தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மகாபாரதத்திலும் ராமாவதாரத்திலும் பரசுராமர்.. இது எப்படி சாத்தியம்?

பகவான் மகாவிஷ்ணு துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலனத்துக்காக எடுத்த அவதாரங்களில் 6ஆவது அவதாரம் ஸ்ரீபரசுராம அவதாரம்.
ராமாயண காலத்திலும், மகாபாரத காலத்திலும் இருந்த ஒரே அவதாரம் என்ற சிறப்பு ஸ்ரீபரசுராமன் அவதாரத்துக்கு உண்டு.
தந்தையின் வாக்கைக் காப்பாற்ற தசரதராமனின் அவதாரம் என்றால், தந்தை சொல்லை விடவும் சிறந்த மந்திரம் இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துவதற்காக எடுத்த அவதாரம் ஸ்ரீபரசுராம அவதாரம்.
புரரூரவசுக்கும் தேவலோக அழகியான ஊர்வசிக்கும் பிறந்த ஆறு பிள்ளைகளில் ஒருவன் காதி, அவனுடைய வம்சத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், அந்த வம்சத்தில் பிறந்தவர்கள் சந்திரவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இந்த காதிராஜனின் மகள் சத்தியவதி. அழகும் அறிவும் மிக்க அவளைத் திருமணம் செய்துகொள்ள பிருகுவின் பிள்ளையான ரிஷிகன் விரும்பினான்.
தன் விருப்பத்தை காதிராஜனிடம் தெரிவித்தான். ஆனால், அழகும் அறிவும் மிக்க தன் மகளை ரிஷிகனுக்கு திருமணம் செய்துகொடுக்க அவன் மனம் ஒப்பவில்லை.
எனவே, காதுகளில் ஒன்று பச்சையாகவும் மற்ற அங்கங்கள் தூய வெண்மை நிறத்துடனும் இருக்கும் ஆயிரம் குதிரைகளை தட்சிணையாகத் தந்தால், சத்தியவதியை மணம் முடித்துத் தருவதாக நிபந்தனை விதித்தான்.
ரிஷிகன் வருணதேவனை பிரார்த்தித்து அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான்.
இதைக் கண்டதும் காதிராஜன், தான் சாத்தியம் இல்லாதது என்று நினைத்த காரியத்தை செய்து முடித்த ரிஷிகனுக்கு இனியும் தன் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கவில்லை என்றால் வார்த்தை தவறியதாகும் என்று நினைத்து, சத்தியவதியை ரிஷிகனுக்கு மணம் முடித்துத் தந்தான்.
சிலகாலம் சென்றதும் சத்தியவதிக்கு உத்தமமான தவத்தில் ஆர்வம் மிக்க மகன் பிறக்கவேண்டும் என்று விரும்பினாள்.
இதேசமயம் சத்தியவதியின் தாய்க்கும் தனக்கு பராக்கிரமம் நிறைந்த பிள்ளை பிறக்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.
இருவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற எண்ணிய ரிஷிகன், ஒரு யாகம் செய்தான். உத்தமமான பிள்ளை பிறக்க மந்திர உச்சாடனம் செய்து ஒரு கவளம் அன்னப் பிரசாதம் எடுத்துக்கொண்டான்.
பிறகு பராக்கிரமமான பிள்ளை பிறக்கவேண்டும் என்று மந்திர உச்சாடனம் செய்து ஒரு கவளம் அன்ன பிரசாதம் எடுத்துக் கொண்டான்.
உத்தமமான பிள்ளை பிறக்கச் செய்யும் அன்ன பிரசாதத்தை தன் மனைவிக்கும், பராக்கிரமமான பிள்ளை பிறக்கச் செய்யும் அன்ன பிரசாதத்தை தன் மாமியாருக்கும் கொடுத்தான்.
தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான். ரிஷிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார்.
சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி பையனாகப் பிறந்தார்.
அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன்.
இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன்.
ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்று போற்றி வணங்கும் கற்பரசி.
தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும் என்பாள். அது குடமாக மாறும்.
பின்பு அதில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வருவாள். அந்தத் தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.
கேகய தேசத்து மன்னனான கிருதவீர்யனின் மகன் கார்த்தவீர்யாஜுனன். இவன் ராவணனையே போரில் வென்று சிறைப் பிடித்தவன். அவன் ஒருநாள் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான்.
திரும்பும்போது ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் அவர்களுக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்தார்.
காட்டில் வசிக்கும் முனிவருக்கு தெய்வப் பசுவான காமதேனுவின் உதவியால்தான் அனைத்தும் அவருக்குக் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான்.
அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான்.
முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன்தான் அதைக் கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.
இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார்.
கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான்.
அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார்.
பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.
அரசன் என்பவன் தெய்வத்துக்குச் சமம் என்பதால், கார்த்தவீரியன் செய்த தவற்றை மறந்து மன்னிக்காமல் கொன்ற பாவம் தீருவதற்காக திருத்தல யாத்திரை செல்லுமாறு கட்டளை இட்டார்.
பரசுராமரும் ஒரு வருடகாலம் தீர்த்த யாத்திரை சென்றார். அவர் பல புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்தார்.
பிள்ளை நல்லபடியாக தீர்த்த யாத்திரை செய்துவிட்டு வந்ததால் ஜமதக்னியும் ரேணுகா தேவியும் பரம திருப்தி அடைந்தனர்.
ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள்.
இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். அவ்வளவில் அவளுடைய கற்பு நெறி தவறியது. கையில் சேர்த்து பிசைந்த மண் குடமாக மாறவில்லை.
நடந்ததை அறிந்த ஜமதக்னி முனிவர், தன் பிள்ளைகளை அழைத்தார். ரேணுகா தேவியை கொல்லும்படி சொன்னார். மற்ற பிள்ளைகள் தயங்கிய நிலையில் பரசுராமர் தாயை கொன்றார்.
தாயின் தலையுடன் சகோதரர்களின் தலைகளும் பரசுவால் தாக்கப்பட்டு கீழே விழுந்தன.
தன் சொல்லை மந்திர வாக்காகக் கொண்டு காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டுப் பார்த்து, '' ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார்.
பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்னைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும்.
அத்தோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார்.
ஜமதக்னியும் அப்படியே அருளினார். இந்நிலையில் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள்.
அதனால் பழிக்குப் பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருந்தார்கள். ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான்.
ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர்.
ஜமதக்னி முனிவரின் சிரசை வெட்டி வீழ்த்தினர். நடந்ததை அறிந்த பரசுராமர், ''கொடிய குணம் கொண்ட க்ஷத்திரிய வம்சத்தை அடியோடு அழிப்பேன்'' என்று சபதம் செய்தார்.
அப்படியே கார்த்தவீர்யாஜுனனின் பிள்ளைகள் அனைவரையும் கொன்றார்.
தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்து ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி திக்விஜயம் செய்து வேரறுத்தார்.
அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார்.
பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே.
மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரிய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.
ராமாவதாரத்தில் பரசுராமர்
ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார்.
தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், ராமரை ஆசிர்வதித்துவிட்டுச் செல்கிறார்.
மகாபாரதத்தில் பரசுராமர்
பரசுராமர் கர்ணனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான்.
காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய தொடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே வேதனை. அவன் தொடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது.
கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். நடந்ததைப் பார்த்து, ''வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது.
நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு'' என்று வார்த்தைகளில் சினம் பொங்கக் கேட்டார் பரசுராமர்.
கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார்.
கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார்.
அந்த சாபத்தை குருக்ஷேத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக