தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 நவம்பர், 2016

மயிலும் வான்கோழியும்!


மீன் துள்ளும் ஓடையும் தேன் துள்ளும் மலர்களும் வான் துள்ளும் முகில்களும் மட்டுமல்ல கான் துள்ளும் மான்களும் கதிர் துள்ளும் மூங்கிலும் கூட நிறைந்த காட்டுவழிப் பாதையது.

முள்ளும் முடக் கல்லும் முது சருகும் சரசரக்க தௌ;ளும் கடித்துலைக்கத் திரியும் வன விலங்கும் வேகமுடன் தள்ளும் தென்றலுக்கு தலை சாய்க்கும் கொடிமறைவில் வெள்ளை இளம் சிவப்பு வேறுபல நிறம் கூடிக் கொள்ளை அழகோடு குரல் காட்டும் பறவைகளும் என்று கிடந்த பாதையில்!


கவியால் கதையமைப்பால் கருத்துதிர்க்கும் கண்ணியத்தால் புவியோரைப் புடம்போட்ட பொக்கைவாய்த் தமிழ் ஆச்சி! ஆம்! கம்பனையே அட போட்டு அலட்சியமாய்ச் சிரித்த மகள்! பால் கலந்த தேன் கொடுத்துப் பதிலாக குறவள்ளி வேல் முருகன் அண்ணனிடம் சங்கத்து நூல் அறிவு தரக் கேட்ட நுண்ணறிவாள்! அவள்தான் ஒளவை!

பெண்கல்விக் கலாச்சார பெரும்புயலாள் நடந்திட்டாள்! பொருள் தேடி அல்ல. பொருமும் தன்வயிற்றுப் பசி நீக்கும் ஊர் தேடி! நடந்தாள் மூதாட்டி! நடுக்காட்டில் மயிலொன்று!

நாணித் தலைகவிழ்ந்து நாணமுடன் மயில் இருக்க ஆணித் தரமாக அதட்டுமொரு வான்கோழி! நின்றாள் ஒளவை! நிறுத்தி மூச்செறிந்தாள்! பண்பை முறித்துப் பேசியது மூளையற்ற வான்கோழி!

பனையோலை விரித்தால் போல் படமெடுக்கும் மயில் பார்க்க தினைபோலக் குவியும் திருந்தா மடைப்பயல்காள்! வெள்ளைச் சிறகெடுத்து வெளிவிரித்து நான் ஆடும் கொள்ளைக் கலைத்திறனைக் குருடர்களே போற்றீரோ! நீலக்கண் தோகை நிறம்கண்டு மயங்காதீர்! கோலக்கண் வரிபடைத்த என்தோகை பாரீரோ! சாதுவாய் அசையும் மயிலாட்டம் பார்க்காமல் மோதுமோர் புயல் போலும் முதலென்னைப் பார்த்திடுவீர். ஆடியது வான்கோழி! அழகில்லாச் சிறகடித்து!

வான்கோழி ஆட வந்திருந்த பறவையெலாம் தீன் தேடிப் பொறுக்கும் திருந்தாத வான்கோழி தான் கோடி ஆட்டம் தரணியிலே போட்டாலும் வண்ண மயிலாக வான்கோழி மாறிடுமா? எண்ணெய்த் திரியென்றும் எரிமலையாய் வெடித்த துண்டா? வெள்ளாடு தாடிவைத்து வள்ளுவனாய்ஆனதெங்கே? கரப்பொத்தான் மீசை வைத்துக் கட்டப்பொம்மன் ஆவதுண்டா?

என்றெல்லாம் எண்ணிப் பறந்ததனைத் தாய் கண்டாள். சிரித்தாள். ஒளவை. சிந்தித்தாள் கண நேரம். சிறகிருந்தால் ஆடலாம் சிந்தனையில் தவறில்லை. மயில் போல ஆடிடவே மதிகெட்டு அலைவான் ஏன்? போட்டி ஆட்டமெலாம் புகழ் மறையச் செய்துவிடும். மற்றவர்கள் புகழ் கண்டு மனம் மறுகித் திமிர் கொண்டால் உலகம் சிரித்திகழும். உறவெல்லாம் அறுந்தோடும்!

காட்டு வான்கோழித் திமிர்போல நம்மிடத்தும் நாட்டு வான்கோழி திமிர்மிக்க சிலவுண்டு. கல்வித் திமிரும் கனகாசு தரும் திமிரும் சொல்லிக் கொடுத்த பட்டச் சுமைதந்த பெருந்திமிரும்; துள்ளித் திரியவைக்கும் வான்கோழிக் கூட்டத்தை! எள்ளி அடுத்தவரை எடுத்தெறியத் தான் தோன்றும்!

ஆனாலும் இவையெல்லாம் கிள்ளி எறிந்த மயிர் சிலருக்கு என்பதனை வெள்ளைச் சிறகடிக்கும் வான்கோழி அறிவதில்லை. கடலைச் சேறாக்க கால் மட்டும் போதாது! மலைப்பாம்பை ஆடவைக்க மகுடியால் முடியாது. புயல் தாக்கி மலையொன்றும் புண்ணாகிப் போவதில்லை! போட்டி வேண்டாம் புத்தியற்ற மானுடரே!

ஆடும் மயில் கண்டால்; அதன் வழியைக் குழப்பாமல் பாடும் பணிசெய்து பக்கம் துணையிருப்போம்! கூவும் குயில் என்றால் குனிந்து வரவேற்போம்! ஆடும் நாகத்தின் அருகே அரண் செய்வோம். ஊரும் எறும்புகளின் ஒற்றுமைக்கு மதிப்பளிப்போம்! கள்ளிச் செடியேனும் காதலித்துப் போற்றிடுவோம்!

இதுதானே கல்வி! இதுதானே இறையன்பு! பொறாமைச் சுடரணைக்கும் பொற்கரங்கள் இவைதானே! காழ்பு மனப்பான்மை கனகாலம் வென்றதில்லை! சூழ்ச்சி தரும் சுகமும் தொலைதூரம் தொடர்வதில்லை! சொல்லிக் கொடுத்திடனும் இதையன்றோ வாழ்க்கையிலே!

பாடினாள் ஒளவை பாழும் பசி மறந்து!

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும்தன்
பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி

- இரா. சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக