தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 14, 2016

தாத்தாவின் சொத்து பேரக்குழந்தைக்கு! ஏன்?

கதை சொல்பவர்கள் எண்ணிக்கையும், ஆர்வமும் குறையும்போது, கதை கேட்கிற குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துபோகிறது. இன்றைய பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க ஓடுகின்றனர். தாத்தா -சொத்துபாட்டியும் வெளியூர்களில் இருக்கின்றனர். அதனால் குழந்தைகள் பெரும்பாலும் செல்போன் கேம், வீடியோ கேம் என பொழுதைக் கழிக்கிறார்கள். இச்சூழல் ஆரோக்கியமானது இல்லை எனத் தெரிந்தும், வேறு வழியில்லை என்பது இன்றைய பெற்றோர்களின் வாதம். கதைகள் கேட்டு வளர்வது குழந்தைகளின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்கிறார், ஈரோடு, 'கலைத்தாய் கிராமியக் கலை' அமைப்பின் நிறுவனர் மாதேஸ்வரன்.
கதைகள் என்பது வாழ்க்கைக் கல்வி!
''பொதுவா அறிவு, 'பிறப்பு அறிவு', 'வளர்ப்பு அறிவு'னு ரெண்டு வகைப்படும். ஐந்து அறிவுள்ள எல்லா ஜீவராசிகளும் பிறந்தது முதல் படிப்படியாக எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கிவிடும். இது பிறப்பு அறிவு வகை. ஆனா, மனிதக் குழந்தைக்கு, ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் ஒவ்வொரு விஷயத்தையும் மத்தவங்க சொல்லிக்கொடுத்தாதான் செய்ய முடியும். இது வளர்ப்பு அறிவு. எனவேதான், மனிதர்களுக்கு நல்லது, கெட்டதுனு எல்லா விஷயங்களையும் அனுபவம் உள்ளவங்க சொல்லிக்கொடுக்கணும். அதுதான் மனிதப் பிறப்பின் இயல்பு.
அதன்படிதான், நம் முன்னோர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வாழ்வின் ஒவ்வொரு நிலையையும், நீதிகளையும் தகுந்த ஆதாரத்தோட கலைகள், கதைகளின் வாயிலா சொல்லிக் கொடுத்தாங்க. அதனால, நம் முன் தலைமுறையினர் வரைக்கும் கல்வி, அறம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல்னு பல விஷயங்களிலும் அறிவு பெற்றவங்களா வாழ்ந்தாங்க.
ஆனா, இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை. அதனால பெரும்பாலும் குழந்தைங்க மனம் போன போக்குல, கண் போன போக்குல வளர்றாங்க. அதனாலதான் இன்னைக்கு அறம் குறைந்து, வன்மம், பகை, சூழ்ச்சி, குறுக்குவழினு போற மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகிடுச்சு.
'தாத்தா சொத்து பேரப்பிள்ளைக்கு' என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?!
ஒரு உதாரணம் சொன்னா, கதைகள் எவ்வளவு முக்கியம், ஏன் முக்கியம்னு உங்களுக்குப் புரியும். 'தாத்தா சொத்து பேரப்பிள்ளைக்குத்தான் சொந்தம்'னு சொல்லுவாங்க. இதன் உண்மையான அர்த்தம், தாத்தா தன் வாழ்க்கையில் கத்துக்கிட்ட அனுபவங்களை, அறிவை, தன் பேரப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்கணும். அதனாலதான் முற்காலத்தில் கதைகள் வாயிலா தாத்தாக்கள் எல்லாம் தங்களோட பேரக் குழந்தைகளுக்கு நிறைய நீதிக் கதைகளை சொல்லிக் கொடுத்தாங்க. கதை சொல்றதும், கேட்கிறதும் சமுதாயத்தின் ஓர் அங்கமா இருந்துச்சு. தாத்தாவோட அழியாச் செல்வமான அறிவுச் செல்வம் பேரப் பிள்ளைக்கு போகணும் என்ற அர்த்தத்திலான அந்தப் பழமொழி காலப்போக்கில் 'தாத்தாவின் பொன், பொருள், செல்வம் உள்ளிட்டவை (அழியும் சொத்துக்கள்) பேரப்பிள்ளைக்குச் சொந்தம்'னு மருவிப்போயிடுச்சு.
குழந்தை மனம்தான் கதைகளை ஏற்கும்!
பொதுவா கதை கேட்கிற குழந்தைக்கு வயசு 15-க்குள்தான் இருக்கும். கதைச் சொல்றவர் பல அனுபவங்களைக் கொண்ட 40 வயசுக்கு மேற்பட்டவரா இருக்கணும். 15 வயசுக்குள்ள இருக்கிற குழந்தைங்கதான் உன்னிப்பா கவனிச்சு, கதையின் நீதியையெல்லாம் மனசில் ஏத்திக்குவாங்க, ஏத்துக்குவாங்க. அதுக்கு மீறின வயசுக்கார பிள்ளைங்க, கதையின் கதாபாத்திர வயதுக்கும் செயல்பாடுகளுக்கும் தாங்களே வந்திடுறதால, கதைகளை கேட்க மாட்டாங்க.
தாத்தா - பாட்டிதான் கதை சொல்லணுமா? ஏன்?!
எந்தக் குழந்தையும், தனக்குப் பிடிச்சவங்க, தன்கிட்ட அன்பா இருக்கிறவங்க சொல்றதைத்தான் கவனமா கேட்கும். அப்பா - அம்மா குழந்தைக்கு அன்பானவங்களா இருந்தாலும், அடிக்கடி திட்டவும், அடிக்கவும் செய்வாங்க. அதுவே தாத்தா -பாட்டி, தன் பேரக் குழந்தை தப்பு செஞ்சாலும் கோபப்படாமல், அன்போட, செல்லமான கண்டிப்போட அதை அவங்ககிட்ட சுட்டிக் காட்டுவாங்க. அதனாலதான், தாத்தா - பாட்டி கதை சொல்லும்போது, குழந்தை அதை ஆர்வமா, அழகா கேட்கும். அந்தக் கதை வழியே, அவங்க சொல்ற நீதியையும் ஏத்துக்கும்.
கதைகளால் கிடைக்கும் பலன்கள் என்ன?!
ஒவ்வொரு கதையும், உழைப்பு, வீரம், உதவி, உண்மை, அறம், நேர்மைனு... ஏதாச்சும் ஒரு விஷயத்தை வலியுறுத்துவதா இருக்கும். 'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்... அவர் நாட்டு மக்களை பல கஷ்ட நிலையிலும் காப்பாற்றினார்; அவர் புகழ் நிலைத்து இருந்துச்சு', 'ஒருவன் ஏழ்மையிலும் நேர்மையா வாழ்ந்தான்', 'நாலு மாடும் ஒற்றுமையா இருந்தவரை, சிங்கத்தால எதுவும் செய்ய முடியலை' - இப்படியான பல நீதிக்கதைகளை உடல் அசைவுகளோட, குரல் பாவனைகளோட சொல்லும்போது, கதையோட சூழலை குழந்தை மனசில் பதியவெச்சிக்கும். அன்பு, பாசம், நேர்மை, கொடை, இன்பம், கல்வினு அந்தக் கதைகளின் கருப்பொருளை, தன் வாழ்க்கைச் சூழலில் பொருத்தி, அந்த நீதிப்படி அறம் தவறாமல் நடந்து, எந்த ஒரு கஷ்டத்தையும் தாங்கி வளரும் பண்பைப் பெறும்.
இதுபோன்ற கதைகளை நம் முன்னோர்கள் சொன்னதாலதான், முந்தைய தலைமுறைக் குழந்தைகள் தாழ்வு மனப்பான்மை, பலிவாங்கும் எண்ணம், தற்கொலை போன்ற எதிர்மறை குணங்களில் இருந்தெல்லாம் விடுபட்டு இருந்தாங்க. இன்றைய குழந்தைகளின் நிலை அப்படி ஆரோக்கியமா இருக்கா?
எதிர்க்கேள்வி ஆரோக்கியமானது!
சிலர், 'கதை சொன்னா திருப்பி எதிர்க்கேள்வி கேட்டுட்டே இருக்கான்'னு சலிப்படையறது உண்டு. உண்மையில், குழந்தைகள் அப்படி கேள்வி கேட்பது மிகவும் ஆரோக்கியமானது. சின்ன வயசுல இருந்தே ஏன், எதுக்கு, எப்படின்னு கேட்டு, தெரிஞ்சு, புரிஞ்சு கத்துக்கிட்டாங்கன்னா, அது அவங்க படிப்புக்கும், வேலைக்கும், வாழ்க்கைக்கும் பேருதவியா இருக்கும். சிலர் தாங்கள் குழந்தைக்குச் சொல்ற கதையோட பொருள், நீதி தெரியாம மேலோட்டமா சொல்றதால, குழந்தைங்க கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமப் போயிடுது.
குழந்தைகளை கதைகளுடன் வளர்க்க...
* சினிமா, செல்போன் கேம்ஸ் எல்லாம் வளர்ந்த பின்னும் ஆர்வமிருக்கிற விஷயம். குழந்தை வயசுக்கான ஆரோக்கிய பொழுதுபோக்கு கதைதான். அதனால, உங்க குழந்தைகளை கதை சொல்லி வளர்ப்பது முக்கியம்.
* பாட்டு, நடனம், கம்ப்யூட்டர், இசைனு பிள்ளைங்களை பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புறதைவிட, வீட்டில் இருக்கும் பெரியவங்ககிட்ட கதை கேட்கும் நேரத்தை உருவாக்கிக்கொடுங்க. தாத்தா, பாட்டி தனி வீட்டில், வெளியூரில் இருந்தா, வார இறுதி நாட்களில் குழந்தைகளை அவங்ககிட்ட ஒப்படைச்சு கதைகள் கேட்கவைக்கலாம். குறிப்பாக சம்மர் விடுமுறை நாட்களில் கட்டாயமாக தாத்தா-பாட்டியின் அரவணைப்பில், கிராமச் சூழலில் குழந்தைகளை விடுவது அவசியம்.
* உங்க குழந்தைகளுக்காகவும், நாளைக்கு உங்க பேரன், பேத்திகளுக்குச் சொல்றதுக்காகவும் நீங்க கதைகளை தெரிஞ்சு வெச்சுக்கோங்க. அந்தக் கதைகளின் நீதிப்படி வாழ்ந்து, குழந்தைகளுக்கு முன்னுதாரணமா இருங்க!"

No comments:

Post a Comment