தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 மார்ச், 2015

கலாச்சாரம்


கலாச்சாரம் என்பது ஒரு நாட்டின் ஆணிவேர். சமூகத்தின் அடையாளம். ஒவ்வொருவரின் ரத்தத்தோடும் ஊறிப்போனது.
தாய், தந்தை, கணவன், மனைவி, மாமன், மச்சான் என்ற உறவு முறைகள், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்று வரையறுக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகள்தான் சமூகத்தின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது என்றால் மிகையாகாது.
ஆடை நாகரீகம் நாட்டுக்கு நாடு மாறுபடும். ஆனால் இந்திய ஆடை கலாச்சாரமும், உறவு முறைகளும்தான் உலகிற்கே இந்தியாவை தனித்துவமாக அடையாளம் காட்டுகிறது.
இந்திரா பிரதமராக இருந்தபோது கலாச்சார உடையான சேலை கட்டி உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ததை பார்த்து அந்த நாடுகள் பெருமைப்பட்டன. அதன் பிறகு சேலை கட்டிய பெண்ணை எந்த நாட்டில் பார்த்தாலும் ‘ஓ.... இந்திய பெண்ணா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள். இந்திய பெண்களுக்கு கிடைத்த பெருமை அது.
பெருந்தலைவர் காமராஜர் கூட ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது நடுங்கும் குளிரிலும் பாரம்பரிய வேட்டியுடன் கம்பீரமாக நடந்ததை பார்த்து அந்த நாடே வியந்தது.
இன்று கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ஆக்கிரமித்த மேலை நாட்டு நாகரீக மோகத்தால் நமது பாரம்பரிய அடையாளங்களை இழந்து வருகிறோம்.
பெண்கள் ‘ஜீன்ஸ்’ அணிந்தால் தப்பா? என்று விவாதிக்கும் அளவுக்கு காலம் மாறியிருக்கிறது. இது வசதியாக இருக்கிறது. அணிய எளிதாக இருக்கிறது என்று நொண்டி சாக்கு காரணம் வேறு சொல்லி தப்பிக்கிறோம்.
வேட்டி கட்ட தெரியாதவர்களாக இளைஞர் சமுதாயம் இருக்கிறது. சேலை கட்ட தெரியாத பெண்கள் இருக்கிறார்கள். மாற்றங்கள் தேவைதான் என்றாலும் அது மரபு மீறாமல் இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் நம் முன்னோர்கள் சில லட்சுமண ரேகைகளை வரைந்துள்ளார்கள். அதை தாண்டக்கூடாது என்பார்கள். ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்த முன்னோர்கள் விவரம் புரியாதவர்களா? எதிலும் ஒரு கட்டுப்பாடு இருந்தால்தான் வாழ்க்கை சிறக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து ஒவ்வொன்றையும் வரையறுத்து சொன்னார்கள். உணவு கட்டுப்பாடு இருந்தால்தான் உடல் கட்டுக்குள் இருக்கும். தனி மனித ஒழுக்கம் பேணப்பட்டால்தான் வாழ்க்கை ஜொலிக்கும். உடல் முழுக்க ஆடை அணியாதவர்களை அரைகுறை மனிதர்கள் என்றார்கள். காரணம் வரம்பு மீறக்கூடாது என்பதற்குத்தான்.
உலகிற்கே கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்த நம் நாட்டில் நிகழும் சமூக அவலங்களும், கலாச்சார சீரழிவுகளும் வேதனையான விசயம். குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் வெட்கி தலைகுனிய வைக்கிறது. இதற்கு கலாசார மீறலும் காரணம் என்பதை மறுக்க முடியாது.
பல பாலியல் தொந்தரவுகளுக்கு ஆடையும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண் சமூக ஆர்வலர்களும் இதை ஒத்துக்கொள்கிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாக சொல்வார் ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம். அந்த நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்லாயிருக்கலாம்’ என்று.
இதுதான் யதார்த்தம். இந்த எதார்த்த வாழ்வை ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களிலும் புரிந்து நடந்து கொண்டால் பிரச்சனைகள் வராது. நமது கலாச்சாரத்தை பற்றி தம்பட்டம் அடிக்கும் நாமே நமது கலாச்சாரத்தை கேலிக்கு உள்ளாக்குவதும், விவாதத்துக்குள்ளாக்குவதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் வகுத்து வைத்தார்கள். இப்போது ‘எய்ட்ஸ்’ தாக்காமல் இருக்க இந்திய வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள் என்று அமெரிக்கா போன்ற நாடுகளே பிரசாரம் செய்கின்றன.
நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், கற்று தந்த கலாச்சாரம் சமூக முன்னேற்றத்துக்குத்தான் உறுதுணையாக இருந்து வருகின்றன.
காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்ற சித்தாந்தம் அறிவை வளர்க்கும் அறிவியலுக்கு பொருந்தும். ஆனால் வாழ்வியல் அதில் இருந்து வேறுபட்டது.
நாட்டு சூழல், சமூக அமைப்பு இவற்றை மையமாக வைத்துதான் வாழ்வியல் அமைகிறது. வாழ்வியலின் இதய துடிப்பாக விளங்குவது சமூகம் சார்ந்த கலாச்சாரம். அதை கட்டிக்காத்தால் நலம் பெறலாம். இன்றைய கால மாற்றுத்துக்கு ஏற்ப இளைய சமுதாயத்தின் திசை மாறுகிறது. அதை சுட்டிக்காட்டி திருத்துவது நம் கடமை. அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு நாட்டை திருத்தப்போகிறோம் என்று வன்முறையில் ஈடுபடுவது திருந்த நினைப்பவர்களையும் திசை மாற வைத்து விடும்.
நமது கலாச்சாரத்தை இழந்தால்–அல்லது அழித்தால் நம்மை நாம் இழப்போம். நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம் என்பதுதான் அர்த்தம் என்பதை அறிவுரையால் நடைமுறையால் உணர செய்வது பொறுப்புள்ளவர்களின் கடமை.
வீடு காக்க.... நாடு காக்க... நம்மை நாம் காக்க... கலாச்சாரம் தேவை. அதை கனிவுடன் அறியச்செய்வோம். நமது நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம்.


  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக