தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 டிசம்பர், 2016

கணுக்காலில் வலி... நிவாரணம் என்ன?


அடிக்கடி கணுக்காலில் வலி, குதிகாலில் வலி ஏற்படுகிறதா? `நீங்க அதிக எடையோட இருக்கீங்க. அதுனாலதான் வலி ஏற்படுது’ என்று நெருங்கியவர்கள் சொல்கிறார்களா? இது முழுக்க உண்மை இல்லை. உடல் எடை அதிகமாக இருப்பதால்தான் கணுக்கால் வலி ஏற்படும் என்று இல்லை. கால்வலி ஏற்பட நாம் நடக்கும் தரைகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ரமேஷ் குமார். மேலும் என்னென்ன காரணங்களால் கணுக்காலில் வலி ஏற்படும், அதற்கான தீர்வுகள் குறித்து விளக்குகிறார்.

காலை நேரத்தில், நீண்ட நேரப் பயணத்தில், அதிக நேரம் அமர்ந்து இருந்து பின் எழுந்திருக்கும்போது... என வெவ்வேறு சமயங்களில் குதிகால் தசைநார் (Achilles Tendon) பகுதியில் வலியும் வீக்கமும் ஏற்படும். பொதுவாக, அதிகக் குளிர்ச்சியைப் பாதம் உணரும்போது, Achilles Tendon வீக்கம் அடையும்.

வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்...

குதிகால், குளிர்ச்சியான உணர்வை அடைந்தவுடன் சீரான ரத்த ஓட்டம் தடைப்படுகிறது.
நம்முடைய உடல் எடையை, முழங்கால் மூட்டு மற்றும் தசை மூட்டும் தாங்குகிறது. இதற்கு, அதிக உடல் எடையும் ஒரு முக்கியக் காரணம்.
வலி ஏற்படும் பகுதிக்குத் தொடர்ந்து வேலைப்பளு கொடுப்பதாலும் வீக்கம் ஏற்படும்.
குளிர்ச்சியை தவிர்க்கும் வழிமுறைகள்...

குளிர்ச்சியான தரைப்பகுதியை அதிகமாகப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். குளிர்ந்த தரைப்பகுதியில் செருப்பு அணிந்து நடக்க வேண்டும்.
குளிர்காலம் மற்றும் இரவு நேரங்களில் வீட்டுத் தரையில் விரிப்பைப் பயன்படுத்தலாம்.
தினசரி இளஞ்சூடான நீரில் குளிக்கலாம்.
வலியைச் சரிசெய்யும் முறைகள்...

வெந்நீரில் சிறிது உப்புச் சேர்த்து, அதில் துணியை நனைத்து, குதிகால் பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால், வலியும் வீக்கமும் குறையும்.
டிரை ஹீட் முறை (Dry Heat)... கிராமங்களில் பயன்படுத்தப்படும் பழைமையான முறை. செங்கல்லைச் சூடுசெய்ய வேண்டும். அதன் மேல் சூடு பொறுக்கும் அளவு தடிமன்கொண்ட துணியை வைக்க வேண்டும். பிறகு, வலி இருக்கும் காலை, துணியின் மேல் வைத்து அழுத்த வேண்டும்.
நகரங்களில் டிரை ஹீட் முறை, தோசைக்கல் அல்லது இரும்புப் பாத்திரத்தின் மூலம் செய்யப்படுகிறது. தோசைக்கல் அல்லது இரும்புப் பாத்திரத்தைச் சூடுசெய்ய வேண்டும். அதன் மேல், சூடு பொறுக்கும் அளவு தடிமன்கொண்ட துணியை வைக்க வேண்டும். பிறகு, வலி இருக்கும் காலை, துணியின் மேல் வைத்து அழுத்த வேண்டும்.
வலியைத் தடுக்கும் முறைகள்...

கணுக்கால்வலியைத் தடுக்க இரவு படுப்பதற்கு முன்னர், காலையில் குளிப்பதற்கு முன்னதாக உள்ளங்கால்களுக்கு தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுதல் அவசியம்.
கடினமான காலணியைத் தவிர்த்து, மிருதுவான காலணியை உபயோகிக்கலாம். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்துவிட்டு, மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.
வஜ்ராசனம், உஷட்டிராசனம், சர்வாங்காசனம், ஹலாசனம், சிரசாசனம் போன்ற ஆசனங்களை யோகா நிபுணரிடம் கற்றப்பின் தினசரி செய்துவந்தால் கணுக்கால்வலி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
உடல் எடையை கட்டுக்குள் வைக்க, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக