தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 நவம்பர், 2014

விலக்கப்பட்ட கனி

ம.செந்தமிழன்
அந்தக் கனியை ஆதாமும் ஏவாளும் புசிக்கும் முன்பு அவர்களுக்கு ஆடைகள் தேவைப்படவில்லை. அப்போதெல்லாம் கர்த்தர் தனது தோட்டத்தில் உலவ வரும்போது இந்த இருவரும் அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். ‘உங்களுக்குத் தேவையானவை எல்லாமே இங்கே இருக்கின்றன. எந்தவிதச் சங்கடமும் இல்லாமல் நீங்கள் வாழத் தேவையானவற்றை அளித்திருக்கிறேன். ’வேறு ஏதேனும் தேவை என்றாலும் நீங்கள் கேட்கலாம்’ என்று அவர் கூறியபோதெல்லாம் ஆதாமும் ஏவாளும் தேவைகள் ஏதும் இல்லாதவர்களாகவே இருந்தனர்.
அப்போது அவர்களுக்கும் அந்தத் தோட்டத்திலிருந்த மரங்களுக்கும் பூச்சிகளுக்கும் இன்னபிற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இல்லாமலிருந்தது. ஆதாமும் ஏவாளும் இவ்வாறு நினைத்துக் கொண்டார்கள், ‘நம் கர்த்தர் தனது சாயலில் நம்மையும் படைத்துள்ளார். ஆகவே நாம் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்’
கர்த்தர் ஆணா பெண்ணா என்ற கேள்வி இந்த இருவருக்கும் அப்போது எழவில்லை. அவரது உருவம் குறித்த வேறு கேள்விகளும் ஐயங்களும் அவர்களுக்கு எழவே இல்லை. அவர்கள் அந்த வனமெங்கும் சுற்றித் திரிந்தார்கள். அந்த வனத்திற்கு அப்போது எல்லைக் கோடுகள் இருக்கவில்லை. அவர்களது பார்வை எட்டிய தொலைவுக்கும் அவர்களுக்கான வனமாக அது இருந்தது. அவர்களது பாதங்கள் தொட்ட மண்ணெல்லாம் அவர்களுக்கே உரித்தானதான இருந்தது. அதே வனத்தில் வாழ்ந்த பிற உயிரினங்களும் இவ்வாறே இருந்தன.
பசித்த போதெல்லாம் அங்கிருந்த கனிகளைப் புசித்தார்கள். அங்கிருந்த தவளைகளுக்குப் பசித்தபோது அவை பூச்சிகளை உண்டு பசியாறின. பூச்சிகளுக்குப் பசித்தபோது சிறு புழுக்களை உண்டு பசியாறின. சிறு புழுக்களுக்குப் பசித்தபோது மண்ணில் நெளிந்த நுண்ணிய உருகொண்ட சில்லுயிரிகளை உண்டு பசியாறின. அவற்றுக்குப் பசித்தபோது தாவர மட்கின் நுண் துகள்களை விழுங்கிப் பசியாறின. தாவரங்களோ நீரையும் வானிலிருந்து இறங்கிய ஆற்றலையும் உட்கொண்டு வளர்ந்தன. மேலும் அவற்றின் வேர்கள் மண்ணில் உள்ள சில்லுயிரிகளின் கழிவுகளை அப்புறப்படுத்தும் விதமாக அக்கழிவுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தன. மான்கள் அத் தாவரங்களையும் சிங்கங்களும் பிற மாமிச உண்ணிகளும் அம் மான்களையும் உணவாகக் கொண்டன.
ஆதாமும் ஏவாளும் இவற்றைக் கண்டு கொள்ளவில்லை. எதன் உணவு எது? என்ற கேள்விக்குள் அவர்கள் நுழையவில்லை. ஏன் மான்கள் புற்களை விழுங்கி அவற்றை அழிக்கின்றன? என அவர்கள் கேட்கவே இல்லை. புற்களும் முளைத்துக் கொண்டே இருந்தன, மான்களும் பெருகிக் கொண்டே இருந்தன, புலிகளும் சிறுத்தைகளும் பெருகிக் கொண்டே இருந்தன. அழிவு என்ற கருத்தே இல்லாமல், எல்லா உயிர்களும் பெருகிய காலமாக அது இருந்தது.
வெயில் காலத்தில் வெயிலும் மழைக் காலத்தில் மழையும் காற்றுக் காலத்தில் காற்றும் பனிக் காலத்தில் பனியும் வானிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன.
நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்ற நிலை அப்போது நிலவியது.
எது சரி என்ற கேள்வியும் இல்லை, எது தவறு என்ற விலக்கலும் இல்லை.
பாவம், புண்ணியம் ஆகியவை அப்போது உருவாகவே இல்லை.
பலமும் இல்லை பலவீனமும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை துக்கமும் இல்லை, எல்லா உயிர்களும் அமைதியாக இருந்தன.
எவர் மீதும் எவருக்கும் நம்பிக்கையும் இல்லை, சந்தேகமும் இல்லை.
கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை.
குழப்பமும் இல்லை தெளிவும் இல்லை.
கோபமும் துக்கமும் அப்போது எந்த உயிரிக்கும் தேவைப்படவில்லை.
ஆதாமும் ஏவாளும் இவ்வாறான உயிர்களின் ஊடாகத்தான் திரிந்து கொண்டிருந்தார்கள்.
ஆதாம் அவ்வப்போது சொல்வான், ‘கர்த்தர் மிகப் பெரியவர். அவர் தனது சாயலில் நம்மைப் படைத்துள்ளார்’. ஏவாளும் ஆமோதிப்பாள், ‘ஆமாம் கர்த்தர் தயாள குணம் கொண்டவர். தன் சாயலில் நம்மைப் படைத்தார்’.
இடன் தோட்டம் என்று இப்போது கூறப்படும் அந்தத் தோட்டத்திற்கு அப்போது எவரும் பெயர் வைக்கவும் இல்லை. அத் தோட்டத்தின் ஊடாக ஓடிய பெருவெள்ள நதிக்கும் பேர் இல்லை. அந்நதி ஓடிச் சென்று வளப்படுத்திக் கொண்டிருந்த எந்த நிலப் பகுதிக்கும் அப்போது பெயர்கள் இல்லை. பெயர்கள் அப்போது தேவைப்படவில்லை.
கர்த்தர் தமக்கே பெயர் இல்லாமல் இருந்தார். அவர் படைத்தவர், படைப்பவர் என்பதால் அவருக்கெனத் தனியாகப் பெயர் தேவைப்படவில்லை. அப்படியே பெயர் வைத்துக் கொண்டாலும் அவரைப் பெயர் சொல்லி அழைக்கும் தேவை ஏதும் இருக்கவில்லை. ஏனெனில், தம்மால் படைக்கப்பட்ட உயிர்கள் தம்மை நினைத்த மறு கணமே அவர் அவ்வுயிர்களுக்குத் தோன்றுபவராக இருந்தார். தமக்கும் ஒரு பெயரை சூட்டிக் கொண்டு அப் பெயரால்தான் தன்னை எல்லா உயிர்களும் அழைக்க வேண்டும் என்றோ, பெயரை மாற்றி அழைத்தால் தோன்ற மாட்டேன் என்றோ அவர் கட்டளை இடவில்லை.

வனத்தில் வாழ்ந்த உயிர்கள் எல்லாம் பெயர் கூறி அழைக்காமலேயே ஒன்றாக வாழ்ந்ததால் அவற்றுக்கும் பெயர்கள் தேவையில்லை. ஆதாம் ஏவாள் என இப்போது அழைக்கப்படும் மனிதர்களுக்கும் அப்போது பெயர்கள் தேவைப்படவே இல்லை. அவர்களுக்கிடையே அன்பு இருந்தது.
ஆதாம் ஏவாள் மீதும் ஏவாள் ஆதாம் மீதும் அன்பு கொண்டிருந்ததால், பெயர் கூறி அழைத்துக் கொஞ்ச வேண்டிய தேவை இல்லை.
ஆதாம் காட்டின் தொலைவுப் பகுதிகளுக்குச் சென்றாலும் ஏவாள் அவனுடனே சென்றாள். ஆதாம் தனியே போக விரும்பினாலும் ஏவாள் அவனைத் தடுக்காதிருந்தாள். ஏவாளைச் சில நாட்கள் காணவில்லை என்றாலும் ஆதாம் அவளைக் குறித்து ஐயமோ அச்சமோ கொள்ளாதிருந்தான். காடு கர்த்தருடையது, நாமும் கர்த்தருடையவர்கள். ஆகவே தொலைவில் செல்வோரைத் தேடுவதும், அருகில் இருப்போரை விரட்டுவதும் நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, அக் காட்டில் வாழ்ந்த எல்லா உயிர்களுமே இதை அறிந்திருந்தன. எல்லா உயிர்களுக்கும் அன்பு இருந்தது. கர்த்தர் அவை அனைத்துக்கும் அன்பை அறிமுகப்படுத்தி இருந்தார். அது ஒன்றுதான் தனது இயல்பு என்பதை அவர் எல்லா உயிரினங்களுக்குள்ளும் பதித்தார்.
உணவுக்காக ஓர் உயிரினம் மற்ற உயிரினத்தை உட்கொள்வதை ‘கொலை’ என்று எந்த உயிரினமும் புரிந்துகொள்ளவில்லை.

சிறு மீன்களின் கூட்டத்தை ஒரு திமிங்கிலம் விழுங்கியது. திமிங்கிலம் பெருகி வளர்ந்தது. மீண்டும் மீன்களின் கூட்டம் கடலில் படைக்கப்பட்டது. மீண்டும் திமிங்கிலம் மீன்களை விழுங்கியது. சிறு மீன்களுக்காகப் பாசிகள் கடலுக்கு அடியிலும் படைக்கப்பட்டன. பாசிகளும் அழியவில்லை, சிறு மீன்களும் அழியவில்லை, திமிங்கிலங்களும் அழியவில்லை. மாறாக அவை பெருகிக் கொண்டுதானிருந்தன. ஆனால், அவை ஒன்றை ஒன்று விழுங்கிக் கொண்டும் இருந்தன.
இதேதான் நிலத்திலும் நடந்தது. ஓர் உயிரினக் கூட்டம் மற்ற உயிரினக் கூட்டத்தை விழுங்கியது. ஆனால், இருவகை உயிரினக் கூட்டங்களும் பெருகின.
ஆகவேதான் அந்தக் காலத்தில் ‘கொலை’ என்ற சொல்லும் பொருளும் எவ்வுயிரிகளுக்கும் தெரியாமல் இருந்தது. மரணம் என்ற சொல்லும் அப்போது இல்லை. ஆகவே மருத்துவம் என்ற கருத்தும் அப்போது இருக்கவில்லை. நோய் குறித்த கேள்விகள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருக்கவில்லை. அது அவர்களுக்கு அப்போது அறிமுகப்படவே இல்லை.

அந்த அரவத்தின் ஆலோசனைப் படி விலக்கப்பட்ட கனியை இருவரும் உண்ட பின்னர், ஆதாமும் ஏவாளும் உறங்கி எழுந்தனர்.
ஆதாம் தனது இடுப்பிற்குக் கீழே தொங்கிக் கொண்டிருப்பது ஆண் குறி என்று அறிந்தான். ஏவாள் தனக்கு இருப்பதைப் பெண் குறி என அறிந்தாள். இதற்கு முன்பும் இக்குறிகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பற்றிய கவனமும் அக்கறையும் அவர்களுக்கு இருக்கவில்லை.
ஆதாம் ஏவாளின் குறியைக் கண்டபோது ஏவாள் கூச்சப்பட்டாள். ஏவாள் தனது குறியைக் கண்டபோது ஆதாம் வெட்கப்பட்டான். இருவரும் அத்தியிலைகளைப் பறித்து இடுப்புக்குக் கீழே சுற்றிக் கொண்டார்கள். இப்போது ஆதாமும் ஏவாளும் ஒருவரை ஒருவர் வெட்கத்துடன் அச்சத்துடனும் பார்த்துக் கொண்டார்கள்.

ஆதாம் நீர் தேடி ஓடைக்குச் சென்றான். ஏவாள் உணவு தேடி காட்டின் மறு முனைக்குச் சென்றாள். ஆதாம் தனது தாகத்தைத் தணித்துக் கொண்டு திரும்பினான். ஏவாள் தனது பசியைத் தணித்துக் கொண்டு திரும்பினாள். ஆதாமுக்குப் பசித்தபோது அவன் உணவு தேடிச் சென்றான். ஏவாள் நீர் தேடிச் சென்றாள். இதற்கு முன்பு இருவருக்கும் ஒரே நேரத்தில் பசியும் தாகமும் இருந்ததை இப்போது அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.
இரவு கவிந்தபோது ஏவாள் தாமதமாகத் திரும்பினாள், ஆதாம் அவளிடம்,
‘ஏன் தாமதம்?’ எனக் கேட்டான்.
ஏவாள் ’புற்களின் மத்தியில் கால் வைக்க அச்சமாக இருக்கிறது. நச்சுப் பூச்சிகள் தீண்டுமோ எனப் பார்த்துப் பார்த்து நடந்து வந்தேன்’ என்று பதிலுரைத்தாள்.
அதற்கு ஆதாம், ‘இனி வெயில் இறங்கிய பின்னர் எங்கும் செல்லாதே’ என்றான்.
’இருட்டிய பின்னர் பசித்தால் என்ன செய்யட்டும்?’ என அவள் கேட்டாள்.
ஆதாம் பதில் யோசித்தான். ஆனால் கிடைக்கவில்லை.
முன்பெல்லாம் இரவில் பசித்தால் அவர்களது காலடியிலேயே உள்ள கிழங்கு வகைகளைக் கர்த்தர் காட்டியதையும், அதைக் கொண்டு பசியாறியதையும் இப்போது அவர்கள் இருவருமே மறந்து விட்டனர்.
ஆதாம் பதில் கூறாததால் ஏவாள் சினமடைந்தாள்.
‘பசியாறும் வழி தெரியாத நீ எப்படி எனது வருகை தாமதமானதைக் கேள்வி கேட்கலாம்?’ என்றாள் அவள்.
ஆதாம் ஆத்திரம் கொண்டான் ஏவாளின் தலைமயிரைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டான். ஏவாள் அரற்றினாள். அந்த இருளில் தரையில் உருண்டவாறு ஏதேனும் கட்டை கிடைக்கிறதா எனத் தேடினாள்.
மரத்தின் உச்சியில் படுத்துக் கிடந்த அதே நச்சு அரவம் தனது உறக்கத்தை இருவரும் தொல்லை செய்வதைக் கண்டு எரிச்சலடைந்து அவர்களை நோக்கிச் சீறியது. அந்த அரவத்தின் சீற்றத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி ஆதாமும் ஏவாளும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு ஒடுங்கினார்கள். இப்படியே இரவு முழுதும் உறங்காமல் அஞ்சிக் கொண்டிருந்தனர்.
அந்த அரவம் மீண்டும் மேலே ஏறிச் சென்று ஆழ்ந்த உறக்கத்திற்குப் போனது.

அப்போ அவர்களுக்கு அறிவு வந்தது அரவத்தின் ஆலோசனையால் அல்லவா?அக்கனி அறிவுக்களஞ்சியம் என்கிறார்கள் இல்லையா?அறிவில்லாமல் படைத்த கடவுளா அறிவு பெற வழி சொன்ன அரவமா சிறந்தவர்!??

அறிவு பெறாமல் இருந்திருந்தால் விஞ்ஞானம்,மெய் ஞானம் பிறந்திராது,ஆதாமும் ஏவாளும் மட்டுமே இருந்திருப்பார்!கடவுள் இன்னொரு ஆதாம் ஏவாளை படைக்க வேண்டியிருந்திருக்கும்,அவர்களும் பயனற்று வாழ்ந்திருப்பார்!பாம்புக்கு நன்றி!பகுத்தறிவு தந்தது அதுதானே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக