பிரகஸ்பதி (ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)
ஆரிய மாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் "கடல்கொண்ட தென்னாடு" என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள், அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழரின் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளைத் தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல்பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழ் ஆர்வலர்களின் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
அ) திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், தங்களை ஆரியருடன் அடையாளங் காட்டிக்கொள்ளும் பிராமணர்கள் இந்திய நாட்டிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அந்நியர்.
ஆ) திராவிட மொழிகளைத் தாயாகக் கொண்டு உலக மொழிகள் பிறந்துள்ளன. திராவிட மொழிகளுள் தமிழ் உயர்தனிச் செம்மொழி.
இ) உலகின் சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே, இதனைத் தோற்றுவித்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உயர் சாதியினரான வேளாளர்களாவர். பதினெண் குடி வேளிரும், மூவேந்தர்களும் வேளாளர்களேயாவர்.
இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனைத் திராவிட மாயை என்பர். வேளாளரின் பெருமையை நிலைநாட்டுவதே இக்கோட்பாட்டின் முக்கிய நோக்கமாக இருப்பதனால் இதனை வேளாள மாயை என அழைப்பது பொருத்தமாக இருக்கும். வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார்.
“மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கித் தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார்.
“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...”
அடிகளார், தற்காலச் சமூக நிலைமைகளைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு இப்பட்டியலைக் கூறுகிறார். ஆனால், தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளவாறு காணப்படவில்லை. இன்று "பார்ப்பானுக்கு முந்திய பறையோன்" எனக் கூறிக்கொள்ளும் பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியன் என்றும் அழைக்கப்பட்டுப் பார்ப்பாருக்கு நிகரான சாதியாக விளங்கியுள்ளனர். மருத்துவரும் நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயில்களாக இருந்த பார்ப்பார் இம்மருத்துவரே. வட இந்தியாவில் ‘வைத்யா' என்ற பட்டத்துடன் கூடிய பிராமணரும் தமிழ் மருத்துவரும் ஒத்த மரபினர் ஆவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய மாணிக்கவாசகரும், பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். வேந்தர்களுக்கு மகற்கொடைக்குரியோராகிய இம்மரபினர் சங்ககால வாழ்வியலில் அமாத்தியர் பட்டம் பெற்ற மிக உயர்ந்த சாதியினராவர். தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த "பஞ்ச கம்மாளர்" என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது. மட்பாண்டங்கள் செய்யும் குயவர் சாதியினர் சங்க காலத்தில் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பிராமண சாதியினராவர். இவர்களை "வேளாப் பார்ப்பார்" எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
மொத்தத்தில், வெள்ளாளர்களுக்கான ஏவல் மரபினராக மறைமலையடிகள் பட்டியலிட்டுள்ள எந்த சாதியினரும் சங்க கால வாழ்வியலில் வேளாளரை விடத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்கவில்லை. இவ்வகையில் வேளாளரை உயர்த்திக் கூறுவதற்காக ஏற்றம் மிக்க பிற குடிகளைக் கீழோராகச் சித்திரிப்பது வேளாள மாயையின் வழிமுறையாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் நான்கு வர்ண சமூக அமைப்புப் பற்றி வே. கனகசபைப் பிள்ளை என்ற வரலாற்றறிஞர்(?) தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ள கீழ்க்கண்ட கருத்துகள் வேளாள மாயையின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
“இதுதான் தமிழர்களைத் தங்கள் சாதியமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ, தண்ணீர் குடிக்கவோமாட்டார்கள்.”
இதிலிருந்து தெரிவதென்ன? கனகசபைப் பிள்ளை, மறைமலை அடிகள் போன்ற பெருமக்கள், தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை இல்லை என நிறுவ முற்படுவது, வேளாளர் நாலாஞ் சாதியாகி விடக்கூடாது என்ற உயர்ந்த (கேவலமான) சாதி மறுப்புக் கொள்கையினால்தானேயன்றி வேறல்ல. தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணப் பகுப்பு முறை உண்டென்று ஏற்றுக்கொண்டால், தமிழர் அனைவரும் சூத்திரராகிவிடுவர், அதுவும் மேற்சூத்திரராகிய வேளாளரையும்விட இழிந்த கீழ்ச்சூத்திரராகிவிடுவர் என இக்கனவான்கள் கதைக்கின்றனர். உண்மையில் நான்கு வருணப் பகுப்பு முறை தமிழகத்தில் உண்டு என ஏற்றுக்கொண்டால், வேளாளர் தவிர்த்த பிற அனைத்துத் தமிழ்க் குடிகளும் மேல் மூன்று வருணத்தில் அடங்கிவிடுவர். உண்மையில் மேல் மூவராகிய பிற தமிழ்க் குடிகளின் ஆணைவழி நிற்றல் வேளாளருக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். புறப்பொருள் வெண்பாமாலை, வேளாண் வாகையில் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழி யொழுகின்று (வாகைத் திணை 10 : 165)
கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, வேளாளருக்குரிய தொழில்கள் என கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறது.
வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல்,
தெள்ளிதின்ன வாணிகம், குயிலுவம், காருகவினை, ஒள்ளியன
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு, “மேல் மூவரின் ஆணைவழி நிற்றல்” என்பதை வேளாளரின் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற தமிழ்க் குடிகளின் ஏவல் வழி நின்றுவந்த வேளாளர், களப்பிரர் கால அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றம் பெற்றுள்ளனர். இது குறித்து திண்ணை இணைய இதழில் பிரசுரிக்கப்பட்ட, "நான்கு வருணக் கோட்பாடு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை” என்ற கட்டுரையிலும், புது விசை காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்ட, “நாடும் நாயன்மாரும் மூடுதிரை வில(ள)க்கம்” என்ற கட்டுரையிலும் இக்கட்டுரையாசிரியரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றம் பெற்ற வேளாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் இன்னமும் தமிழ்ச் சமூக வரலாற்றை முடிந்த அளவு குழப்பிக் கொண்டு வருகின்றனர்.
வேளிரும் வேளாளரும்
வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாகவும் எழுதுதற்குச் சுகமாகவும் இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் உடன்படுவதில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். "வேளாண்மையாகிய உழவுத் தொழில்" செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்:
“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத்தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.)
துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை' எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல.
வேளாண்மை - உபகாரம்
தொல்காப்பியத்தில்தான் ‘வேளாண்' என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105ஆம் சூத்திரத்தில் “வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்” என்ற அடிக்கு, "தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்" என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்கு ‘வேளாண்' என்ற சொல், ‘உபகாரம்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் கூறப்படும் “வேளாண் பெருநெறி” என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், "வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க" என்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், ‘உபகாரம்' என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கலித்தொகை 101ஆம் பாடலில் “வேளாண்மை செய்தன கண்” என்ற வரிக்கு "தலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தன" என்றே உரை கூறப்பட்டுள்ளது. ‘வேளாண்மை' என்ற சொல்லிற்கு ‘விருந்தோம்பல்' என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும் ‘வேளாண்மை' என்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்:
“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள் 81)
“விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதற்கு ‘விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்று பரிமேலழகர் உரை கூறுகின்றார். பாரதி தீபம் நிகண்டு, ‘வேளாண்மை' என்ற சொல்லுக்கு "உபகாரமும் மெய்யுபசாரமும்" என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது.
உழவுத் தொழிலும் வேளாளரும்
"வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல். பொருள். 628)
முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட வேளாண் மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்' என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வேளாளருடன் ஏர் (கலப்பை) தொடர்புபடுத்தப்படுவதால் உழவுத் தொழிலுக்கும் வேளாளருக்குமான தொடர்பு நிச்சயமாகிறது.
அரசு உருவாகிய பின் சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருந்த போர் அடிமைகளாலேயே உழவுத் தொழில் உலகின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நிலமானிய முறை பற்றி தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட ஐரோப்பிய வரலாறு என்ற நூலில் டி.வி. சொக்கப்பா கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:
“நிலத்தை ஆண்டவனிடமிருந்து அரசர் பெற்றார். அரசர் தாம் பெற்ற நிலத்தில் தமக்குப் போக மிஞ்சியவற்றை நிலமானியக் கட்டுப்பாட்டு முறையில் பகிர்ந்து, மானியங்களாய் மற்றவர்களுக்குக் கொடுத்தார்...... மானியதாரர்கள் நிலங்களின் பெரும்பகுதியை மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கினர். மானியதாரர்களிடம், நிலம் பெற்றவர்கள் கீழாள்களாவார்கள். மேலும், நிலத்தைக் கீழாள்கள் உட்குடிகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். நிலத்தில் உழைத்தவர்களை அடிமை ஊழியர்கள் (serf) என வழங்கினார்கள். அவர்கள் நிலத்தை விட்டு விலக முடியாது. நிலம் கை மாறினால் அவர்களும் அதனுடன் மாற வேண்டும்.”
ஐரோப்பிய நில மானிய முறையில் கூறப்படும் கீழாள்களை உழுவித்துண்ணும் வேளாளருக்கும் (காராளர்), அடிமை ஊழியர்களை உழுதுண்ணும் வேளாளருக்கும் ஒப்பிடலாம். ஐரோப்பிய நிலப் பிரபுக்கள் வேட்டைக்குச் செல்லும்போதும், வேறு அலுவல்கள் காரணமாகப் பயணம் செய்யும்போதும், அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்து, உண்ண உணவும் கொடுத்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது கீழாள்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். தமிழ் இலக்கண நூல்களும், நிகண்டுகளும், வேளாளருக்குரிய தொழில்களில் விருந்தோம்பலை முதன்மையாகக் கூறுவதுடன் இதனை ஒப்பிடலாம்.
பொதுவாகப் போர் அடிமைகளே அவ்வாறு உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்மாந்தர் சொத்துரிமையும், மண வாழ்க்கையும் மறுக்கப்பட்டு, பண்பாட்டு அடையாளங்கள் அற்றவர்களாகவே நடத்தப்பட்டனர். ஜெர்மானியரிடையே, அரசு உருவாக்கத்தின்போது தோன்றிய கொலோன்கள் என்ற கீழ்நிலை உழுகுடிகளைப் பற்றி "குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றி" என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
“இச்சிறு நிலத்துண்டுகள் கொலோன்கள் என்பவர்களிடம்தான் பிரதானமாக விநியோகிக்கப்பட்டன. அவர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். நிலத்தோடு இணைக்கப்பட்டிருந்தார்கள். நிலங்களுடன் சேர்த்து அவர்களையும் விற்பனை செய்யமுடியும். அவர்கள் அடிமைகளல்ல. அதே சமயத்தில் சுதந்திர மனிதர்களும் அல்ல. அவர்கள் சுதந்திரமான குடிமக்களை மணக்க முடியாது. அவர்கள் தமக்குள்ளேயே மணந்து கொள்வதும் செல்லத்தக்க திருமணமாகக் கருதப்படவில்லை. அடிமை விஷயத்தில் இருந்ததைப் போலவே வெறும் காமக் கிழத்தி முறையாகவே கருதப்பட்டது.”
ஐரோப்பியக் கீழாள்கள் மற்றும் கொலோன்களைப் போன்றே வேளாளரும் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே பூமி புத்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் வேளாளர்கள் கூலிச் சேவகர்களாகவும், நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமைகளாகவும் இருந்துள்ளதைப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டில் உள்ள,
“அதலையூர் நாட்டு நாடாள்வான் கூலிச் சேவகன் திருவழுதி நாட்டு ஸ்ரீகுருகூர் வெள்ளாளன்”
என்கிற வாசகம் ஒரு வேளாளரைக் கூலிச் சேவகனாகக் காட்டுகிறது. மேலும் ஒரு கல்வெட்டு, வெள்ளாளடிமைகளில் சூடியார் எனக் குறிப்பிடுவதன் மூலம் வெள்ளாளரில் அடிமைகள் இருந்ததைத் தெளிவாக்குகிறது. கி.பி. 12ஆம் நூற்றாண்டு, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில்
“பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழ
ரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில்
ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்”
என்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிக்காக) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின் வாரக்குடிகளான வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கு நடைமுறையில் இருந்ததையும் அது பின்னர் தடைசெய்யப்பட்டதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கொலோன்களைப் போன்றே வெள்ளாளரும் திருமணச் சடங்குகள் இன்றி வாழ்ந்த நிலையைத் தொல்காப்பியம் சித்திரித்துள்ளது.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரையாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு உரை கூறியுள்ளனர்:
நச்சினார்க்கினியர் உரை
“முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அஃது இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்த்தது என்பதூஉம் தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று...”
இளம்பூரணர் உரை
“மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.”
கீழோராகிய வேளாளர், மணவினைச் சடங்குகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. நுணுகி ஆராய்ந்தால் சங்க கால வாழ்வியலில் அகத்திணைக்கு உரியோராக ஏற்றுக் கொள்ளப்படாமல், புறத்திணைக்குரியோராக வாழ்ந்த அடியோரும், வினைவலருமே பிற்காலத்தில் வேளாளர் என அழைக்கப்பட்டனர் என்பதை அறிய முடியும். அடியோரை ஐரோப்பிய அடிமை ஊழியர்களுக்கும், வினைவலரைக் கீழாள்களுக்கும் ஒப்புமைக் காட்டலாம். ஆரம்பக் காலங்களில் போர் அடிமைகள் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்ட மக்களாக நடத்தப்பட்ட நிலையே அடியோராகும். ஏவல் தொழிலில் இருந்து காலப்போக்கில் பண்பட்ட பிரிவினர் வினைவலராக ஏற்றம் பெற்று விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வினைவலரில் ஒரு பிரிவினர் திருமணச் சடங்கு அனுமதிக்கப்பட்ட அகத்தினைக்குரியோராக ஏற்றம் பெற்று உயர்குடி வேளாளராகி விடுகின்றனர்.
நச்சினார்க்கினியர் உரையில், முதல் ஊழிக் காலத்தில் வேளாளருக்கும் மணவினைச் சடங்குகள் உண்டு எனக் கூறுகிறார். போர் அடிமையாகாமல், சுதந்திர குடிகளாக வாழ்ந்த நிலையில் வேளாளருக்கு கரணம் இருந்ததை இது சுட்டுவதாகலாம். மகற்கொடை மறுத்து வேந்தர்களின் மேலாண்மையை ஏற்க மறுத்த சீறூர் மன்னர் மரபினரும், முதுகுடி மன்னர் மரபினரும் போர் அடிமைகளாக்கப்பட்ட நிலையில் அடியோராயினர். பின்னர் அடியோர், வேந்தர்களுக்கு உண்மையான ஏவலராக நடந்து கொள்வதைக் கணக்கில் கொண்டு சிறுகுடியாக அங்கீகரித்து அவர்களுக்கு மணவினைச் சடங்குகள் அனுமதிக்கப்படுகின்றன. இதனையே இரண்டாம் ஊழியில் வேளாளரும், கரணம் தவிர்க்கப்பட்டுப் பின்னர் முதனூலாசிரியர் கூறிய முறையில் கரணம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என நச்சினார்க்கினியர் கூறுகின்றார் எனலாம்.
நான்கு நிலத் தெய்வங்களையும் ஆண் தெய்வங்களாகக் கொண்டிருந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில், பெண் தலைமைக் குடிகள் அதிகம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெண் தலைமைக் குடிகளாக வாழ்ந்ததற்கான எச்சங்களை வேளாளர் சமூகத்தினரிடமே அதிகளவில் காணமுடிகிறது. நெல்லை மாவட்டத்தில் வாழும் நற்குடிவேளாளர் (சிவகளைப் பிள்ளைமார்) சாதியினரிடம், சொத்துரிமை பெண்களுக்கு உள்ளதை இன்றும் காணலாம். மிகச் சமீப காலம் வரையிலும் நாஞ்சில் வேளாளர் சாதியினரிடம் நடைமுறையில் இருந்த மருமக்கள் வழிச் சொத்துரிமை பெண் தலைமை சமூகத்தின் திரிந்த வடிவமாகும். தமிழக வேளாளரைப் போன்று, தங்களை ‘சூத்திரர்' என அழைத்துக் கொள்ளும் கேரளாவின் நாயர் சமூகத்தினர் சென்ற தலைமுறையில்கூடப் பெண் தலைமைச் சமூகமாகவே வாழ்ந்தனர். இன்று உலகில் பண்பாட்டுப் படிநிலையில் மிகவும் கீழ்நிலையில் வாழும் பழங்குடிகளிடம்கூட இத்தகைய பெண் தலைமை காணப்படவில்லை. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, பண்பட்ட சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ்ந்து வரும் வேளாளரிடம், இன்று வரையிலும் பெண் தலைமைச் சமூகத்தின் பல பண்புகள் நிலவுவது ஒரு பெரும் புதிரேயாகும்.
ஏற்கெனவே, ஆண் தலைமைச் சமூகங்களாக வாழ்ந்த குடிகள் போர் அடிமைகளாக்கப்பட்டபோது, பெரும்பாலும் பெண்களே கைக்கொள்ளப்பட்டு ‘கொண்டி மகளிர்' ஆக்கப்பட்டனர். தோற்ற குடிகளின் ஆண்கள் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது துரத்தப்பட்டனர். கைக்கொள்ளப்பட்ட பெண்டிரின் வாழ்விடங்கள் ‘வேளம்' எனப்பட்டது. வேளத்துப் பெண்களை வேளாட்டி அல்லது வெள்ளாட்டி என அழைத்தனர். இந்த அடிமைப் பெண்களின் மூலம் இச்சமூகம் தழைத்ததால், இவர்களிடையே பெண் தலைமை தோன்றிவிட்டது போலும். சூத்திரர் (நாயர்) என்றும், வேளாளர் என்றும் அழைக்கப்படும் சாதிகளிடமே மருமக்கள் வழிச் சொத்துரிமை வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணச்சடங்குகள் மறுக்கப்பட்டு, அடிமை மாந்தராக வாழ்ந்த இம்மக்களைப் புறத்திணைக்குரியோராக சங்க இலங்கியங்கள் சித்திரிப்பது இயல்பானதே. உலகம் முழுவதும் நிலவிய நிலமானிய அரசுகளில் அடிமை மாந்தருக்கு இவ்வாறு திருமணச்சடங்குகள் மறுக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. இத்தகைய அடிமை மாந்தரே உழவுத் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேள் - தலைமை
மூல திராவிட மொழியில் ‘வேள்' என்பதற்கு விருப்பம், ஒளிவிடு, தலைமை என்ற பொருள்கள் தரப்படுகின்றன. வேத மொழியில் காணப்படும் ‘ராஜா' என்ற சொல்லுக்கும் ஒளிவீசுதல், தலைமை பெறுதல், சிறப்பாயிருந்தல், தன்வயப்படுத்தல் ஆகிய பொருள்கள் உள்ளதாகக் கூறும் வரலாற்றறிஞர் ரொமிலா தாபர், ‘வேள்' என்ற சொல்லிற்கு அளிக்கப்படும் பொருள்களும் ‘ராஜா' என்ற சொல்லுக்கான பொருள்களும் ஒன்றுபட்டிருக்கின்றன என்று வலியுறுத்துவார். தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் நூற்பா 34க்கு நச்சினாக்கினியர் உரை கூறுமிடத்து “.... முதலிய பதியிற்றோன்றி ‘வேள்' எனவும் ‘அரசர்' எனவும் உரிமையெய்தினோரும்” எனக் குறிப்பிடுகின்றார். இச்சான்றுகளைக் கூறி, ‘வேள்' என்ற சொல்லும் ராஜா (அரசர்) என்ற சொல்லும் குலத்தின் தனிப்பெரும் தலைவன் என்ற ஒரே பொருளைக் குறிப்பதை ஆர். பூங்குன்றன் நிறுவுகின்றார்.
ஆனால், தமிழ் நிகண்டுகள் அனைத்துமே ‘வேளாளர்' என்ற சொல்லிற்கு நேர்ப் பொருளாக ‘சூத்திரர்' என்ற சொல்லையே குறிப்பிடுகின்றன. அரசர்களாகிய வேளிரையும், வேளத்துப் பிள்ளைகளாகிய வேளாளரையும் ஒரே வகையினராக நம்பிக்கொண்டு இன்புறுவது மிகப் பெரும் கேலிக் கூத்தாகும். ‘கஞ்சி' எனுஞ் சொல்லும், ‘கஞ்சா' எனுஞ் சொல்லும் ஒரே மாதிரியான உச்சரிப்பையே கொண்டுள்ளதைக் கொண்டு இவ்விரு பண்டங்களுக்கும் தொடர்புண்டு என யாரும் எண்ணுவதில்லை. சங்க காலத்தில் நெய்தல் நிலக் குடிகளை ‘பரதவர்' என அழைப்பர், வணிகர்களாகிய செட்டிகளுக்கும் ‘பரதர்' என்ற பட்டம் சூடுகின்றனர். இவ்விரு குடிகளும் சங்க காலத்திலிருந்தே தனித்தனிக் குடிகளாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனவே வேளிரும் வேளாளரும் ஒன்று என்பது போன்ற சொல் ஆராய்ச்சி சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவாது என்பதை அறிய வேண்டும்.
தமிழரைப் பழகுடிகளாக்கி மகிழும் மாயைகள்
ஆரிய மாயை, பார்ப்பனரை உயர்த்துவதற்காகத் தமிழ்ச் சமூகத்தை ஆரியருக்குக் கடன்பட்டதாகக் காட்ட முயல்கின்றது. இவ்வகையில் தமிழரைப் பழங்குடிகளாக்கி மகிழ்ந்த டி.டி. கோசாம்பியின் குறிப்புகளை முன்னரே பார்த்தோம்.
வேளாள மாயையோ, வேளாளரை உயர்வுபடுத்துவதற்காகப் பிற தமிழ்க் குடிகளை வேளாளருக்குக் கடன்பட்டதாகக் காட்ட முயற்சிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அனைத்து மாண்புகளுக்கும் வேளாளரே காரண கர்த்தாக்கள் என்ற அடிப்படையில் வேளாள மாயையினரின் வரலாற்றாராய்ச்சி உள்ளது. அதே சமயத்தில் "தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடான சாதிய அமைப்பு வடக்கிலிருந்து வந்த ஆரியப் பார்ப்பனரின் சூழ்ச்சியால் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது" என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. சாதியச் சமூக அமைப்பு தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இயல்பாக பரிணமித்தது என்று கருதினால், வேளாளர், தமிழரில் நாலாஞ் சாதியாகிவிடுகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காகவே சாதியச் சமூக அமைப்பின் தோற்றத்திற்கு ஆரியப் பார்ப்பனரைக் காரண கர்த்தாவாகக் காட்ட வேளாள ஆர்வலர்கள் முயல்கின்றனர். சில பிராமண ஆர்வலர்களோ "சாவு வீட்டிலும் பிணமாக இருக்க விரும்புபவனைப் போல்" இருக்கருதுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.
தமிழரில், நாலாஞ்சாதி என்ற நிலையிலிருந்து வேளாளரை மீட்க உதவும் இக்கருதுகோள் பிற தமிழ்ச் சாதிகளால் எட்ட முடியாத இடத்தை பிராமணருக்கு அளிக்கின்றது. இவ்விடத்தில் வேளாள ஆர்வலருக்கும், பிராமண ஆர்வலருக்கும் இடையில் ஒருவிதமான கள்ளக்கூட்டு உள்ளதைக் காணமுடிகின்றது.
வேளாளர், தங்களை உயர்வுபடுத்திக் கூறிக் கொள்வதில் ஆட்சேபிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்போலியான உயர்வை, பிற தமிழ்க்குடிகளைப் பழங்குடிகளாக்கிச் சாதித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. முனைவர் க. கைலாசபதியின் கருத்துகள் வேளாள மாயையினரின் இப்போக்கினை உணர்த்தும்:
“சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஒயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச் சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்தில் மெல்ல, மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசரும், தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருந்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும், தொகையிலும் சிறந்த உழவர் (மருதநிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான். புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாகவமைந்த குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே அளவு மாறுபாடு குண மாறுபாடாக உருமாறியதே சங்க கால அரசியல் நிறுவனமாகும். அவர்களை நிலக்கிழார்கள், நிலப்பிரபுக்கள் அல்லது வேளாளர்கள் என நாம் குறிப்பிடலாம்.”
சங்க காலத்திற்கு முந்திய தமிழரை டி.டி. கோசாம்பி போன்று முனைவர் க. கைலாசபதியும் பழங்குடியாகவே சித்திரிக்கிறார். இவ்வாறு பழங்குடிகளிலிருந்து வளர்ச்சியடைந்த, பண்பட்ட குடிகளை இவர்கள் வேளாளராகச் சித்திரிக்கின்றனர். வேளாளரை பண்பட்ட குடியாகக் கூறி மகிழும் மறைமலையடிகள், பிற தமிழ்க் குடிகளை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடுகிறார் பாருங்கள்:
“தமிழ்நாடு புகுந்தப் பார்ப்பனர் பண்டு தொட்டே ஊன் மறுத்த சைவ அருளொழுக்கத்தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம் பெறாமல் தம் போல் ஊன் உணவு கொள்வாரான ஏனைய இழிகுடித் தமிழருடன் மட்டுமே கலக்க இடம் பெற்று....” (மறைமலையடிகள், தமிழர் மதம் - பக். 56)
சங்ககால வாழ்வுக்கு முந்திய தமிழ் குடிகள் சாதி பேதமற்ற மிக எளிய மேய்ச்சல் வாழ்க்கை குடிகளாக இருந்திருந்தால் மட்டுமே, வேளாளர் மருதநிலத் தலைவனாக ஏற்றம் பெற்றதாகக் கதை புனைய முடியும். எனவே வேளாளரை உயர்வுபடுத்தும் நோக்கில், ஒட்டு மொத்தத் தமிழக் குடிகளுமே 2500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகளாக வாழ்ந்தனர் என்ற கருதுகோளை வேளாள மாயையினர் கொண்டுள்ளனர். இவ்வாறு, ஆரிய மாயையினரும் வேளாள மாயையினரும் ஒருசேர, சங்க கால வாழ்வியலுக்கு முற்பட்ட தமிழ் குடிகளைப் பழங்குடிகளாகத் தொடர்ந்து சித்திரித்து வருகின்றனர்.
உண்மை அவ்வாறாயின் தமிழ்ச் சமூகப் பண்பாட்டினை வட ஆரியரே வளர்த்தெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலரின் கருதுகோளே சரியானதாகிவிடும். ஆனால் தமிழ்ச் சமூகத்தைப் பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுத்ததாக நம்பப்படும் வட ஆரியச் சமூகத்தை விடச் சிறப்பான பல தனித்தன்மையுடைய பண்பாட்டுக் கூறுகளை தமிழ்ச் சமூகத்தில் காண முடிகின்றது.
உலகின் பண்பட்ட குடிகள் எவற்றிடமும் காணமுடியாத பல தனித் தன்மையுடைய பண்பாட்டுக் கூறுகளைத் தமிழரிடையே காண முடிகின்றது. தன்னை வளர்த்தெடுத்ததாகக் கூறப்படும் வட ஆரிய சமூகத்தைவிட சிறப்பான, பல மேம்பட்ட பண்புகளைத் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது எவ்வாறு என்பதை இரு மாயையினரும் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமிழரின் தனித் தன்மைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
brahaspathy@sishri.org
http://www.sishri.org/tt2.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக