வாய்ப்புண் ஏற்பட்டால் சரியாக சாப்பிட முடியாது, சூடான பொருட்களை எடுத்துக்கொள்ள இயலாமல் சிரமத்திற்குள்ளாகுவோம்.
வெறும் வாய்ப்புண்தானே என்று அலட்சியப்படுத்தினால் அது வாய் புற்றுநோயாக கூட மாறலாம்.
வாய்ப்புண்களின் சுற்றளவு ஒரு மில்லி மீற்றரில் இருந்து அதிகபட்சம் 10 மில்லி மீற்றர் வரை மட்டுமே இருக்கும்.
சிறிய வாய்ப்புண்கள் ஓரிரு நாட்களில் ஆறிவிடும். பெரிய புண்கள் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் ஆறிவிடும்.
சாதாரண வாய்ப்புண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில், சிறுகுழியாக காணப்படும். சிலருக்கு சாம்பல் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும்.
ஹெர்பஸ் வைரஸ் தாக்குதலால் வரும் வாய்ப்புண்கள், முதலில் கொப்புளமாக ஏற்பட்டு, பிறகு உடைந்து சாதாரண வாய்ப்புண்ணாக மாறும்.
பொதுவாக வாய்ப்புண் கன்னத்தின் உள்பக்க ஓரங்களிலும், உதட்டின் உள்பக்கமும் வரும்.
ஒரு வாரத்துக்கு மேல் வாயில் இருக்கும் புண்கள் ஆறாமல் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லது. வேறு நோய் தாக்குதலால் கூட வாய்ப்புண்கள் ஆறாமல் இருக்கலாம்.
சில பேருக்கு பற்கள் கூர்மையாக இருக்கும். இவர்கள் சாப்பிடும் போது தெரியாமல் உள் உதட்டை கடித்துவிடுவார்கள்.
இதனால் கூட வாய்ப்புண்கள் உருவாகி சில நாட்கள் நீடிக்கும். உடலில் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுச்சத்துகள் குறைந்தாலும், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் போதுமான அளவில் இல்லாவிட்டாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதவர்களுக்கும் கூட வாயில் புண் உருவாகும்.
வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
1. மவுத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிக்க வேண்டும்.
2. சூடான, காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3. வைட்டமின் குறைபாட்டால் வாய்ப்புண் வந்திருந்தால் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. புண்களில் வலி ஏற்பட்டால் அதற்குரிய ஆயின்மென்ட்டை புண்ணில் தடவலாம்.
5. ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இரும்புச்சத்து, தாதுச்சத்துகள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
6. புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
7. மதுப்பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.
8. சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும்.
9. வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக