#தேனூறும்_தேவாரம்_இசைப்பாட
-
தே + ஆரம் = தேவாரம். தே என்றால் இனிய என்று பொருள் உண்டு. தேநீர் என்று சொல்கிறோமல்லவா. அதே போல தே என்றால் அருள் என்றும் ஒரு பொருள் உண்டு. ஆரம் என்றால் மாலை. ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தரும் பாமாலை என்று பெயர்க்காரணம் இருக்கிறது. இனிய (பா)மாலை என்று எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே.
-
இன்றைக்கு தேவாரம் என்பது சைவர்கள் மூவர் பாடியவைகளாகக் கருதப்படுகிறது. மூவர் என்றால் யார் யார்? அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர். இவர்கள் பாடியவை தேவாரம் என்று தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன் முதலில் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பரடிகள் பாடியதே தேவாரம். சம்பந்தர் பாடியது திருக்கடைக்காப்பு. சுந்தரர் பாடியது திருப்பாட்டு.
-
அப்பர் பாடிய தேவாரப் பதிகங்கள் மக்களிடம் மிகப்பிரபலமாகி சம்பந்தரும் சுந்தரரும் பாடிய பதிகங்களுக்கும் கூட தேவாரம் என்று பெயர் வந்துவிட்டது.
-
இந்தப் பாடல்களைப் பின்னாளில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுத்தார். சைவ மூவர்களின் பாடல்கள் மொத்தம் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. இவை அத்தனைக்கும் பொதுப்பெயராக தேவாரம் நின்று நிலைத்துவிட்டது. இது அப்பரடிகளுக்கே பெருமை.
-
முதலாம் திருமுறை
திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1469 பாடல்கள்
இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1331 பாடல்கள்
மூன்றாம் திருமுறை
திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு = 1346 பாடல்கள்
நான்காம் திருமுறை
திருநாவுக்கரசரின் தேவாரம் = 1060 பாடல்கள்
ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசரின் தேவாரம் = 1015 பாடல்கள்
ஆறாம் திருமுறை
திருநாவுக்கரசரின் தேவாரம் = 980 பாடல்கள்
ஏழாம் திருமுறை
சுந்தரரின் திருப்பாட்டு = 1026 பாடல்கள்
பதிகம் அப்படியென்றால் இறைவனின் புகழைப் பாடும் பத்து பாடல்களின் தொகுப்பு ஒரு பதிகம். ஆனால் திருஞானசம்பந்தரின் பதிகத்தில் மட்டும் பதினோரு பாடல்கள் இருக்கும். பத்து பாடல்களைக் கொண்ட பதிகத்தைப் படிப்பதனால் உண்டாகும் பலனைப் பதினோராம் பாட்டில் வைத்தார் திருஞானசம்பந்தர்.
-
மூவர் பாடிய பதிகங்கள் பலப்பல திருத்தலங்களில் பாடப்பட்டவை. பண் என்பது தமிழிசையைக் குறிப்பது. வடமொழியில் இராகம் என்கிறார்கள், அதுதான் பைந்தமிழில் அதுதான் பண்.
ஒரே பண்ணில் பாடப்பட்ட பாடல்களாகத் தொகுத்தால் அது பண்முறைத் தொகுப்பு. பாடப்பட்ட தலங்களை வைத்துத் தொகுத்தால் அது தலமுறைத் தொகுப்பு.
மூவரின் தேவாரங்களில் இருந்து ஒவ்வொரு பாடலைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தப் பாடல்களை வாயால் பாடி மனதினால் சிந்தித்து அருளின்பம் பெருகட்டும்.
-
திருநாவுக்கரசர்
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."
-
திருஞானசம்பந்தர்
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி என்உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனைநான் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே."
-
சுந்தரர்
“பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே“
-
இப்படியான சிறப்புடைய பதிகங்களை உள்ளத்தில் நிறுத்தி உதட்டில் உச்சரித்து உயிரோடு சேர்த்து உருக்கிவிட்டால் ஈசனருள் உறுதி. தெய்வத் தமிழ் தேவாரம் போற்றி! போற்றி!
-
"திருச்சிற்றம்பலம்" "திருச்சிற்றம்பலம்" "திருச்சிற்றம்பலம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக