தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 பிப்ரவரி, 2015

யாழ் தீவுகளும் சரித்திர பின்னணியும் ,,,,,,,ஒரு சிறப்பு பார்வை ,,,,பகுதி ,,,03,,,


காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் வேலணைத்தீவின் ஒரு அதி முக்கியம் வாய்ந்த கிராமம் ஆகும் .வேலணை தீவின் ஏனைய கிராம மக்களை அன்னிய படை எடுப்புக்களில் இருந்து காக்கும் காவல் கிராமமாக இந்த கிராமம் முதன்மையில் இருந்ததால் காவலூர் என்று அழைக்கப்பட்டது .கடல்கோளின் போது யாழில் இருந்து தீவுகள் பிரிந்த வேளையில் சம்பு நகரில் இருந்த துறைமுகம் பேரழிவை சந்தித்த பின்னர் காவலூர் துறைமுகமானது . அதற்கு பின் இந்த கிராமத்தை ஊர்காவல்துறை என்ற பெயர் மாற்றி கொண்டு அழைக்க தொடங்கினார்கள் .
மகாவம்சத்தில் வழமை போல் எம் வரலாற்றை கீழ்மைபடுத்த பன்றிகள் ஏற்றிய துறைமுகம் என்று வர்ணித்து ஊறா தோட்ட என்றும் குறிப்பிடபட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடதக்கது . போர்த்துகேய மொழியில் கெயிஸ் என்றால் துறை முகம் என்று அர்த்தம் .இதை வைத்து போர்த்துகேயரால் அவர்கள் ஆண்ட காலத்தில் இந்த இடம் துறைமுகம் சார்ந்த பகுதியாய் இருந்ததால் கெயிஸ் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் .பின்வந்த ஆங்கிலேயர் அதில் தங்கள் உச்சரிப்பை புகுத்தி பின்னர் கயிற்ஸ் என்று அழைக்க தொடங்கி இருக்கலாம் . நாம் தான் ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்பதால் நாமும் நாகரீகமாக இந்த இடத்தை இன்று கயிற்ஸ் என்று அழைக்கின்றோம்.

தென்னிந்தியாவுடனும் ஏனைய தெற்காசிய நாடுகளுடனும் சில அரபு நாடுகளுடனும் கடல்வழி வர்த்தக தொடர்புகளை கொண்டு இருந்த ஈழ மக்கள் இந்த துறைமுகத்தில் இருந்து, ஆரம்பத்தில் யானைகளை ஏற்றுமதி செய்தும் ,குதிரைகள் ,மாடுகள் ,ஆடுகள் ,கால்நடைகளை மாற்றீடாக இறக்குமதி செய்ததாகவும் குறிப்புக்கள் உள்ளது .ஈழத்தை கைபற்றி ,எம்மை ஆண்ட அன்னியர்களான போர்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ,ஈழத்தில் சூறையாடிய பொருட்களை இந்த துறைமுகம் ஊடாக தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தியதாகவும் குறிப்புக்கள் உள்ளது . அன்னிய ஆட்சியாளர்கள் தங்களுக்கான உணவுபொருட்களை தங்கள் ஏனைய காலணி நாடுகளில் இருந்தும் தங்கள் நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யவும் இந்த துறைமுகத்தை பயன்படுத்தினார்கள் .அவ்வாறே ,பர்மா தற்போதைய மியான்மார் இல் இருந்து முதல் முதலில் ஆங்கிலேயர் அரிசியை இறக்குமதி செய்ய இந்த துறைமுகத்தை பயன்படுத்தியதாக குறிப்புக்களில் கூறப்பட்டுள்ளது .பிற்காலத்தில் பட்டுகோட்டை செட்டிமார் தங்கள் வியாபாரத்துக்கு இந்த துறைமுகத்தை பெருதும் பயன்படுத்தினர் .

தீவுகள் பிரிந்த காலத்தில் இருந்து 1960 ம் ஆண்டுவரை அனைத்து தீவு மக்களும் ஒன்றாக சங்கமிக்கும் இடமும் தமது யாழ் குடாநாட்டுக்கான பயணமும் காவலூர் துறைமுகம் ஊடாகவே நடைபெற்றது என்று அறியப்படுகின்றது .அன்னியர் ஆட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நீதிமன்றம் பொலீஸ் நிலையம் என்பனவும் அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வைத்திய வசதிகளும் சந்தை வசதிகளும் தீவு பகுதி மக்கள் முக்கியமாக ஒன்றுகூடும் இடம் காவலூராகவே இருந்தது .இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் வரை அதிக சுங்க வருமானம் பெறும் துறைமுகமாகவும் ,பலருக்கு வேலைவாய்பு அளித்த துறைமுகமாகவும் இங்கிருந்த துறைமுகம் விளங்கியது .

ஆதிகாலத்தில் இருந்தே இங்கு மக்கள் செறிந்து வாழ்ந்த ஊருண்டி என்ற பகுதிக்கு அண்மையில் காவலூரில் போர்த்துக்கேயர் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்தக் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது.இதைவிட பின்வந்த ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கடற்கோட்டை ,,ஹமன்ஹீல் ,, என அழைக்கப்படுகிறது.

இங்கு துறைமுகம் இருந்ததாலும் அன்னியர்கள் போர் வீரர்களாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் இங்கு வருகை அதிகமாக இருந்ததாலும் ,அந்நியர்களின் கட்டாய கலப்பு கொண்ட மக்கள் குழுமங்களும் இங்கு வாழ்ந்ததாக வரலாறுகள் சொல்கின்றன .இங்கு ஆரம்பத்தில் பெரும் நில சொந்தகாரர்களான அம்பலத்தார் வம்சத்தினர் ,ஐயனார் வம்சத்தினர் ,மற்றும் முதலியார் வம்சத்தினரும் என பூர்வீக ஆதி சைவ வம்சத்தினர் வாழ்ந்ததாகவும் புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்.இவர் கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறுவி அங்கு மக்களை வழிபாட்டுக்கு அழைத்து துரித மத மாற்றத்துக்கு உள்ளாகினார் என்ற கருத்தும் இருக்கிறது .அன்னியரின் கட்டாய மதம் மாற்றத்துக்கு மக்கள் ஆரம்பத்தில் மறுத்ததால் கட்டாய திருமணங்கள் செய்யவைத்து மதமாற்றம் செய்ததாகவும் வரலாறுகள் இருக்கிறது .போர்த்துகேயருடன் திருமண கலப்பு செய்து பறங்கியர் என்ற பெயர் கொண்டு அழைக்கும் குழும மக்கள் இங்கு கலந்து வாழ்ந்தார்கள் என்றும் குறிப்புக்கள் இருக்கிறது .இதற்கு உதாரணமாக பறங்கி தோட்டம் ,பறங்கி வளவு போன்ற இடப்பெயர்களை குறிப்பிடலாம் .

ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது.எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த 12000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊர்காவற்றுறைப் பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்க மதம் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இச்சனத் தொகை முக்கிய ஏனைய சமுகத்தினரையும் கொண்டு கணிப்பிடபட்டுள்ளது என்பதற்கு இங்குள்ள ஆலயங்கள் சான்று பகருகின்றன.இங்கு பெரும் பாலும் இங்கு இருந்த பூர்வீக ஆதி சைவ மக்கள் மதமாற்றம் பெற்றே கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டார்கள் ,என்று கருதபடுகின்றது .அதற்கு ஆதாரமாக இன்றும் பெயர்மாறாமல் இருக்கும் அம்பலர் புலம் ஐயப்பன் தோட்டம் என்பன சான்றாகும் .இங்கு மதங்களால் வேறுபட்ட சமூகத்தினர் வாழ்ந்தாலும் ,சிவன் கோவில் திருவிழா நிகழ்வுகளாய் இருந்தாலும் புனித அந்தோனியார் ,புனித மரியாள் ஆலய நிகழ்வுகளாய் இருந்தாலும் மக்கள் ஒன்றுபட்டு நின்று கலைகளை வளர்த்தார்கள் ,விசேடமாக சின்னமேளம் ,இசை நடனம் நாட்டுக்கூத்து என சகல கலைகளையும் வளர்த்தார்கள் .விசேட நிகழ்வுகளில் அண்ணாவியார்களின் நெறியாள்கையில் இங்கு நிகழும் நாட்டுகூத்தை காண ஈழத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்று சொல்லப்படுகின்றது .

இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை பாரம்பரிய தொழிலாக கொண்டு இருந்தாலும் கடல்வழி வியாபாரத்தையும் ,மீன் பிடி தொழிலையும் ,கால்நடை வளர்ப்பு ,கப்பல் கட்டும் தொழில் ,போன்றவற்றையும் ,போர்த்துகேயர் வருகைக்கு பின்னர் மேலதிகமாக நெசவு தொழிலையும் செய்து வந்ததாக அறிய முடிகின்றது .1960 ஆண்டுவரை பெரும் தொகை யாழ் மற்றும் தீவக தொழிலார்கள் இங்குள்ள துறைமுக பகுதியில் வேலைக்கு அமர்த்தபட்டு இருந்ததாக அறியமுடிகின்றது .

கல்வியில் சிறந்து விளங்கிய இந்த கிராமத்தில் பல தவப்புதல்வர்கள் உலக அரங்கில் புகழ் பெற்ற அரசியல் ஆளர்களாகவும் அறிவியல் ஆளர்களாகவும் விளங்கி இருக்கின்றார்கள் ,இவர்கள் கல்வியில் புனித மரியாள் மகளீர் வித்தியாலயம் ,புனித அந்தோனியார் கல்லூரி என்பனவும் அயல் கிராம பாடசாலைகளும் காவலூர்மக்களின் கல்வியில் பெரும் சேவை வழங்கியது .

விளையாட்டு துறையிலும் காவலூர் பற்றி சில குறிப்புகள் இருக்கிறது மாட்டு வண்டில் ஓட்டம் ,இங்கு ஒரு பாரம்பரிய கலையாகவும் வீர விளையாட்டாகவும் அன்று தொட்டு நடத்தி வந்து இருக்கின்றார்கள் .ஊர்காவற்றுறையிலிருந்து வடக்குநோக்கி எட்டாவது கல் தொலைவிலே நாய்க்குட்டியான் வாய்க்கால் என்ற இடத்தில் உள்ள பெரு வெளி கொண்ட பிரதேசத்தில் காவலூர் மக்கள் நடத்தும் மாட்டு வண்டி போட்டி வரலாற்று சிறப்புமிக்கது ,படகோட்ட போட்டியும் நீச்சல் போட்டியும் நடைபெற்று இருக்கின்றது .பிற்காலத்தில் சைக்கில் ஓட்டம் மற்றும் ஏனைய விளையாட்டு போட்டிகளும் இங்கு சிறப்பு நிகழ்வாக வருடம் தோறும் நடைபெற்று வந்திருகின்றது .

துறைமுகம் ,கோவில்கள் ,பாடசாலைகள் ,வைத்திய சாலை ,நீதி மன்றம் ,தபாலகம் ,நூலகம் ,சந்தை ,சிறு தொழில் நிறுவனங்கள் என சகல வசதிகளும் கொண்டு சிறப்பாக இயங்கிவந்த காவலூர் வாழ்ந்த மக்களும் போர் தந்த வடுக்களால் இடம் பெயரவும் புலம்பெயரவும் வேண்டிய நிற்பந்தம் 1990 களில் ஏற்பட தொடங்கியது .அன்னை மண்ணை பிரிந்து வாழும் துர்பாக்கிய நிலைக்கு அந்த மக்களும் தள்ளப்பட்டார்கள் .இடம் பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் வாழ்ந்தாலும் ,தங்கள் கலை கலாசாரம் பாரம்பரிய நிகழ்வுகளை மறவாத மக்களாக தரணி எங்கும் அவர்கள் வாழ்கின்றார்கள் .தாய் நிலத்தில் வாழும் மக்களுக்கும் தங்கள் கிராம முன்னேற்ற பணிகளுக்கும் பல்வேறு வழிகளில் அமைப்புக்கள் ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை புரிந்து, போரினால் பெரிதும் பாதிக்கபட்ட அன்னை மண்ணை மீளவும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கின்றார்கள் .

இயற்கை அழகும் ,கடல் வளமும் ,துறைமுகமும் சகல வளங்களும் கொண்ட காவலூர் மக்கள் ,கல்வி அறிவும் ,கலை நயமும் ,சமுதாய நலன்களில் அக்கறையும் கொண்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .ஈழ வரலாற்றில் காவலூரும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நிறுவி இருக்கிறது என்பதும் பெருமைபடதக்க விடயம் ஆகும் .

வேலணை தீவின் ஏனைய கிராமங்களின் வரலாற்று நிகழ்வுகளையும் சிறப்புகளையும் ஏனைய தீவுகள் பற்றிய வரலாற்று பின்னணியையும் அடுத்தடுத்த பகுதிகளில் என்னால் முடியுமானவரை ஆராய்ந்து பார்ப்போம் ,,,,,,,,நன்றியுடன் சிவமேனகை ,,,தொடரும் ,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக