ஆனாலும், பித்தப்பைக் கல்லுக்கான காரணம் என்ன என்று மிகத் துல்லியமாக இன்றும் நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. நம் ஜீரண மண்டலத்தின் தன்மையே ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் போன்றவற்றால் குழம்பிப்போய் இருக்கிறது. அதோடு, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்து உடல் மெலிவது, நார்ச்சத்து, மக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவது... என பித்தப்பை அழற்சிக்கும், கல்லுக்கும் பல காரணங்கள். `தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப் புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் பித்தக்கல் பிரச்னைக்கு பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் வயிற்றுவலிக்கான காரணத்தை சோதித்தறிந்து, அதற்கேற்ற சிகிச்சை பெறுவதே புத்திசாலித்தனம்.
வயிற்றுவலிக்கான காரணங்கள்!
* நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.
* இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்கலாம்.
* நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.
* விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.
* பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.
இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு சோடா குடிச்சா, சரியாகிடும்’, என்ற அலட்சியமும், ‘ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்.
வயிற்றுவலி... வருமுன் காக்க...
* முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடல் வாதத்தைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டாம். அதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள்.
பித்தைப்பைக் கல் வராமல் தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் கொடுக்காமல் இருக்கவும், பின் வரும் வழிகள்...
* கரிசலாங்கண்ணி, மலச்சிக்கலை நீக்கி, பித்தத்தைத் தணிக்கும் மூலிகை. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணிக் கீரையை விழுதாக அரைத்து, இரண்டு சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம்.
கீழாநெல்லி
* ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லிச் செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.
* சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சைச் சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொன்றாக ஊறவைக்க வேண்டும்) வெயிலில் நன்கு உலர வைக்கவும். அதை மிக்ஸியில் நன்கு பொடித்து, காலையில் இரண்டு டீஸ்பூன், மாலையில் இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தத்தைத் தணிக்கும்; கல் வராமல் தடுக்க உதவும். பித்தப்பைக் கல் உள்ளவர்கள் தலைக்கு குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக