* வியர்வை சொட்ட சமைப்பது, நீண்ட விரல் நகங்களை வைத்துக்கொண்டு சமையல் செய்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம். இதனால் சமைக்கும் உணவில் வியர்வைத் துளிகள் மற்றும் அழுக்கு சேர்வது தடுக்கப்படும்.
* சமையல் செய்யும்போது முடிந்தவரையில் காட்டன் அல்லது தளர்வான உடைகளை அணியவும். மேலும், சமைக்கும்போது கேசத்தை விரித்துப்போடாமல் 'க்ளிப்' போட்டுக்கொள்வது, தலை உறை அணிந்துகொள்வது போன்றவை உணவில் முடி விழாமல் தவிர்க்கும்.
* கிச்சனில் புழங்கும் கிளவுஸ், பிடிதுணி, டவல், டிஷ்யூ, இடுக்கி, கத்திரிக்கோல், கத்தி, கட்லெரி செட் ஆகியவற்றை குழந்தைகள் கைக்கு எட்டாத வகையில் வைக்கவும். அதேபோல ஹேண்ட்வாஷ், லிக்விட் சோப், சோப் ஆயில், ஸ்பாஞ்ச், சிங்க் க்ளீனிங் மற்றும் டாய்லெட் க்ளீங்க் பொருட்களையும் குழந்தைகளின் பார்வைக்கு எட்டாமல் வைப்பது நல்லது. மேற்கண்ட பொருட்களைப் பயன்படுத்த எடுத்திருந்து, வேறு எதாவது ஓர் அவசர வேலையால் குழந்தைகள் கைபடும் இடங்களில் மறந்தும்கூட வைத்துவிட வேண்டாம்.
* வாரம் ஒருமுறையாவது செல்ஃப்கள் உள்பட சமையலறை முழுவதையும் சுத்தம் செய்தால், பூச்சித் தொந்தரவுகள் இருக்காது. மேலும், சமையலறைப் பொருட்கள் ஏதாவது ஒன்றில் பூச்சி, செல் போன்றவை அரிக்க ஆரம்பித்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்தி விட்டால், மற்ற உணவுப் பொருட்களுக்கும் அந்த பாதிப்பு நேராமல் தடுக்கலாம். பருப்பு, தானிய வகைகள், மளிகைப் பொருட்களை வாங்கி வந்ததும் அவற்றை சிறிதுநேரம் வெயிலில் காயவைத்து பயன்படுத்துவதால் பூச்சி, செல், பூஞ்சை தாக்குதல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
* எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதால், கிச்சன் ஜன்னல்களுக்கு திரைச்சீலைகளைத் தவிர்க்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்கள் இருந்தால், அவற்றை அருகருகே வைப்பதைத் தவிர்க்கவும்.
* எப்போதும் ஐ.எஸ்.ஐ தர முத்திரை பெற்ற அடுப்பு, டியூப், ரெகுலேட்டரையே பயன்படுத்தவும். புதிய சிலிண்டரை பொருத்தும்போதும், சமையல் செய்யத் துவங்கும்போதும், சமையல் செய்து முடித்ததும் கேஸ் கசிவு ஏதாவது இருக்கிறதா, சேஃப்டி வால்வ் சரியாகச் செயல்படுகிறதா எனச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.
* சமையல் செய்து முடித்ததும் கேஸ் அடுப்பு, சமையல் மேடை உள்ளிட்ட இடங்களை உடன் சுத்தம்செய்து விடவும். மேலும், அவ்வப்போது கேஸ் அடுப்பின் இரண்டு பர்னரும் சரியா எரிகிறதா எனச் சரிபார்ப்பதுடன், வருடத்துக்கு ஒன்றிரண்டு முறையாவது அடுப்பை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது.
* எளிதாகத் தீப்பிடிக்கும் பொருட்களை கிச்சனில் வைக்க வேண்டாம். பவர்கட் நேரங்களில் கிச்சனில் விளக்கேற்றி வைப்பது, இடப்பற்றாக்குறையால் கிச்சனிலேயே சாமிப்படம் வைத்து வழிபட நேரிட்டால் ஊதுவத்தி, மெழுகுவத்தி ஏற்றி வைப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அடுக்களையில் வளர்ப்பு விலங்குகளுடன் விளையாடுவது, போன் பேசிக்கொண்டு, இயக்கிக்கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டு சமைப்பது, குழந்தைகளை சமையலறையில் விளையாடவிட்டுக்கொண்டே சமைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சமையலறைப் பராமரிப்பு
* கிச்சனில் வைக்கும் மைக்ரோவேவ் அவன், கிரைண்டர், மிக்ஸி, ஜூஸர், ஃபுட் ப்ராசஸர், டோஸ்டர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கர், வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், வாட்டர் ப்யூரிஃபையர் ஆகிய எலக்ட்ரானிக் சமையல் சாதனப் பொருட்களை ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட தரமான பொருட்களாக வாங்கினால் நீடித்த பயன்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் நல்லது. மேலும் இதுபோன்ற மின்சாதனப் பொருட்களை மிகுந்த கவனத்துடன் கையாள்வதுடன், ஈரக்கையுடன் ப்ளக், ஸ்விட்ச்சை இயக்குவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* கிச்சனுக்குள் ஃப்ரிட்ஜை வைக்க வேண்டாம். அவற்றில் கம்ப்ரஸர் கேஸ் இருப்பதால், சமையல் நேரத்தில் பிடிதுணியில் சிறிய அளவில் தீப்பிடித்தாலும் கூட திடீரென பெரிய அசம்பாவித சூழலை ஏற்படுத்தலாம். அடிக்கடி ஃப்ரிட்ஜை திறந்தால் அதிக மின்சாரம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதம் ஒரு முறை ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வது நல்லது.
* குக்கர் மற்றும் ப்ரஷர் குக்கரின் வெயிட்டை கழட்டி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். இல்லாவிட்டால் ஆவி வெளியேற வழியில்லாமல் சில சமயங்களில் ப்ரஷரின் அழுத்தம் அதிகமாகி, குக்கர் மூடி ஓபனாகி விபரீதமாகிவிடும்.
* சமைத்த பிறகு பயன்படுத்திய பொருட்களை மீண்டும் அதே இடத்தில் வைத்து எடுத்துப் பயன்படுத்தும்போது, அவசரமோ, குழப்பமோ, பதற்றமோ இல்லாமல் ஒவ்வொரு முறையும் சமைக்க முடியும்.
* தேவைக்கும் அதிகமான காய்கறிகளை ஒரே நேரத்தில் வாங்கி வைப்பதைத் தவிர்த்து, ஓரிரு நாட்களுக்கானதை மட்டும் வாங்கிப் பயன்படுத்துவதால் அவை வீணாவதும், அழுகிப்போவதும் தடுக்கப்படும். கூடவே அவற்றில் இருக்கும் சத்துகளும் வெளியேறிவிடாமல் நமக்குக் கிடைக்கும்.
* சமையலறையில் சிறிய அளவிலான முதலுதவிப் பெட்டியாவது வைத்திருப்பது சாலச்சிறந்தது. சமையல் செய்யும்போது ஏதாவது ரத்தக்காயம், தீக்காயம் ஏற்பட்டால் முதலுதவிப் பெட்டியின் உதவியால் ஆபத்தின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
* சமையலறையில் வழுக்கும் விதமாக தண்ணீர், எண்ணெய் ஏதாவது சிந்தி இருந்தால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்காமல் உடன் அதைச் சுத்தம் செய்ய வேண்டும். மறதியிலோ அல்லது வேலைப்பளுவிலோ நாமோ, வீட்டில் உள்ளவர்களோ அதில் வழுக்க நேரிட்டால் விபரீதமாகிவிடும். அதேபோல், கண்ணாடி பாட்டில்கள், பாத்திரங்கள் எளிதாக கைநழுவி உடையும் வாய்ப்புள்ளது. இவற்றைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதுடன், ஒருவேளை கண்ணாடிப் பொருட்கள் உடைந்தால் உடனே கையுறை அணிந்து சுத்தம் செய்துவிட வேண்டும்.
* எக்ஸாஸ்ட் ஃபேனை பொருத்தி சமையலறை வெப்பம் சீராக வெளியேறும் வகையில் செய்யவும். சமையலறைப் பாதுகாப்புக்கும் இது முக்கியம்.
* சமையல் செய்யும் முன்பும், செய்து முடித்த பின்பும் கைகளைக் நன்றாகக் கழுவிவிடவும். அதேபோல சமையல் செய்த சில மணிநேரங்களிலேயே சமையல் செய்த, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவிடவும். இதனால் கிருமித் தொற்றுகள், பாக்டீரியா தொற்றுகள் கட்டுப்படுத்தப்படும்.
கிச்சன் பெண்களுக்கானது என்ற வரையறை கிடையாது. எனவே, மேற்கண்ட சமையலறை பராமரிப்பு ஆலோசனைகளை இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல், இல்லத்தரசர்களும் கடைப்பிடிக்கலாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தை கிச்சனில் இருந்தே துவங்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக