தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 டிசம்பர், 2016

கணையும் யாழும்!



ஒருமுறை திருவள்ளுவர் வீதியால் நடந்து போனார். திடீரென்று மழை வந்து விட்டது. வள்ளுவப் பெருமகனார் ஒரு மர வேலை செய்யும் கூடத்தில் ஒதுங்கினார். அங்கே தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

சிலர் மூங்கில் மரங்களை வாளால் அறுத்து சமச்சீரானதும் வளைவற்ற மிகவும் நேரானதுமான மெல்லிய கோல்களாகச் செய்து கொண்டிருந்தார்கள். சிறிது வளைந்திருந்தாலும் உபயோகம் அற்றவை எனக் கழிக்கப்பட்டன சில மூங்கில் சட்டங்கள்.

வேறு சிலர் மாமரத்துக் கிளைகளில் பிறை போல வளைந்த பகுதிகளை மட்டும் வாளால் அறுத்து எடுத்துக் கொண்டு நேரிய பகுதிகளை தேவையற்றன என்று கழித்து வைத்தனர்.

இரு வேறு பட்ட அவர்களின் செய்கைகள் வள்ளுவரை வியப்பில் ஆழ்த்தின. உடனே அவர் கூடத்தில் இருந்த தலைவனிடம் அதுபற்றிக் கேட்டார். அவனும் சுவாமி! மூங்கில்கள் போர்களிலே பாவிக்கப்படும் அம்புகள் செய்வதற்காக நேர் பார்த்து எடுக்கப்படுகின்றன. சிறிது வளைத்திருந்தாலும் இலக்குத் தவறிப் போய்விடும். வளைந்த மாங்கிளைகள் யாழ் என்னும் இசைக்கருவி செய்வதற்காக அவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகின்றன. வளைந்த கிளை இல்லாவிட்டால் யாழின் அழகு கெட்டுவிடும். என்றான்.

மழை விட்டதும் வள்ளுவர் வீடு வந்தார். அவர் மனதில் அம்பும் யாழுமே வந்து போயின. பார்வைக்கு நேராக தெரியும் அம்பு கொலை என்னும் கொடிய செயலைச் செய்கிறது. ஆனால் வளைந்த உருவமுடைய யாழ் இசையால் மனங்களை மகிழ்விக்கிற இனிய செயலைச் செய்கிறது. எதையும் உருவத்தை வைத்து எடை போடுவது எவ்வளவு பெரிய தப்பு! இன்று எனக்குக் கிடைத்தது எவ்வளவு பெரிய அனுபவம்.

இதை உலகத்துக்குச் சொல்ல வேண்டும்.

எவரையும் உருவத்தை வைத்து எடை போட்டு விடாதீர்கள்! அது தவறு. அவர்களின் செயலை வைத்தே முடிவு செய்யுங்கள்! அதுவே நல்லது! என்று வள்ளுவரின் உதடுகள் அசைய கைகள் ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக் கொள்கின்றன.

அகல் விளக்கு ஒளியிலே இருநூற்று எழுபத்தொன்பதாவது குறள் பிறக்கின்றது!

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

கணை கொடிது – உருவத்தால் நேரிய அம்பு செயலால் கொடியது. யாழ் கோடு செவ்விது – உருவத்தால் வளைந்த யாழ் செயலால் இனியது. ஆங்கு அன்ன – அது போல. வினைபடு பாலால் கொளல் - எவரையும் உருவத்தைக் கொண்டு மதிப்பிடாமல் அவர்களின் செயலை வைத்தே அறிந்து கொள்ள வேண்டும்!
- திருக்குறள் கூடா ஒழுக்கம்

 பொருள்விளக்கம்

Written by இரா சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக