எங்கள் இளம் சந்ததியினருக்கு எங்கள் பண்பாட்டின் பெறுமதி தெரிவதாக இல்லை. இதன் காரணமாக பண்பாட்டை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட எமது ஒழுக்க நெறியான வாழ்க்கை பல இடங்களில் பிறழ்வடைந்து போகிறது.
இந்நிலையில் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்த பஞ்சாங்கம் இருக்கின்ற பண்பாட்டையும் சமயச் சடங்குகளையும் வாழ்க்கை நெறி முறைகளையும் தவிடுபொடியாக்கி விடுவதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளன என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
தமிழர்கள் மத்தியில் வாக்கியம், திருக்கணிதம் என இரண்டு பஞ்சாங்கம் உண்டு. இந்த இரண்டு பஞ்சாங்கங்களும் முரண்பாடான நேர ஒழுங்குகளைத் தந்து கொண்டிருக்கிறன.
புத்தாண்டுப் பிறப்பு நேரம் இரண்டு பஞ்சாங்கத்திலும் வேறுபட்டதாக இருப்பதை இன்னமும் காணமுடிகிறது.
இத்தகைய முரண்பாடுகள் மத்தியில் கார்த்திகை விளக்கீடு தொடர்பில் வாக்கிய பஞ்சாங்கம் டிசம்பர் 5ம் திகதியே குமராலய, சர்வாலய தீபம் என்று சொல்ல, திருக்கணித பஞ்சாங்கம் டிசம்பர் 5ம் திகதி குமராலய தீபம் எனவும் டிசம்பர் 6ம் திகதி சர்வாலய தீபம் என்றும் கூறுகிறது.
இப்போது இரண்டு பஞ்சாங்கத்திலும் எது சரி என்ற கேள்வி ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினமும் நேற்றைய தினமும் குழப்பநிலையில் கார்த்திகை விளக்கீடு முடிந்து போயிற்று.
இரண்டு பஞ்சாங்கத்தின் ஆட்டத்திற்கும் ஆட முடியாது என்று நினைத்தவர்கள் இந்த வருடம் தேங்காய் எண்ணெயை மீதப்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
இன்னும் சிலர் போனால் போகட்டும் இரண்டு நாளும் விளக்கீடு செய்வோம் என்று முடிவு எடுத்தனர்.
ஏனையவர்களில் ஒரு பகுதியினர் நேற்று முன்தினமும் மறுபகுதியினர் நேற்றுமாக விளக்கேற்றி கார்த்திகை விளக்கீட்டைக் குழப்பத்தோடு நிறைவு செய்தனர். இந்நிலைமை எதற்கானது என்பது தெரியவில்லை.
தமிழர்கள் மத்தியில் இயக்கங்கள் ஒற்றுமைப்படாததன் காரணமாக தமிழ் மக்கள் பலத்த இழப்புகளைச் சந்தித்தனர். அரசியல்வாதிகள் ஒரு கொள்கையோடு செயற்படாமையினால் தமிழர்களின் அரசியல் பலம் நலிவடைந்தது.
இவற்றோடு இரண்டு பஞ்சாங்கங்களும் ஒற்றுமைப்பட்டு ஒரு பொது முடிவுக்கு வராமையால் தமிழ் மக்களின் நம்பிக்கைகள், சமயச் சடங்குகள் என்ற பண்பாட்டு அம்சங்கள் உடைந்து, சமூக ஒற்றுமையை சிதைக்கின்றன.
தமிழ் மக்கள் பஞ்சாங்கத்தையும் பல்லி சொற் பலனையும் சகுனம் பார்த்தலையும் ஒரு போதும் கைவிடப் போவதில்லை.
நிலைமை இவ்வாறாக இருக்கையில், தென் திசையில் பல்லி சொன்னால் வாக்கியத்தில் வரவும் திருக்கணிதத்தில் செலவும் என்பதாக பலன் இருக்கும் போது பொது மக்கள் என்ன செய்யமுடியும்?
எதுவாயினும் பஞ்சாங்கம் வெளியிடுவோர் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லை எனில் தமிழ் மக்களை அழித்தவர்கள் வரிசையில் இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் இடம் ஒதுக்கப்படும்.
அதேநேரம் அடுத்த கார்த்திகை விளக்கீடும் வேறுபட்ட நாட்களைக் கொண்டதாக இருந்தால் ஒரு பொது நாளைத் தெரிந்தெடுத்து பஞ்சாங்க தீபம் ஏற்றி பஞ்சாங்கம் பார்த்தல் என்ற கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது அறிவியல் கொண்ட தமிழ் இனத்தின் தார்மீகக் கடமையாக இருக்கும்.
http://www.tamilwin.com/show-RUmszCTbKZho4.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக