தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, November 5, 2016

போரிலே சாகும் பாக்கியம் கிடைக்குமானால் -திருக்குறள் - படைச்செருக்கு!

என் தமிழ்!
நண்பர்கள் இதை ஆற்றல் என்று நினைத்தாலும் சரி ஆணவம் என்று நினைத்தாலும் சரி கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் மட்டுமல்ல கனடாவில் வாழும் தமிழனுக்கும் அடுக்கு மொழியில் எழுதத் தெரியும். அதற்கெல்லாம் அவர்களுக்கு போதிய நேரம் இருப்பதில்லை என்பதைத் தெரியப் படுத்தவே மீண்டும் ஒருமுறை இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்கின்றேன். - இரா. சம்பந்தன்
புரந்தார் கண் நீர் மல்க!
நிலம் உழுது வாழும் நிறைவான குடும்பம் அது! வெள்ளை எருதுகளும் வெண்சுரக்காய்க் கூடுகளும் கள்ளைத் தினம் சுரக்கும் கரும்பனையாம் நெடுமரமும் பள்ளம் நிலம் தோண்டிப் படுத்திருக்கும் பன்றிகளும் சேவல் சினையாடு செம்மறிகள் கால் நடுவே துள்ளி அணில் நடக்கும் தோட்ட வரம்புகளும் என்று இல்லம் இடர் அறியா இனிய குடும்பம் அது!
தந்தை பயிர் விளைக்க தாயாள் மனைகாக்க மங்கைப் பருவத்து மகள் இருவர் நிலம் பெருக்கி விளக்கேற்ற அண்ணன் ஒருவன்தான் அரன்மனைக்குப் போய்விட்டான்! அரன்மனையில் வேலையென்று அன்னை மகிழவில்லை!
ஏர்ப்படையைப் பிடிக்கும் என எதிர்பார்த்த என்குழந்தை போர்ப்படைக்குத் தலைவனாம்! பொல்லாத வேலையது! குதிரைக் குளம்பொலியும் குடை சாயும் தேரொலியும் அதிரக் கதை மோத அதைத்தடுக்கும் கேடயமும்! உரசும் வாள் முனையில் உண்டாகும் தீப்பொறியும்! ஐயகோ! என்பிள்ளை இப்பணிக்கு போனானே!
அழுவாள் அன்னை! ஆயிரம் கோடி முறை! ஆனாலும் கவசம் தரித்து மகன் கருங்குதிரை மீதேறி மிகவும் பாசமுடன் அம்மா எனவழைத்து வந்திட்டால் உள்ளம் சிலிர்க்கும்! உடலில் ஒரு மெருகேறும்! வாளுறையைப் பார்ப்பாள்! வலக்கையில் வடுப்பார்ப்பாள்! தோலுறையைக் கிழித்தீட்டி துளைத்திட்ட புண் பார்ப்பாள்!
அதையெல்லாம் மன்னர் கொடுத்த மணிமாலை மறைத்திருக்கும்! வெந்த சோறருந்தி விதிவந்த சாவடைய மைந்தனை நீ பெறவில்லை! மகிழ்ந்திருப்பாய் என்தாயே! ஏர்ப்புழுதி எழுப்பிடவே எல்லோர்க்கும் துணிவுண்டு! போர்ப்புழுதி எழுப்புதற்கு பொங்கும் மனம் வேண்டும்! புராலுடம்பு வீழ்ந்தாலும் புகழுடம்பு நிலைத்திருக்கும்! புலம்பாதே அன்னையே! போய்விடுவான் மகன் தினமும்! போர்முனையில் விளையாட!
அன்றும் அப்படித்தான்! அருமை மகன் வரவை அன்னை பார்த்திருந்தாள்! கட்டித் தயிரும் காயவைத்த பனங்கிழங்கும் முட்டித் தேன் குளித்த முழுநீளப் பலாத்தடலும் கொட்டி உலரவைத்த கொழு முளைத்த பருப்புகளும் அருகே தொட்டுச் சுவைபார்க்க துண்டுக் கரும்பும் என்று எத்தனையோ படைத்து வைத்து ஏங்கித் தவம் கிடந்தாள்!
ஒற்றைக் குதிரை ஒன்றுவரும் என்றிருந்தாள் இரட்டைக் குதிரைகளால் இழுத்துவரும் தேர் கண்டாள்! மன்னன் வருகின்றான் என்பதற்கு சான்றாக முன்னும் பலவீரர் முகம் சோர்ந்து வரக்கண்டாள்! மன்னன் வருவான் ஏன்? மகன் எங்கே எனக் கேட்டாள்!
களமாடி வீழ்ந்துவிட்ட காளையைப் பெற்றவளே உளமார வணங்குகிறேன் உன்பாத மலர்களையே! முடி சாய்த்து மன்னன் முத்தமிட்ட கால் நடுங்க இடி கேட்ட நாகம் போல் இருந்துவிட்டாள் அன்னையவள். உதடு விம்மும்! உயிர் நின்று மீண்டு வரும்! பயிர் அறுக்கும் அரிவாள் போல் பதறிக் குனிந்திடுவாள்!
வட்ட நிலாக்காட்டி வளர்த்தேனே அல்லாமல் பட்டு நிலாமறையும் பான்மையைநான் நினைத்தேனோ? முட்டிப் பயிர் வளர்ந்து முகம் சிரித்த போதெல்லாம் வெட்டி எடுக்கும் நாள் வருமென்று நினைத்தேனோ? பாத்திப் பயிரதுவும் பாவம் உயிர்தானே! சாத்தி அதை அறுத்த சாபந்தான் இப்படியோ? எதை நினைப்பேன் மகனே! எங்கேயடா நீ போனாய்?
துடித்தவளைத் தோள்தொட்டுத் தூக்கியது தமிழ் உருவம்! கனிந்து விட்ட தாடியும் கற்றைச் சடாமுடியும் விருந்து வைக்கும் தோற்றத்து வள்ளுவப் பெரும் தகையாம்! பரிந்தெடுத்து அன்போடு பார் மகளே எனை என்றார்!
உரங்கொடுத்து வளர்த்துவிட்ட ஊராளும் மன்னருக்கு கரங்கொடுத்து மாண்டுவிட்டான் காளையாம் உன்மகனும்! நோய் வந்து சாய்ந்து நொருங்கி மறையாமல் வேல் தைத்த வாய்க் குருதி வரலாறாய்ப் போய்விட்டான்!
மன்னர் அழுகின்றார்! மாவீரன் தனைநினைத்து!
வளர்த்தார் கண்கலங்க வைத்துவிட்டு விண் ஏகும் இனத்தான் உன்மகனும்! இதுவன்றோ வீரச்சா! கெஞ்சிக் கேட்டாலும் கிடைக்காத சாவிதம்மா! கண்ணைத் துடைத்துக்கொள் கனல் நெருப்பைப் பெற்றவளே! நிலங்காக்க உயிர்விட்ட நித்திலத்தை பெற்றவளே! மாவீர உயிர் சுமந்த கருவறையை உடையவளே! மறவர்; குடும்பத்து மயிலே மகிழ்ச்சி கொள்! தேற்றினார் தமிழ் முனிவர் தமிழ்த்தேசம் மேன்மையுற!!
புரந்தார்கண் நீர்மல்க சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து
தமக்குச் செய்த நன்றிகளை நினைத்து உருவாக்கி வளர்த்தவர்கள் கண்களிலே இருந்து கண்ணீர் பெருக போரிலே சாகும் பாக்கியம் கிடைக்குமானால் அதனை கெஞ்சி இரந்தாவது பெற்றுக் கொள்வது நல்லது.
(திருக்குறள் - படைச்செருக்கு)

No comments:

Post a Comment