தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 பிப்ரவரி, 2015

பக்கவாதத்தை ஏற்படுத்தும் குறட்டை! அலட்சியம் வேண்டாம்


நாம் சுவாசிக்கும் காற்றானது, நுரையீரலுக்கு செல்ல தடைபடும் போது குறட்டை ஏற்படுகிறது.
ஆனால் அந்த குறட்டை தூங்கும் போது ஏன் வருகிறது என்று தெரியுமா, தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன.
அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுகிறது, அதற்கு பெயர் தான் குறட்டை.
குறட்டை வருவதற்கான காரணம்
சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணங்கள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு.
புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.
ஆபத்துக்கள்
தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது.
அதிக உடல் எடை காரணமாக, வயிறு, கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும்.
இதனால் நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த சமயங்களில் ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும்.
பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும்.
இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும்.
தடுப்பதற்கு என்ன செய்யலாம்?
1. மல்லாக்க படுக்க வேண்டாம்.
2. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
4. தூங்கும் போது தலைப்பகுதியை ஓரளவு உயர்த்திக் கொள்ள வேண்டும்.
5. மது, புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக