தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 பிப்ரவரி, 2015

வாங்க...ஸ்பெயின் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்! (வீடியோ இணைப்பு)


ஐரோப்பாவின் தென்மேற்கு பகுதியில் அதிகளவான மலைகள் மற்றும் ஏராளமான தங்க படிகங்கள் கொண்ட அழகான நாடு “ஸ்பெயின்”.
இதன் தலை நகரம் மாட்ரிட் ஆகும். ஸ்பெயின் மக்கள் பேசும் ஸ்பானிய மொழியானது உலகளவில் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாக உள்ளது.
ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாவாசிகள் படையெடுக்கும் ஸ்பெயினில் பல அழகான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
அவற்றில் குறிப்பிட்ட சிலவற்றை பற்றி பார்ப்போம்.
அல்கம்பிரா (Alhambra)
ஸ்பெயின் நாட்டின் மிகச் சிறந்த சுற்றுலா இடமாகக் கருதப்படும் இந்தக் கோட்டை 9ம் நூற்றாண்டின் மூர் வம்ச மன்னனான முகமதின் அரண்மனையாக இருந்தது.
ஒரு காலத்தில் கிரெனடாவின் முஸ்லிம் ஆட்சியாளர்களின் இருப்பிடம் ஆக இருந்த இவ்விடம் இன்று ஸ்பெயினின், புகழ் பெற்ற இசுலாமியக் கட்டிடக்கலைப் பாணியிலான கட்டிடங்களை கொண்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.
இத்துடன் 16ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட கிறிஸ்தவத் தாக்கத்தையும் ஒருங்கே காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல் பிராடோ அருங்காட்சியகம் (Prado Museum)
உலகிலே அதிக வருகைக்களைக் கொண்ட இடங்களில் ஒன்றாகவும், உலகின் மிகப்பெரிய ஓவிய நூதனசாலைகளில் ஒன்றாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.
ஐரோப்பிய ஓவியக்கலையைக் கொண்டுள்ள உலகின் அதிசிறந்த ஓவிய நூதனசாலைகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விடம், சுமார் 7,600 ஒவியங்களையும் 1,000 சிற்பங்களையும் (sculptures) 4,800 அச்சுப்படங்களையும் 8,200 வரைதற்படங்களையும் கொண்டுள்ளது.
எருது விரட்டு திருவிழா
‘சான் பெர்மின்’ என்று அழைக்கப்படும் ஸ்பெயினின் புகழ்பெற்ற எருது விரட்டு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
இத்திருவிழாவின் ஒரு பகுதியாக ஏராளமான காளைகள் வீதியில் விரட்டப்படும். அப்போது காளைகளின் முரட்டுப் பாய்ச்சலுக்கு அகப்படாமல் ஓடி ஒதுங்குவர்.
இத்திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் கூடுவர்.
மேலும் மாலை நேரத்தில் காளைகளைக் கொல்லும் போட்டி நடைபெறும். இதற்காகப் பிரத்தியேகப் பயிற்சி பெற்ற போட்டியாளர், குதிரையின் மீதிருந்தோ அல்லது தரையிலிருந்தபடியோ காளையின் முதுகில் சிறிய கத்திகளைப் பாய்ச்சி அதனைக் களைப்படையச் செய்து கொல்வர். இவ்வாறு கொல்லப்படும் காளைகளின் இறைச்சி, பாம் ப்லோனா நகரிலுள்ள விடுதிகளில் உணவாகப் பரிமாறப்படும்.
குவெல் பூங்கா (Parc guell Barcelona)
பார்சிலோனாவில் உள்ள‌ கார்மெலோ மலையில் பார்க் குவெல் பூங்கா அமைந்துள்ளது.
1900ம் மற்றும் 1914ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பாளர் அந்தோனி கோடியினாலே வடிவமைக்கப்பட்ட இப்பூங்காத்தொகுதி கட்டப்பட்டது.
"அந்தோனி கோடியின் படைப்புக்கள்" எனும் தலைப்பில் 1984ம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.
Magic Fountain of Montjuïc
பார்சிலோனாவின் அருகே அமைந்துள்ள இந்த அழகிய நீருற்று, 1922ல் கட்டப்பட தொடங்கி 1929ல் தான் முதன்முதலில் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவாசிகளிடம் மிகவும் பிரபலமடைந்த இந்த நீரூற்று, இரவு வேலைகளில் வண்ண வண்ண விளக்குகளுடன் காட்சியளிப்பதுடன், நீரின் அசைவு அங்கு இசைக்கப்படும் இசைக்கு ஏற்றவாறும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவை தவிர Ibiza தீவுகள், Sagrada Familia என்ற புகழ்பெற்ற தேவாலயம், மேட்ரிடில் உள்ள Royal Palace என்ற எண்ணற்ற மனதை கொள்ளை கொள்ளும் வசீகர இடங்களை ஸ்பெயின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக