530 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய மன்னனின் சடலம்! களைகட்டும் பிரித்தானியா (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவில் ஆட்சி செய்த மூன்றாம் ரிச்சர்டு என்றொரு மன்னரின் உடல் 530 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மூன்றாவது ரிச்சர்ட் மன்னன் 1485ம் ஆண்டில் இடம்பெற்ற பாஸ்வொர்த் போர்க்களத்தில் அவரது எதிரிப்படையால் கொல்லப்பட்ட போது, அவருக்கு வயது 32 என்று கூறப்படுகிறது.
1483 முதல் 1485 வரை வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டும் ஆட்சி பொறுப்பில் அவர் இருந்தார் என்றும், அவரிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு அவரது சகோதரர்களே அவருக்கு எதிராக கிளர்ச்சியை உண்டு செய்ததாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு போர்கள் பலவற்றை திறம்பட சமாளித்த அவர் உள்நாட்டு கலவரத்தால் உயிர் இழக்க நேரிட்டுள்ளது.
ஆனால் அவரது உடல் அடக்கம் அப்போது முறைப்படி நடக்கவில்லை என்றும் அவரது உடலை எங்கு தேடியும் பல ஆண்டுகளாக கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு மத்திய லண்டனில் உள்ள லெய்செஸ்டெர் (Leicester) எனும் நகரத்தில் அமைந்துள்ள கார் இருப்பிடத்திற்கு அடியில் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உடல், போரில் உயிரிழந்த மூன்றாம் ரிச்சர்டின் உடல்தானா என்பது பற்றி சந்தேகம் எழுந்ததையடுத்து மரபியல் நிபுணரான டூரி கிங் தலைமையிலான குழுவினர், ரிச்சர்ட் மன்னனின் தந்தை வழி மற்றும் தாய் வழி உறவினர்களின் முழுமையான மரபுத் தொகுதிகளை சேர்த்து ஆய்வை மேற்கொண்டனர்.
அங்கு கிடைத்த எச்சங்களை அந்த குழுவினர் ஆய்வுசெய்ததில் அந்த நபர், இளம் பொன்னிற முடியையும், நீல நிற கண்களையும் கொண்டிருந்தார் என்று தெரியவந்தது.
மூன்றாம் ரிச்சர்ட் மன்னனும் தனது இளமைக்காலத்தில் பொன்னிற முடியைக் கொண்டிருந்ததாக கூறப்பட்டிருந்த நிலையில், அந்த எழும்புக்கூட்டில் காணப்படும் மரபணு, ரிச்சார்டின் இரு உறவினர்களின் மரபணு தொகுதியுடன் பொருந்துவதாக Leicester பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது சுமார் 530 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது உடல் முறைப்படி, அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
இதற்காக மூன்றாம் ரிச்சர்ட் மன்னரின் உடலை ஓக் மரத்தில் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து, லெய்செஸ்டெர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல உள்ளனர்.
பின்னர் அவரது சடலம், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லெய்செஸ்டெர் தேவாலயத்துக்கு கொண்டு வந்து வைக்கப்பட உள்ளது.
இதையடுத்து, ஆங்கிலிக்கன் திருச்சபையை சேர்ந்த காண்டர்பரி ஆர்ச்பிஷப் தலைமையில் வரும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தி, அரச மரியாதையுடன் மன்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மேலும், பிரித்தானிய அரச குடும்பத்தின் சார்பில், அவரது இளையமகன் எட்வர்டின் மனைவி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.
மூன்றாம் ரிச்சர்டின் உடலை சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகு நல்லடக்கம் செய்யும் இந்த நிகழ்வை வரலாற்று சிறப்புமிக்க விழாவாக சுமார் ஒரு வாரம் சீரும் சிறப்புமாக திட்டமிட்டு செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக