமைத்து இரண்டுக்கும் பொதுவானதோர் மத்திய அரசாங்கம் உள்ள சமஷ்டி அரசு இலங்கையில் ஏற்படவேண்டும்."
இதே மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொருளாதாரத் தீர்மானம் பின்வரும் கருத்தை வலியுறுத்தியது.
ஒன்றுபட்ட தமிழனத்தை உருவாக்கி அவர்களுக்கு ஒரு தாயகத்தையும் அத்தாயகத்தில் தம்மைத் தாம் ஆளும் உரிமையையும் நிலைநாட்டி அங்கு சுரண்டல் ஒழிந்த சோஷலிஸ பொருளாதார அமைப்பை ஏற்படுத்தி எல்லாத் தமிழ்பேசும் மக்களுக்கும் இன்பவாழ்வு வாழ வழிவகுப்பதே இலங்கைத் தமிழரசுக்கட்சின் குறிக்கோள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் Nation என்ற சொல்லுக்கும் Country என்ற சொல்லுக்கும் Oxford Advanced learners Dicitionary தரும் விளக்கத்தைப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது.
Nation : A Large Community of People usu sharing a Common history, culture and language and living a particular territory under one government.
Country : An area of land that forms politically independent unit
இவற்றின் Nation மூலம் என்பது மனித சமூகம் சார்ந்தது என்பதும் என்பது Country நிலம் சார்ந்தது என்பதும் தெளிவு.
ஆகவேதான் இந்த நாட்டில் இரு தேசிய இனங்கள் இருப்பதை வலியுறுத்தியே two nations in one country என்று 1981 செப்டெம்பர் மாதத்தில் விடுதலைப் புலிகளின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவைச் சந்தித்தபோது எடுத்துக்கூறினேன். அவ்வாறு தெரிவித்ததை விடுதலைப் புலிகளின் உயர்தலைமைக்கும் அறிக்கையிட்டேன். இது தந்தை செல்வாவினதும் அமரர் அ.அமிர்தலிங்கத் தினதும் கருத்துக்களின் வெளிப்பாடே.
தந்தை செல்வா தமிழரசுக்கட்சின் முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பேசும்போது தமிழ் பேசும் தேசிய இனம் என்று தமிழினத்தையும் 'பெரிய தேசிய இனத்தால்'என்று சிங்கள இனத்தையும் குறிப்பிட்டார். இதன்மூலம் இலங்கையில் இரு தேசிய இனங்கள் இருப்பதை அப்போது தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இதனுடன் அமரர் அ.அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளிலும் இந்தக் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது.

29.04.1982 ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமரர் அமிர்தலிங்கம் பேசியபோது பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'அதன் பின்பு படிப்படியாக சிங்கள மக்களுடைய கைக்கு அரசியல் அதிகாரம் மாறி 1948ஆம் ஆண்டு அவர்களுடைய ஆட்சி அதிகாரம் பூரணத்துவம் பெற்றது.தமிழ்த் தேசிய இனத்தைப் பொறுத்தவரையிலே அந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை.'
இதற்கு முன்பாக 03.08.1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அ.அமிர்தலிங்கம் அப்போதைய சபாநாயகராலேயே மிகவும் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஆங்கில உரையில் பல சந்தர்ப்பங்களில் இந்தச் சொற்களை மிக லாவகமாகப் பயன்படுத்தியுள்ளார்.
Two nations என்ற சொற்களை 16 தடவைகளும் Sinhalese Nation என்ற சொற்களை 5 தடவைகளும் பாவித்துள்ளார். இவற்றுள் அவர் மேற்கொள்காட்டிப் பேசிய 04.02.1976ஆம் ஆண்டு தமது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டிருந்த பதினொரு தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணையும் 14.05.1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானமும்
03.07.1972ஆம் ஆண்டு தமது நாடாளுமன்ற ஆசனத்தை ராஜினாமாச் செய்து மீண்டும் தெரிவு செய்யப்பட்டபோது தமிழரசுத் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆற்றிய உரை அரசியலமைப்புத் தெரிவுக்குழுவின் பங்குபற்றுவதில்லையெனத் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தீர்மானம் என்பனவும் உள்ளடக்கப்பட்டன.
அமரர் அமிர்தலிங்கம் தமிழினம் ஒரு தனித்துவமான தேசிய இனம் distinct nation என்பதை வலியுறுத்தியுள்ளார். மேலும் அவரது பேச்சில் nationhood என்பதனையும் பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.
“We are a separate nation entitled to the right of self determination I cannot undertake a lecture in poltical theory at this stage and the elements that go to constitute nationhood. To say the
least a nation has been defined as a territorially evolved community of people united by language, religion, common tradition and culture and the will to live together as a nations”
இதன் மொழியாக்கம்:
"நாம் சுயநிர்ணய உரிமையுடைய தனித்துவமான தேசிய இனம். தேசிய இனத்துவம் பற்றி ஒரு விவரிவுரையை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள நான் விரும்பவில்லை. ஆகக்குறைந்தது பிராந்திய ரீதியாக உருவாகி மொழியாற்றல் மதத்தால் பொதுப் பழங்கவழக்கங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றுடன் ஒரு தேசிய இனமாக வாழத் திடசங்கற்பம் கொண்ட மக்கள் சமூகத்தை தேசிய இனமாக வரையறை செய்யலாம்"
இந்த வரையறையின் மூலம் அமரர் அமிர்தலிங்கம் Nation என்ற சொல்லுக்குத் தேசிய இனம் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளமை மிகத் தெளிவு.
தமிழினப் பிதாமகன்களான தந்தை செல்வநாயகம் மற்றும் அமரர் அமிர்தலிங்கம் ஆகியோரின் கருத்துக்களுக்கு அமைய "இரு தேசிய இனங்கள் ஒரு நாடு" என்ற நிலையை நாம் ஏற்றுக்கொண்டு செயற்படவேண்டிய காலகட்டத்தில் நிற்பதை தந்தை செல்வநாயகத்தின் நினைவாக எல்லோரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
அமரர் அ.அமிர்தலிங்கம் தனது உரையின் இறுதிப்பகுதியில் பின்வருமாறு எச்சரிக்கையாகவே குறிப்பிட்டிருப்பதை நாம் கவனத்திற்கெடுத்துச் செயற்படவேண்டும்.
“We don’t want our future generations to be totally annihilated in this Country and to cease to exist as a separate entity”
இதன் மொழியாக்கம்:  எமது எதிர்கால சந்ததி இந்த நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டு தனித்துவமற்றதாக இருப்பதை நாம் விரும்பவில்லை.
இவற்றிலிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஆரம்ப நாளிலேயே சுயாட்சி தமிழ்பேசும் இனம்,தாயகம்,சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன என்பதும் அவையே தமிழ்பேசும் இனத்தின் அடிப்படைக் கோரிக்கைகளாகவும்
1985 திம்புக் கோட்பாடாயினும் சரி அதன் பின்னர் இன்றுவரையாயினும் சரி தமிழ் பேசும் மக்களின் அடிப்படை இலட்சியங்களாகவும் இலக்குகளாகவும் இருந்து வருகின்றன. இவற்றை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் வழிமுறைகளும் வேறுபட்டாலும் இந்த இலட்சியங்கள் மாறுபடாமலேயே இருக்கின்றமை தெளிவு.
ஆகவே தமிழ்பேசும் மக்களின் அரசியல் வழிகாட்டியாகவும் இவையே இன்னும் உள்ளன என்பதும் தெளிவு.இதுவே இலங்கை தமிழரசுக் கட்சியின் தெளிவான நிலைப்பாடும் ஆகும்.
இந்த விடயத்தை தந்தை செல்வநாயகத்தின் நினைவாக நாம் முன்வைப்பதற்கான முக்கிய காரணம் தென்னிலங்கை அரசாங்கங்கள் சிறுபான்மை இனம் என்று ஒன்றில்லை எல்லோரும் ஒரே இனம் என்ற கருத்தை ஆழமாக விதைத்து வரும் அதே வேளை,
 எமது மண்ணிலேயே எம்மினத்தின் தனித்துவத்தை மறைத்து அழித்துவிடும் வகையில் “One nation - One country”, ஓர் இனம் ஒரு நாடு என்ற வாசகங்கள் திரும்பிய இடைமெல்லாம் காட்சியளிக்கின்றன. இவற்றை கவனத்திற்கொண்டு செயற்படவேண்டியது நம் எல்லோரதும் பொறுப்பும் கடமையும் ஆகும்.
சீ.வீ.கே.சிவஞானம்
துணைப் பொதுச் செயலாளர்
இலங்கை தமிழ்அரசுக் கட்சி

No comments:

Post a Comment