தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சித்திரை வரலாறு!



தமிழ் மாதங்களிலேயே மிக சிறப்பான உன்னதமான மாதம் என்றால் அது சித்திரை மாதம் தான்.
சித்திரையின் முதல் நாளைத் தான் உலகத் தமிழர்கள் அனைவரும் புது வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
நமது முன்னோர்கள் சூரியனை வைத்தே காலத்தைக் கணக்கிட்டனர், இதற்கு திருக்கணித பஞ்சாங்கம் என்று பெயர்.இதனை அடிப்படையாக கொண்டு சித்திரையில் முதல் நாளில் நாம் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுகிறோம்.
லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான காலங்களை கூட திருக்கணித பஞ்சாக்கத்தின் மூலம் துல்லியமாக கணக்கிட்டனர்.திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி சித்திரை முதல் நாளில் சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார்.
இதன் விளைவாக முன்னோர்கள் காலத்தை ஆறு வகையாக பிரித்து கணித்துள்ளனர்.
அதாவது,
1. வசந்த காலம்- இள வேனில் காலம்-(சித்திரை, வைகாசி)
2. முதுவேனில் - கோடைக் காலம்( ஆனி, ஆடி)
3. கார் காலம்- மழைக் காலம் (ஆவணி, புரட்டாசி)
4. கூதிர் காலம்-குளிர் காலம்( ஐப்பசி, கார்த்திகை)
5. முன் பனிக்காலம் (மார்கழி, தை)
6. பின் பனிக்காலம்( மாசி, பங்குனி)
இயற்கை செழிக்க ஆரம்பிக்கும் காலம் என்பதால், வசந்த காலத்தில் கோலாகலமான கோயில் திருவிழாக்கள் கொண்டாடப்படும். இந்த காலத்தில் மக்கள் மனதில் மகிழ்ச்சியும், பக்தியும் பெருகும்.
வருடத்தின் தொடக்கத்தில் வசந்த காலம் வந்தால் வருடம் முழுவதும் மக்கள் வாழ்வு சிறப்பாக அமையும் என்பதால் சித்திரையை தமிழ் ஆண்டின் ஆரம்ப மாதமாக குறித்தனர். அதற்கு அறிவார்ந்த காரணங்களும் உள்ளன.
பூமி சூரியனைச் சுற்றி வரும் நீள் வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்த முன்னோர்கள், அவற்றை ராசிகள் என அழைத்தனர். மேஷம் தொடங்கி மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் உள்ளன.
ஒரு நீள் வட்டப்பாதையின் மொத்தக் கோணங்கள் 360 பாகை ஒவ்வொரு ராசிக்கும் 30 பாகை உண்டு. இதில் மேஷம் பூஜ்ஜிய பாகையில் தொடங்குவதால் அதை முதல் ராசியாக முன்னோர்கள் குறித்தனர்.
இதன்படி சூரியன், மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை, இதனால் சித்திரையின் முதல் நாளை முன்னோர்கள் புத்தாண்டாக கொண்டாடினர்.
சூரியனை அடிப்படையாக கொண்ட இந்தக் காலகணிப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.
ஓரிசா, மேற்கு வங்கம், மணிப்பூர், பஞ்சாப் அஸ்ஸாம் ,கேரளா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாத இடையில் அனேகமாக 14 ஆம் திகதியே புத்தாண்டு ஆரம்பிக்கின்றது.
தமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவை உணவு மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது. இனிப்பு, காரம், கார்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு இந்த எல்லாச் சுவைகளும் சேர்த்து அன்று வீடுகளில் விருந்து தயாரிக்கப்படுகிறது. தலைவாழை இலையில் உணவு வகைகளை கடவுளுக்கு படைத்து பூஜை செய்வார்கள்.
சித்திரை புது வருடத்தில் தமிழர்கள் புத்தாடைகளை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். மேலும், உற்றார் உறவினரோடு ஒன்றிணைந்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதோடு, இனிப்பு வகைகளையும் பரிமாறிக்கொள்கின்றனர்.
எவ்வாறாயினும் பழைய வருடம் கழிந்து பிறந்துள்ள புதிய வருடம் தமிழர்களின் வாழ்வில் துயரங்களை போக்கி நன்மைகளை வழங்கி மகிழ்ச்சியை விதைக்கும் வருடமாகட்டும் என வாழ்த்துவோம்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக