தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 நவம்பர், 2014

விளையும் பயிர்களை விதையிலேயே வீணாக்காதீர்கள் (வீடியோ இணைப்பு)!


குழந்தைகளின் சிரிப்பில் தெய்வத்தை காணலாம் என்பார்கள், உண்மையில் குழந்தைகள் தான் தெய்வங்கள்.
கள்ளம் கபடம் அறியாத குழந்தைகளை மகிழ்விப்பதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நேரு அவர்கள், வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், அழகுக்குழந்தைகள் தங்களை இன்னும் அழகுபடுத்தி பள்ளிக்கு செல்வார்கள்.
தாங்கள் விரும்பும் தலைவர்கள் போல் மாறுவேடமிட்டு, பள்ளியில் நடித்துக்காட்டி பரிசையும் வெல்வார்கள்.
அன்று, இவர்களின் கொண்டாட்டத்தால் பள்ளி முழுவதும் சிரிப்பு மழை சூழும், பள்ளி மட்டுமல்லாமல் வீடுகளிலும் ஒரே கொண்டாட்ட கலவரம் தான்.
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து, பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இவர்களின் வயதில் கவலைகள் என்ற ஒன்றிற்கு இடம் இருக்காது.
வீட்டின் தாய் தந்தையரின் அரவணைப்பு, பள்ளியில் ஆசிரியர்களின் அறிவுரை, தோழ் கொடுக்கும் தோழன் என அனைவராலும் சூழப்பட்ட வாழ்க்கை வாழ்வது குழந்தைப் பருவத்திலும், மாணவப் பருவத்திலும் தான்.
இப்படி தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளும் இவர்கள், அடுத்தகட்டமாக சாதனை என்ற ஒன்றை நோக்கி பயணிக்கிறார்கள்.
ஏனெனில் சுறுசுறுப்பு, சாதிக்க துடிக்கும் எண்ணம் போன்றவை இந்த வயதில் தான் தோன்றும்.
சாதனை, அரவணைப்பு என ஒருபுறம் பாதையில் குழந்தைகள் பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் குழந்தை தொழிலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குழந்தைகள் தினமான இன்று, குழந்தை தொழிலாளர்களையும் நினைவுகூறத்தான் வேண்டும்.
ஏனெனில், குழந்தைகள் தினத்தில் அழகாக அலங்கரிக்க குழந்தைகள் ஒருபுறம், அலங்கோலமாக காட்சியளிக்கும் குழந்தைகள் என பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
விளையும் பயிர்களை விதையிலேயே வீணாக்காதீர்கள் என்பதற்கேற்ப, குழந்தைகள் தினமான இன்று, அறிவுரை, நல்லொழுக்கம் எனும் உரங்களை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வளர்ப்போமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக