தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 டிசம்பர், 2016

தமிழனின் பெருமையை உலகறியச் செய்த அரிய அடையாளம் கண்டுபிடிப்பு (படங்கள் இணைப்பு)

தமிழனின் பெருமையை உலகறியச் செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் சிலை அண்மையில் தமிழ்நாட்டு தொல்லியல் ஆய்வாளர் திரு செல்வராஜ் நாயகவடியாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரு செல்வராஜ் 1974 ஆம் ஆண்டுமுதல் கல்வெட்டு ஆய்வுகளை செய்துவருவதுடன் தனது புதிய தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வுகள் தமிழ் மக்களையும் தமிழர் வரலாற்றைக் கற்பதில் ஆர்வமுள்ள மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதை உயரிய நோக்காகக் கொண்டவர்.

ராஜ ராஜனின் சிலை கண்டுபிடுப்பு தொடர்பான செய்தியை பார்க்கும் முன் அம் மன்னனின் பெருமையைப் பற்றி அறிவது பொருத்தமானது.

பிற்கால சோழர் வரலாறில் ராஜராஜனின் காலம் (கி. பி 985 � கி. பி1014 ) பொற்காலமாக பார்க்கப்படுவதுடன் தமிழனின் வீரத்தை சோழநாட்டுக்கு வெளியே பண்டைய தமிழகத்துக்கு மட்டுமல்லாது கடல்கடந்து ஈழநாட்டடையும் கைப்பற்றி மும்முடி சோழமண்டலம் என நிறுவி ஆண்ட பெருமை அருண்மொழிவர்மன் என்றழைக்கப்பட்ட ராஜராஜனைச் சாரும். அத்துடன் மட்டுமன்றி பெரிய கப்பற்படையை அமைத்து அன்று கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசிய தீபகற்பம்வரையும் தனது மகனான ராஜேந்திர சோழன் ஆட்சியை விரிவுபடுத்தவும் காரணமாக அமைந்தார்.

“குடவோலை” எனப்படும் தேர்தல் முறைமையில் கிராமசபைகளூடாக சுயாட்சி முறைமையும் தனது ஆட்சிக்குட்பட்ட நிர்வாக அலகுகளை முறைமையான ஆளுகைக்குள் கொண்டியங்க மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளை வளநாடுகள் என வகைப்படுத்தி (10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது).

அவ் வளநாடுகளை கோட்டங்களாக வகுத்து அக்கோட்டங்களை கூற்றங்கள் என்றழைக்கப்படும் பல கிராமங்களின் தொகுப்புக்களினூடாக சிறப்பாக ஆண்டார். மேலும் நிலசீர்திருத்தத்தை தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடடார். அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும்.

தஞ்சை பெருங்கோவில்
rajarajans_statue
மேலும் இன்றைய உலகமும் வியக்கதகும் வகையில் தமிழனினின் கட்டிட மற்றும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டினார். 216அடி (66மீ) உயரம் கொண்ட விமானமும் அவ்விமானத்தின் உச்சியில் அழகி மூதாட்டியால் வழங்கப்பட்ட 80 டன் எடையுள்ள கல்லை அவளது பெயர்பொறித்து வைத்து சிறப்பித்துள்ளார். அத்துடன் அக்கோவில் கட்டிட பல்வேறுவகையிலும் உதவிபுரிந்தவர்களின் பெயர்களையும் அவர்களால் வழங்கப்பட்ட கொடையையும் கல்வெட்டுகளாக அமைத்து சிறப்பித்த பெருமையும் இவரைச்சாரும்.

தனது தாயின் நினைவாக ஈழமண்டலத்தில் பொலநறுவையில் வானவன்தேவி மாதேஸ்வரம் என்னும் சிவாலயத்தை அமைத்துள்ளார். அத்துடன் ஈழத்திலுள்ள திருக்கீதேஸ்வரத்தை கருங்கற்களினாலான பெரும்கோவிலாக வடிவமைத்து அதற்கு தனது பெயரான ராஜ ராஜேஸ்வரம் என்ற பெயரைச் சூட்டினார்.

இவ்வாறான பல சாதனைகளை செய்த ராஜ ராஜ சோழன் இறந்த பின்னர் (ராஜராஜ சோழனின் இறுதி ஆட்சி ஆண்டு 29, இவர் மறைந்த பொழுது ராஜேந்திரனின் மூன்றாவது ஆட்சி ஆண்டு) அவருடைய ஒரே மகனான 1ஆம் ராஜேந்திர சோழன் தனது தந்தைக்கு இறுதிச் சடங்கை மாமன்னன் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியும் தனது தாயுமான உலக மகாதேவியுடன் சேர்ந்து திருவலஞ்சுழி எனும் ஆலயத்தில் செய்ததாக கல்வெட்டு சாசனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள சிலை ராஜராஜனின் சிலைதான் என்பதை தெளிவுபட நிறுவியுள்ளார்.

இங்குள்ள கல்வெட்டில் ராஜேந்திரனின் மூன்றாவது ஆட்சியாண்டில்தான் ,மறைந்த தன் தந்தை ராஜராஜ சோழரின் இறுதிச்சடங்கை(10 அல்லது 16 அல்லது 21 நாள் நடத்துவது ) இங்கே நிறைவேற்றி இருக்கிறான் என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகளே சான்றாகும்.

எள் மலையில் புகுந்து இந்த இறைவனை பொற்பூக்களால் வழிபட்ட செய்தி கல்வெட்டாக உள்ளது. எள் சம்பந்தப்பட்ட சடங்கு என்றால் அது நீத்தார் வழிபாடாகத்தான் இருக்க முடியும்.

திருவலஞ்சுழி, அனைவரும் அறிந்த சுவாமிமலைக்கு தெற்கில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரை தலம்.1300 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது.

ராஜராஜனின் கொள்ளு தாத்தா முதற் பராந்தகனின் கல்வெட்டு தொடங்கி சோழ வம்சத்தின் கடைசி மன்னன் மூன்றாம் ராஜராஜன் வரை கல்வெட்டு சாசனங்கள் உள்ளன. சோழர்களின் கல்வெட்டு மட்டுமே உள்ளன.தற்கால வழக்கில் வெள்ளை பிள்ளையார் கோயில் எனப்படுகிறது.

கபர்தீஸ்வரர் கோயில் ,முன்னாளில் திருவலஞ்சுழி உடைய மகாதேவர் கோயில் என்றுதான் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது.
rajarajans_statue01
தான் கண்டுபிடித்தது மாமன்னன் ராஜராஜனின் சிலையே என ஐயம்திரிபுற எடுத்துக்காட்டிட திரு செல்வராஜ் பின்வருமாறு கூறுகின்றார்.

“திருவலஞ்சுழி கோயில் வளாகத்தில், கிழக்கு நோக்கிய ராஜா கோபுரம் தாண்டினால் இடதுபுறம் ஒன்றும் வலது புறம் ஒன்றுமாக இரண்டு சிறிய கோயில்களை பார்க்கலாம்.இரண்டுமே மாமன்னன் ராஜராஜ சோழனின் பட்டத்தரசி தந்தி சத்தி விடங்கியரான உலகமகாதேவி கட்டியவை. இடது புறம் -தென்புறம்-உள்ளது க்ஷேத்திரபாலர் கோயில்.

இவர் பைரவரின் ஒரு வடிவம்.இதே போன்ற சிலை தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது. வலதுபுறம்-வடபுறம்- பிள்ளையார் கோயில்,இதன் எதிராக திருக்குளம்,ஜடா தீர்த்தம் என்கிற கங்கை தீர்த்தம்.பைரவர் கோயிலுக்கும், அதற்கு மேற்கில் உள்ள ஏகவீரி அம்மன் கோயிலுக்கும் ,ராஜராஜன், ராஜேந்திரன், உலகமகா தேவி, வானவன் மகாதேவி,ராஜராஜனின் இன்னொரு மகள் நடுவிற் பெண்டுகளான மாதேவடிகள்,ராஜராஜனின் மாமியார் ,பணிப்பெண்கள் என்று ஏராளமான கொடைகள் வழங்கியிருக்கிறார்கள்.அவ்வளவு முக்கியத்துவம் பெற்ற கோயில்.

ராஜேந்திரசோழன் உருவச்சிலை

இங்கு உள்ள கல்வெட்டே ராஜராஜனில் சிலையை நாம் அடையாளம் காண காரணமானது. அக் கல்வெட்டு, ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு, 221 வது நாள் கல்வெட்டு. இகல்வெட்டில், ராஜேந்திர சோழன் இங்கு தில பருவதம் புக்கருளி, பைரவரை பொற் பூக்களால் அர்ச்சித்து வழி பட்டதாக பதிவு செய்திருக்கிறான்.

திலபர்வதம் என்றால் எள் மலை.எள் மலை புகுந்து என்று குறிப்பிடுவதால் , தனது தந்தைக்கு இங்கு இறுதி சடங்குகளை செய்திருக்கவேண்டும் .இங்கே தன் தந்தையின் சிலையை வடித்து ,அதற்க்கு நீத்தார் கடன் கழித்தபின் அச் சிலையை இங்கேயே பிரதிஷ்ட்டை செய்து நித்ய வழிபாட்டில் வைத்திருக்கிறான்.

இந்த சிலைதான், வரலாற்று உலகு இதுவரை தேடி கொண்டிருந்த ,மாமன்னன் ராஜராஜ சோழரின் சிலை. தன்னுடைய 1031 வது ஆட்சி ஆண்டு விழாவின் போது தன்னை வெளிபடுதிகொண்டுள்ளார்”என்று கூறுகின்றார்.

மேலும் தன் தந்தை ராஜராஜ சோழனுக்கு சிலை அமைத்து நாள்தோறும் வழிபாடு இயற்ற வகை செய்த ராஜேந்திர சோழன் தானும் தந்தையை வழிபடும் விதமாக ,அமைக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் சிலை, ராஜராஜன் சிலைக்கு எதிரில் உள்ள சண்டிகேஸ்வரர் கோயில் கோட்டத்தில் உள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்.

இவரின் இவ்வரிய கண்டுபிடிப்பு இந்திய தொல்லியல் துறையின் இன்னுமொரு சாதனை மட்டுமன்றி உலகத்தமிழர் அனைவராலும் பாராட்டிடப்படவேண்டிய ஆய்வாகும்.
rajarajans_statue02
பட உதவி: ஆய்வாளர் திரு செல்வராஜ் நாயகவடியார்
12 Dec 2016
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1481537627&archive=&start_from=&ucat=1&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக