தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 16 மார்ச், 2015

கோடைக்காலத்தில் பரவும் நோய்கள்: ஓர் எச்சரிக்கை

கோடைக்காலம் ஆரம்பித்தவுடனேயே கோடைக்கால நோய்களும் மக்களை பின் தொடர ஆரம்பித்துவிடுகிறது.
கோடைக்கால நோய்கள் அனைத்துமே உடல்சூட்டினால் வரக்கூடியவை. எனவே உடல் சூட்டை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான பானங்களை பருக வேண்டும்.
சின்னம்மை, தட்டம்மை, மஞ்சள் காமாலை போன்றவை கோடைக்கால நோய்கள் ஆகும்.
மேலும், நாம் எடுத்துக்கொள்ளும் சிலவகை உணவுகள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் சூட்டை கிளப்பிவிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
கோடைக்காலத்தில் பரவும் நோய்கள் இதோ,
சின்னம்மை
காற்றில் பரவும் கிருமிகளால் ஏற்படக்கூடிய சின்னம்மை பொதுவாக குழந்தைகளை விரைவில் தாக்கும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்முவதாலோ அல்லது இருமுவதாலோ கூட மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.
இந்த நோய் ஏற்படும் போது தலைவலி, தொண்டை கரகரப்பு, உடல் சோர்வு மற்றும் உடலில் ஆங்காங்கே சின்ன சின்ன கொப்பளங்கள் ஏற்படும்.
இதிலிருந்து முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு, வெளியில் சென்று வந்தவுடன் நன்கு குளித்துவிட்டோ அல்லது கை கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
வேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவை சின்னம்மைகான சீரிய மருந்தாக கருதப்படுகிறது.
தட்டம்மை
கோடைக்காலங்களில் அதிகமாய் வெளியில் சுற்றுபவர்களுக்கும், தண்ணீரை குறைவாக பருகுபவர்களுக்கும் பரவலாக பரவும் நோய் தான் தட்டம்மை.
பாராமிக்ஸோ (Paramyxoviridae) எனும் வைரஸால் தட்டம்மை நோய் ஏற்படுகிறது.
தட்டம்மை தொண்டைப்பகுதியில் தான் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சளி, காய்ச்சல், இருமல், கண்கள் சிவந்து காணப்படுவது போன்றவை தட்டம்மைக்கான அறிகுறிகள் ஆகும்.
எம்.எம்.ஆர் எனப்படும் நோய் தடுப்பூசி அளிப்பதன் மூலம் இந்நோயின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை
சுகாதாரமற்ற தண்ணீரை பருகுவதினாலும், சுத்தமற்ற தண்ணீரில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவதினாலும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
ஹெபடைடிஸ்(Hepatitis) எனும் வைரஸின் தாக்கத்தினால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இது கல்லீரலை வலுவாக பாதிக்கக்கூடிய நோயாகும்.
சருமத்தின் நிறம் மாறுதல், சிறுநீரின் நிறம் மாறுதல், கண்கள் மஞ்சளாக காணப்படுதல், சரும எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
இந்நோயில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்ணும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும், நன்கு கொதிக்க வைத்த மற்றும் வடிகட்டிய நீரை குடிக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு
கோடைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் நோய்தான் வயிற்றுப்போக்கு. கெடுதியான உணவுகளை உட்கொள்ளவதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றன.
குமட்டல், வயிறு வீக்கம் அடைதல், உடலில் நீர் அளவு குறைந்து இருப்பது ஆகியவை வயிற்றுப்போக்கிற்கான அறிகுறிகள்.
சுகாதாரமான உணவுகள், மற்றும் காய்ச்சிய நீரைக் குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக