தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்போது என்ன எடுத்துச் செல்லப் போகிறோம்?



இந்த உடல் நிரந்தரமானது என்று நினைத்து, இந்த நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்! ஆடம்பர ஆடை- அணிகலன்கள், அலங்காரங்கள், தைலப் பூச்சு, சத்தான- சுவையான உணவு, காயகல்ப லேகியங் கள்- இப்படியெல்லாம் கவனம் செலுத்தி நிலையற்ற இவ்வுடலை வளர்க்கிறோம்.

மகாபாரதத்தில் "யக்ஷப்ரச்னம்' என்பது மிக மிக முக்கியமான பகுதி. தத்துவங்களின் வித்துப் பெட்டகம். அதில் யமதர்மராஜா ஒரு யக்ஷ உருவில் தருமபுத்திரரிடம் கேள்வி கேட்டு, லௌகீக உலகில் காணப்படும் விபரீதங்களை- ஆச்சரியங்களை- தார்மீக நெறிமுறைகளை யெல்லாம் வெளிப்படுத்துகிறார். உலகில் நடக்கும் அவலங்களை- தார்மீக அத்துமீறல் களை- நெறி மீறிய நடப்புகளையெல்லாம் நிதர்சனப்படுத்தும் விவாதமே யக்ஷப்ரச்னம்.

அதில் யமதர்மன் தர்மனிடம் ஒரு கேள்வி கேட்கிறார்- ""தருமபுத்திரரே! இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது?''

அதற்கு யுதிஷ்டிரர், ""மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே- இதைவிட ஆச்சரியமான விஷயம் ஏது?'' என்று பதில் சொல்கிறார். அது கேட்டு யமதர்மன் திருப்திப்படுகிறார்.

தமிழ் சித்தபுருஷர் பட்டினத்தடிகள் ஒருமுறை ஒரு மன்னன்முன் நிற்கிறார். மன்னன் அரியணையில் அமர்ந்திருக்க பட்டினத்து அடிகள் தரையில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது பட்டினத்தார் துறவியாக வில்லை. பெரும் செல்வந்தராக- வியாபாரியாக இருந்தார். அதன்பின் பட்டினத்தடிகள் சித்தர் நிலையை அடைந்தார். "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்றபடி தன் செல்வம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, இடையில் ஒரு கோவணம் தவிர எல்லாவற்றையும் விட்டுத் துறவியாக நிற் கிறார். அந்த நிலையில் அவர் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வந்துநின்ற மன்னர் அடிகளை வணங்கி, ""சுவாமிகளே... உங்கள் உடைமைகள் யாவற்றையும் துறந்து இப்படி இருக்கிறீர்களே. இதனால் தாங்கள் அடைந்த பயன்தான் என்ன?'' என்று கேட்டான். ""நீ நிற்க... நான் அமர்ந்திருக்க'' என்றார் பட்டினத்து அடிகள்!


திருவோட்டுடன்  முதற்  பிச்சைக்காக தன் அன்னை முன்னால் நின்ற பட்டினத்தாரை நீயா துறவி,உன்னிடம் சொத்துள்ளதே என்றவர் அவர் தாயார்!அதனால் உண்மை உணர்ந்து திருவோட்டையும் துறந்தார் அவர்!இங்கு மாறியுள்ளதே!

அடிகளார் தன் கையில் ஒரு திருவோட்டை மட்டும் வைத்துக்கொண்டு திரிந்தார். ஒரு கோவில் வாசலில் ஒரு தவ முனிவர் வெற்றுடம் பாய்ப் படுத்துக் கிடந்தார். பட்டினத்து அடிகள் அவரைப் பார்த்து, ""ஏன் இப்படி படுத்துக் கிடக்கிறீர்கள்?'' என்று கேட்க, ""ஒரு சம்சாரி நிற்கிறார். நான் படுத்திருக்கிறேன்'' என்றார் அவர்.


""சம்சாரியா... யார் சம்சாரி?'' என்றார் பட்டினத்தார்.

""நீதான்...''

""நானா! என்னிடம் உடைமை எதும் இல்லையே! எல்லாவற்றையும் துறந்து வந்துவிட்டேனே!''

""உன் கையில் ஒரு உடைமை இருக்கிறதே.''

""திருவோடு... பிச்சை வாங்கி உண்ண...''

""அது உனது உடைமைதானே?''

பட்டினத்தடிகளார் சிந்தித்தார்; உணர்ந்தார் உண்மையை! கையில் இருந்த திருவோட்டையும் விட்டெறிந்தார். உலகப்பற்றுக்கள் அனைத் தையும் துறந்து சித்த புருஷராக விளங்கினார் பட்டினத்தார். நாம் இந்த உலகியல் பற்று களுடன் ஆயிரம் பிறவிகள் எடுத்தும் பிறப்பு- இறப்பற்ற நிலையை வேண்டினோமா- இல்லையே. "புனரபி ஜனனம் புனரபி மரணம்' என்கிறாரே ஆதிசங்கரர்.

தமிழ்மறை தந்த திருவள்ளுவர் "நிலையாமை' என்று ஒரு அதிகாரம் யாத்துள்ளார்.

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்து இவ்வுலகு'

என்ற குறள் ஆழ்ந்து நோக்கத்தக்கதாகும்.

கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. உலகையே ஆள நினைத்தான் அலெக்ஸாண்டர். படை யெடுத்தான்; சமர்புரிந்தான்; பல நாடுகளை வென்றான். தான்வென்ற நாடுகள், சம்பாதித்த செல்வம், அடைந்த கீர்த்தி, மதிப்பு எல்லாவற்றையும் பற்றி ஒருமுறை நினைத்துப் பார்த்தான். "இவற்றால் நாம் அடையப் போகும் பயன்தான் என்ன? நான் இறந்து போகும்போது நம்முடன் இதையெல்லாம் எடுத்துச் செல்லப் போகிறோமா' என்ற தத்துவ உணர்வு அவனுக்குத் தோன்றியது.

அலெக்ஸாண்டரின் இறுதிக் காலம் வந்தது. அவன் மரணப் படுக்கையில் கிடக்கும்போது தன் பிரதம சேனைத் தலைவரை அழைத்துக் கூறினான்:

""நான் மரணமடையும் நேரம் வந்துவிட்டது. நான் இறந்து போனவுடன் என்னை அடக்கம் செய்யத் தயாரிக்கும் சவப்பெட்டியில், எனது இரு கரங்களும் வெளியே நீட்டும் வசதியுள்ளபடி இரு துளைகள் அமைப்பாய்'' என்றார்.

இதைக் கேட்ட படைத்தலைவன் திகைப் புற்று அலெக்ஸாண்டரை நோக்கினான். ""எதற்கென்று யோசிக்கிறாயா? நான் என் வாழ் நாளில் வென்ற நாடுகள், சொத்துகள், அரண்மனைகள், உடைமைகள் எதையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை. வெறும் கைகளுடன்தான் போகிறேன் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த ஏற்பாடு'' என்றான்.

பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்போது என்ன எடுத்துச் செல்லப் போகிறோம்? ஏதுமில்லையே! இதை மகான்கள், சித்த புருஷர்கள் எல்லாம் உணர்த்திச் சென்றுள்ளனர்.

இந்த சரீரம் நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து, பற்றுகளைத் துறந்து, தெய்வ சிந்தனையுடன் சீட்டுப் பிடிக்காமல் துரோகங்கள் செய்யாமல் வாழ்வது உங்கள் கடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக