தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஏப்ரல், 2014

யாழ் தீவுகளும் சரித்திர பின்னணியும் ,,,,,,,ஒரு சிறப்பு பார்வை ,,,,பகுதி ,,02


யாழ் தீவுகள் 7 என்றும் அவற்றை //சப்த என்றால் 7 //சப்த தீவுகள் என சிறப்பு பெயர் கொடுத்தும் எம் முன்னோர்கள் சிலரும் தற்கால எழுத்தாளர் சிலரும் பல கருத்துக்களை எழுதிவைத்து இருக்கின்றார்கள் .சிலவேளைகளில் முற்காலத்தில் 7 ஆக இருந்து பின்னர் பிரிந்தும் இருக்கலாம் .ஏழாக இருந்த பொழுது எழுதிய குறிப்பை வைத்து இன்றும் ஏழு என்று எழுதிக்கொண்டு இருப்பதை பார்த்து அதில் பிழை இருந்தாலும் அப்படியே எழுத வேண்டும் என்ற விதி இல்லை .அவ்வாறான தேவையும் நாளைய சமுதாயத்துக்கு இல்லை. நிரூபிக்க தகுந்த சான்று என்னிடம் இருக்கும் பட்சத்தில் நான் அதை மறுத்தும் எனது கருத்தை வைக்க பின்னிற்பதில்லை .நாளைய சமுதாயம் சிவமேனகையும் இவ்வாறான குறிப்பை ஆதரித்தே தனது கருத்தை எழுதி இருக்கின்றார் என்ற பழி சொல்லை நான் கேட்கவும் விரும்பவில்லை .அதனால் யாழ் தீவுகள் ஏழு இல்லை இப்பொழுது மொத்தம் 9 தீவுகள் என்பதை குறிப்பிடுவதோடு அவற்றிலும் 5 தீவுகள் தான் இன்று தீவுக்கான முழுமையான வரைவிலக்கணத்தை கொண்டு இருக்கிறது என்பதையும் குறிப்பிடுகின்றேன்.ஏனைய நான்கு தீவுகளும் இன்றைய நிலையில் ஏதோ ஒரு வகையில் தரையால் இணைக்கப்பட்டு உள்ளது .நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு உள்ளது என்ற தீவுக்கு உரிய முழுமையான அர்த்தத்தில் இருந்து விலகியே இருக்கிறது .
அந்தவகையில் முதலில் சப்த தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுகளாக ,வேலணைத்தீவு ,புங்குடுதீவு ,நயினாதீவு ,நெடும்தீவு ,அனலைதீவு ,எழுவைதீவு காரைதீவு //காரைநகர் //இவற்றோடு ஏனையதீவுகளாக மண்டைதீவு ,கச்சைதீவு ,இவற்றில் மண்டைதீவும் ,வேலனைதீவும் ,காரைதீவும் ,புங்குடுதீவும் தரைவழி பாதையால் ஏதோ ஒருவழியில் யாழ்பாணத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது ,ஏனைய 5 தீவுகளும் இன்னும் நான்குபக்கமும் கடலால் சூழப்பட்டு எந்தவொரு தரை வழி பாதைகளாலும் இணைக்கப்படாத நிலையில் இருக்கிறது .

அடுத்து சப்த தீவுகள் எவை என்பதிலும் பல இடங்களில் தெளிவில்லாத கருத்துகள் இருக்கிறது ,மண்டைதீவு சப்த தீவுகளுக்குள் அடங்கின்றதா .காரை நகர் ஒரு தீவா .காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்க்காவர்துறை ஒரு தனித்தீவா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது .ஒல்லாந்தர் பிற்காலத்தில் பெயரிட்ட 7 தீவுகளாக நெடும்தீவு ,நயினாதீவு ,அனலைதீவு ,எழுவைதீவு ,புங்குடுதீவு ,காரைதீவு ,வேலணைத்தீவு ,என்பவை இருக்கிறது .இதில் வேலணை தீவுக்குள் ஒரு கிராமமாக காவலூர் வருகின்றது இந்த காவலூர் தான் பிற்காலத்தில் ஈழத்து பூர்வீக துறைமுகம் //நயினாதீவு //சம்பு கோவளம் அழிவுக்குள்ளான பின்னர் இந்த காவலூரில் துறைமுகம் ஒன்று பாவனைக்கு வந்தது அந்த வேளையில் காவலூர் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் ஊர்காவற்துறை என்று பெயர் மாற்றம் பெற்றது .ஆனாலும் இது வேலணைதீவில் அடங்கும் 10 கிராமங்களில் ஒரு கிராமம் ஆகும் .அடுத்து மண்டைதீவு இது ஒரு தனிதீவாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளது .இதை 8 தீவாக பின்னர் ஏற்றுகொள்ளபட்டு இருக்கிறது .அதனால் இது அந்த சப்த தீவுகள் என்ற 7 தீவுக்குள் அடக்கம் இல்லை .பின்னர் 1974 இல் இலங்கைக்கு இந்தியாவால் இலங்கையின் சொத்து என்று வழங்கப்பட்ட கச்சை தீவும் சேர்த்து ஈழத்தின் யாழ் தீவுகள் 9 ஆகும் .

காரைநகர் தீவா நகரா என்ற பலரது கேள்விக்கு விடையாக பின்வரும் கருத்தை முன் வைக்கின்றேன் ,தீவுகள் யாழில் இருந்து பிரிந்த பொழுது பிரிந்து காரை தீவும் உருவானது .பிரித்தானியர் ஆட்சிகாலத்தில்1869 ம் ஆண்டு அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இந்த இணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் பரிந்துரைப்பின்படி காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றி அழைக்க தொடங்கினர் .

தீவுகளில் பெரியதீவாகவும் பல கிரமாங்களை தன்னுள் அடக்கி பல வரலாற்று சிறப்புக்களோடும் விளங்கின்றது வேலணை தீவு.,இந்த தீவு யாழ் குடாநாட்டுக்கு தென்மேற்கு திசையில் உள்ளது .சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை தணதீவு எனக் குறிப்பிடுகிறது. இன்று ஆங்கில மோகமும் மேலைத்தேச மோகமும் கொண்ட எம் தமிழர்களால் இந்த தீவை லைடன் தீவு என்றும் அழைகின்றார்கள் .அதாவது ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் ஈழத்தில் பல இடங்களுக்கும் ஒல்லாந்து நகர்களின் பெயர்களை வைத்தார்கள் ,அந்தவகையில் வேலணை தீவுக்கு தெற்கு ஒல்லாந்தின் ஒரு நகரின் பெயரான லெய்டன் என்ற பெயரை வைத்தார்கள் .அது ஈழத்து பேச்சுவழக்கு தமிழில் லைடன் ஆக மாற்றம் பெற்று வழங்கப்பட்டு வருகின்றது .ஈழதேசம் அன்னியரிடம் இருந்து விடுதலைபெற்று பல பத்து ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவர்கள் திணித்த அந்நிய சொற்கள் எங்கள் நாவில் இருந்து விடுதலை பெறவில்லை .

இந்த தீவுக்கு வேலணை என்று பெயர் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது .வேல் அணைந்த இடம் வேலணை என்றும் வேலன் ஆண்ட இடம் வேலணை என்றும்,சங்க கால போர் வீரன் வேலவன் தானை நின்று போரிட்ட இடம் வேலணை என்றும் , .வேலன் என்ற ஒரு தென்னிந்திய மன்னன் கடம்பன் என்ற கடல் கொள்ளையனை துரத்தி வந்து இங்குவைத்து பிடித்து கொன்ற இடம் என்று வெண்ணிலா பெண்ணரசி என்ற நாவலில் குறிப்பிடபட்டுள்ளது .அதனால் இந்த பெயர்வந்தது என்றும் ,கருத்துக்கள் இருக்கிறது .பொதுவாக இந்துக்கள் எல்லோரும் ஏற்றுகொள்ளும் கருத்து இங்கு முருகவழிபாடு மிக சிறப்பு பெற்று இருந்ததாலும் வேல் அணைந்ததாலும் வேலணை என்ற பெயர்வந்து என்பதைத்தான் என்று கருதுகின்றேன் .

வேலணை என்ற பெயர் கொண்டு இந்த தீவு அழைக்கப்பட்டாலும் பின்வரும் 10 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு இடத்துக்கே வேலணைத்தீவு என்று பெயர்வைத்து இருக்கின்றார்கள்.அதில் வேலணை கிராமமும் ஒன்றாகும் .
1,சுருவில்
2.நாரந்தனை
3.கரம்பொன்
4.ஊர்காவற்றுறை (காவலூர்)
5.பரித்தியடைப்பு
6.புளியங்கூடல்
7.சரவணை
8.வேலணை
9.அல்லைப்பிட்டி
10 மண்கும்பான்

சுருவில் வேலணைத்தீவின் ஒரு முதன்மையான கிராமம் ஆகும் .இந்த கிராமம் வளைந்த வில் வடிவில் இருந்ததால் சுருவில் என்று பெயர் பெற்றதாக வரலாறுகள் சொல்கின்றன .இந்த கிராமத்தில் பல செல்வந்தர்கள் இருந்தார்கள் என்ற காரணத்தால் ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்காவின் உண்மை நிலை அறியாத காலத்தில் இதனை குட்டி அமெரிக்கா ,என்று அழைத்தார்கள் .இங்கு உண்மையாக தொழில் அதிபர்களும் பெரும் பணம் படைத்தவர்களும் இருக்கின்றார்கள் .அமேரிக்கா போன்று உலகெங்கும் பில்லியன் கணக்கில் கடன் வைத்து இருப்பவர்கள் இல்லை இங்கு உள்ளவர்கள் ,அதனால் நான் அந்த கூற்றை மறுக்கின்றேன் .அது ஈழத்தில் சுருவில் ஆகவே இருக்கட்டும் .இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 5 மீற்றர் உயரத்தில் இருப்பதாகவும் 2500முதல் 3000 மக்கள் வரை இங்கு வசிப்பதாகவும் தகவல்களில் அறியமுடிகின்றது

அன்னியர் வருகைக்கு முறைப்பட்ட காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் கடல் வழி வர்த்தகத்தில் தலை சிறந்தவர்களாகவும் ,சிறந்த கடல் ஓடிகளாகவும் இருந்ததாக கூறப்படுகின்றது .கடல் வழி போக்குவரத்துக்கு இங்கு ஒரு துறைமுகமும் சிறப்பாக இவர்களுக்கு உதவியது .அன்னியர் வருகைக்கு பின்னரும் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வியாபார நிறுவனங்களை உருவாக்கி தங்கள் பொருளாதாரத்தை இலங்கையில் உச்ச நிலையில் வைத்து இருந்தவர்கள் இவர்கள் .உள்ளூரில் விவசாயத்தையும் ,கடல் தொழிலையும் .முக்கிய தொழிலாக கொண்டு இருந்தார்கள் .

இங்கு வாழ்ந்த மக்களுக்கிடையில் யாழ்ப்பாண சமுகத்தின் ஏற்றத்தாழ்வு சாதி முறை ஆரம்பகாலத்தில் இருந்தாலும் பொருளாதார முறையில் பல காலத்துக்கு முன்னமே சமநிலை அடைந்த ஒரு கிராமமாக விளங்கியதால்
அந்த முறைமை மிகவும் குறைந்த கிராமமாக இந்த கிராமத்தை கூறலாம்
இங்கு ஐயனார் ,அம்மன் ,வைரவர் ,குலதெய்வ வழிபாடாக கொண்ட மக்கள் ,போர்துகேயர்காலத்தில் உருவான கத்தோலிக்க அன்னை மேரி ஆலய வழிபாட்டையும் மேற்கொண்டார்கள் .கல்வி கற்பதற்காக இங்கு 5 வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் இருந்தது .இந்த கிராமம் ஒரு கிராம சேவகர் அலகாகவே பிரிக்கப்பட்டு உள்ளது.

உலக வாழ்வியல் நீரோட்டத்தில் ஈழதமிழர்களுக்கு ஈழத்தில் நடந்த இன்னல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இங்கு வாழ்ந்த மக்களும் இன்று பலர் உலகெங்கும் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் அவ்வாறு வாழ்ந்தாலும் தாய் நிலத்தை மறவாத மழலைகளாய் இருகின்றார்கள் என்பதை பதிவு செய்து தொடர்கின்றேன் .

நாரந்தனை இதுவும் வேலணை தீவின் அகத்தில் வரும் ஒரு முக்கிய கிராமம் ஆகும் .இந்த கிராமத்துக்கு இந்த பெயர் வர காரணமாக சங்க கால போர் படை தலைவனாக நாராயணன் என்ற பெயருடையவன் தானை நின்று போரிட்ட இடம் நாரந்தனை என்று அழைக்கப்படுகின்றது .பெயர் வர வேறு தகுந்த காரணங்களும் இருக்கலாம் என்னால் அவற்றை அறிய முடியவில்லை .

இந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் ,கருதப்படுகின்றது ,மீன்பிடி தொழிலில் வருவாய் ஈட்டும் மக்களும் இங்கு இருக்கின்றார்கள், கால மாற்றத்தில் பல்வேறு பகுதிகளில் நகர்ந்து சென்று தொழில் வாய்ப்பு பெற்றவர்களும் ,தொழில் நிறுவனங்களை அமைத்தவர்களும் இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் அரசின் முக்கிய துறைகளில் பணி புரிபவர்களும் இங்கு வாழ்கின்றார்கள் .

வழிபாட்டு முறைகளில் அம்மன் ,முருகன் குல தெய்வ வழிபாட்டையும் .கத்தோலிக்க தேவாலய வழிபாட்டையும் கொண்ட மக்கள் இங்கு இருக்கின்றார்கள் .அவற்றுக்கு ஆதாரமாக ,இங்கு இருக்கும் கோவில்களான ,,,
நாரந்தனை தான்தோன்றி அம்மன் கோயில்
கர்ணன் தோட்டம் கந்தசாமி கோயில்
தம்பட்டி முத்துமாரியம்மன் கோயில்
புனித பேதுரு புனித பவுல் தேவாலயம்
திரு இருதயநாதர் தேவாலயம்
புனித லூர்து அன்னை தேவாலயம் ஆகியவற்றை குறிப்பிடலாம் ,அடுத்து கல்வி வசதிகள் பற்றி பார்ப்போமானால்
யா/நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, நாரந்தனை
யா/நாரந்தனை வட கணேச வித்தியாலயம், நாரந்தனை
யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. நாரந்தனை ஆகிய மூன்று பாடசாலைகள் இங்குள்ள பிள்ளைகளில் கல்வி வளர்சிக்கு பெரிதும் உதவுகின்றது .இந்த கிராமத்தில் நாரந்தனை வடக்கு,நாரந்தனை வட மேற்கு,,நாரந்தனை தெற்கு ,என கிராம சேவகர் பிரிவுகள் இருக்கிறது .மேலும் ஏனைய சாதாரண வசதிகள் கொண்ட இந்த கிராம மக்களும் ஈழத்தின் போரியல் சூழ்நிலைகளால் உலகெங்கும் இடம் பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது .
இவ்வாறு இடம் பெயர்ந்து வாழும் இந்த கிராம மக்களும் தாம் வாழும் தேசங்களில் கலை பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றி வருவதோடு தமது கிராம நலன்களிலும் அக்கறை உடையவர்களாக ,இருக்கின்றார்கள் .,,,,,,,,,,

கரம் தொட்டால் பொன்னாகும் வளம் கொண்ட தாய் மண்ணை கொண்ட கிராமம் தான் கரம்பொன் ,இந்த சொல் பேச்சுவழக்கில் கரம்பன் என்று சொல்லபடுவதும் உண்டு .இந்த ஊரின் மண் வளத்தால் இந்த நிலம் மரங்கள் நிறைந்த சோலையாக இருந்தகாக குறிப்புக்கள் தகவல் சொல்கின்றது .பல அறிஞர்களையும் வள்ளல்களையும் இறை பணியாளர்களையும் பெற்றெடுத்த இந்த கிராமம் .வேலணைத்தீவின் முக்கிய ஒரு கிராமம் ஆகும் .வளமான இந்த தாய் மண்ணில் வேளாண்மை செய்து பிடி அரிசி கொடுத்து பல வறியவர்கள் வாழ்வை மலர செய்தவர்கள் இந்த கிராமத்து மக்கள் என்ற ஒரு கடந்தகால உண்மை செய்தி இந்த பகுதியில் வாழும் மக்களின் பெரும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது .ஈழத்தில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்னர் இந்த இடம் குட்டி வத்திகான் என்றும் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது .

இத்தீவின் தெற்கு எல்லையில் சுருவிலும் கிழக்கில் நாரந்தனையும் ,வடக்கே காவலூர் கடலும் உள்ளது .இந்த தீவில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகவும் ,மீன் பிடி தொழிலையும் ஏனைய சிறு தொழில்களையும் செய்து வந்தனர் .இவர்கள் மிகவும் விடா முயற்சி உடைய மக்கள் என்று பெயர் எடுத்தவர்கள் .தங்கள் கிராமத்தை தாங்களே தன்னிறைவு காண வைக்கும் அளவுக்கு வரலாற்றில் வாழ்ந்தவர்கள் .

இவர்கள் வழிபட்டு முறையில் அம்மன் ,முருகன், சிவன் ,பிள்ளையார் வைரவர் ,போன்ற தெய்வங்களையும் ,கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் புனித செபஸ்தியார் ,வேளாங்கண்ணி ,மாதா ,புனித அன்னம்மாள் ,ஆகிய தெய்வங்களையும் இந்த கிராமத்தில் பல கோவில்கள் அமைத்து வழிபட்டார்கள் .

இந்து கிறிஸ்தவ மக்கள் இணைந்து வாழும் இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கற்றறிதலிலும் சமூக சேவைகள் புரிதலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மக்கள் .அதற்கு சான்றாக இந்த கிராமத்தில் தோன்றிய பல கல்விமான்களை சமூக சேவையாளர்களையும் குறிப்பிடலாம் .இவர்களில் முதன்மையாக இங்குள்ள சண்முக நாத வித்தியா சாலையை நிறுவிய மாதேவசு சுவாமிகள், இன்றைய தமிழ் உலகம் போற்றும் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற தனிநாயக அடிகள் , அக்குணாஸ் பல்கலை கழகத்தை நிறுவிய வண சகோ பீற்றர்பிள்ளை ,யாழ்ப்பான வைபவ மாலை எழுதிய குல சபாநாதன் மற்றும் ஆயர்களான ,தாமஸ் சௌந்தரநாயகம் அதி வணக்கத்துக்குரிய தியோகுபிள்ளை அதி வணக்கத்துக்குரிய எமிலியானுஸ்பிள்ளை போன்றவர்களை குறிப்பிடலாம் .மேலும் பல மக்கள் நலன் சார்ந்த அரசியல் வாதிகளும் ,பல தமிழ் பெருந்தகைகளும் இந்த மண்ணில் பிறந்து இருக்கின்றார்கள்.

இங்கு உள்ள மாணவர்களின் கல்வியில் சண்முக நாத வித்தியாசாலை ,சிறிய புஸ்பமகளிர் மகா வித்தியாலயம் ,மெலிஞ்சிமுனை றோ.க. வித்தியாலயம் ஆகியவற்றின் பங்கு அளப்பரியது .,,இந்த கிராமத்தில்
கரம்பொன் கிழக்கு,தென்கிழக்கு,மேற்கு என கிராம சேவகர் பிரிவுகள் இருக்கிறது .ஏனைய சாதாரண வசதிகளையும் கொண்டு இந்த கிராமம் விளங்கின்றது .

ஈழ போர் தந்த வடுக்களால் புலம்பெயர்ந்தவர்களில் இவர்களும் விதி விலக்கில்லை இவர்கள் புலம் பெயர்ந்து பல்வேறு தேசம் தாண்டி நின்றாலும் நேசம் கொண்ட தமிழ் மக்களின் வாழ்வுக்கும் தமிழ் மொழிக்கும் பெரும் உதவியாக இருக்கின்றார்கள்.சர்வதேசத்தில் தமிழரின் வரலாற்றை பெருமைகளை சொல்வதில் முன் நிற்கின்றார்கள் .தமது சொந்த தாய் கிராமத்தையும் மறவாமல் பல தொண்டு நிறுவனங்களை அமைத்தும் தனிபட்ட ரீதியிலும் பல சேவைகளை செய்கின்றார்கள் .

அடுத்த பகுதியில் வேலணை தீவின் ஏனைய கிராமங்கள் பற்றியும் ஏனைய தீவுகள் பற்றிய சிறப்புக்களையும் வரலாற்றின் தடத்தில் நகர்ந்து பார்ப்போம் ,,,,,,,,தொடரும் ,,,,,

நன்றியுடன் சிவமேனகை ,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக