இன்றைய நவீன காலத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கான்டக்ட் லென்சை (contact lenses) கண்களை அழகாக காட்டுவதற்காக பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
முன்பெல்லாம் பார்வை குறைபாடு இருந்தால் மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்து விட்டு அதற்கு ஏற்ற மூக்கு கண்ணாடிகளை வாங்கி அணிந்து கொள்வார்கள். ஆனால் அந்த கண்ணாடிகள் முக அழகை கெடுப்பதாக நினைப்பவர்கள் இந்த கான்டக்ட் லென்சை அணிய ஆரம்பித்தனர்.
கான்டக்ட் லென்ஸ் மிக மெல்லிசான பிளாஸ்டிக் பாலிமரால் செய்யப்பட்டது. கண் விழிகளில் பொருத்தக் கூடியவாறு உருவாக்கப்பட்ட இதில், நுண்ணிய துளைகள் இருக்கும். இவற்றின் மூலமாக தான் கருவிழிக்கு ஆக்சிஜன் போகும்.
கான்டக்ட் லென்ஸ்களில் ‘காஸ்மெட்டிக் லென்ஸ்(cosmetics lenses), ‘மல்ட்டி கலர் லென்ஸ்(multi color lenses) என்று பல்வேறு வகையான லென்ஸ்கள் கிடைக்கின்றன.
பல வண்ணங்களில் கிடைக்கும் காஸ் மெட்டிக் லென்ஸ்களில், நிறமிகள் சேர்க்கப்படும். இந்த நிறமிகள் கண்ணின் கரு விழிக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைக்கின்றன. இதனால், கருவிழியில் ரத்தநாளம் வளர்ந்து கண்களில் நோய்த் தொற்று, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் ஒரே லென்ஸை சரிவரப் பராமரிக்காமல் அதிக காலம் பயன்படுத்தும் போதும் மேற்கண்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
பொதுவாக நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய லென்ஸ் வகைகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் மாற்றிக்கொள்ளத்தக்க வகையிலான ‘டிஸ்போஸபிள் கான்டக்ட் லென்ஸ்களைப்(disposable contact lenses) பயன்படுத்துவது இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.
மல்ட்டி கலர் லென்ஸ்களில் லைட் ஃபில்டரிங்(Light Flitering), ஸ்பெஷல் எஃபெக்ட்(Special Effect) தொழில்நுட்பங்கள் உள்ளதால், நல்ல வெளிச்சம் ஊடுருவலுடன் தெளிவான பார்வை கிடைக்கும்.
‘சாஃப்ட் லென்ஸ்(Soft lenses) என்று ஒரு வகை கான்டக்ட் லென்ஸ் உள்ளது. இதைப் பொருத்திக் கொண்டால், கண்ணுக்குள் எந்தவித உறுத்தலும் இருக்காது. ஆனால், இந்த சாஃப்ட் லென்ஸில் உள்ள குறைபாடு என்னவென்றால், பார்வைத் திறன் குறைவாக இருந்தால் தெளிவானப் பார்வை கிடைக்காது.
தற்போது இந்த கான்டக்ட் லென்ஸ்களில் ஜூம்(Zoom) செய்து பார்க்கிற வசதியும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஜூம் லென்ஸ்களின் (Zoom lenses)மூலம் வழக்கமான பார்வை திறனோடு, 2.8 மடங்கு ஜூம் செய்தும் பார்க்க முடியும். கண் இமை அசைவு மூலம் இது ஒரு தொலைநோக்கி போன்று செயல்படும்.
இதன் முன்பக்கம் உள்ள துளைகள் கண்விழிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லவும், ஒளிஊடுருவவும் உதவுகிறது.
இதே போல 2014ம் ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் (University of Michigan) இரவு நேரத்தில் பார்க்கும் வசதி கொண்ட கான்டக்ட் லென்ஸ்களை கிராபெனின் சென்சார்கள் (graphene sensors) மூலம் உருவாக்கும் முயற்சிகளில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எத்தகைய கான்டக்ட் லென்ஸ்களாக இருந்தாலும் அதிக பட்சமாக நாள் ஒன்றுக்கு 10 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
கான்டக்ட் லென்ஸ் வாங்குவதற்கு முன்பு, கண் மருத்துவரை அணுகி ஈர விழிக் குறைபாடு, அலர்ஜி போன்ற பரிசோதனைகளை செய்து கொண்டு, அதற்கேற்ப லென்ஸைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக