தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 நவம்பர், 2016

மனிதனை விலங்கோடு ஒப்பிடல் தர்மமா?நீதியா!!

https://www.youtube.com/watch?v=JMPjfMCgM_A
மறு பிறப்புக்கு மற்றுமொரு சாட்சி!
இரா.சம்பந்தன்

அது அடர்ந்த காடு! விலங்குகளின் வாழ்வியலைப் பதிவு செய்ய அவர்கள் மறைந்து இருக்கின்றார்கள்! தற்செயலாக ஒரு சம்பவம் நிகழ்கின்றது. ஒரு குரங்கு ஓடி வருகின்றது நிலத்தில். அதனை வேட்டையாட சிறுத்தை ஒன்று துரத்தி வருகின்றது. வேட்டைத் திறன் மிக்க சிறுத்தையிடம் குரங்கு அகப்பட்டு விடுகின்றது. குரங்கை நிலத்தில் வீழ்த்தி அதன் குரல்வளையைக் கடித்துக் கொன்ற சிறுத்தை அந்தக் குரங்கின் உடலை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தில் ஏறி பிற விலங்குகளின் இடையூறு இன்றி அந்த இரையை உண்ண ஆயத்தம் ஆகின்றது.
அப்போது தான் சிறுத்தை பார்க்கின்றது. குரங்கு அம்மாவின் வயிற்றைக் கட்டிப் பிடித்துக் கொண்டு பிறந்து ஒரே ஒரு நாளான குழந்தைக் குரங்கு இருக்கின்றது! அதற்கு சிறுத்தையின் கொடுமை தெரியவில்லை! அம்மாவின் மரணம் தெரியவில்லை! குட்டியைக் கண்ட சிறுத்தை ஒருகணம் திகைக்கின்றது! இறந்து போன தாயைப் பரிவோடு பார்க்கின்றது. குழந்தையைப் பார்க்கின்றது. தப்புச் செய்து விட்டோம் என்ற கவலை அதனை வாட்டுகின்றது. குற்ற உணர்ச்சியோடு குழந்தையைப் பார்க்கின்றது. அம்மாவை உண்ண அதற்கு மனம் வரலில்லை,
வேட்டை ஆடும் போது அதன் கண்ணில் இருந்த கொடூரம் இப்போது இல்லை. அதன் கண்கள் கலங்கிப் போய் இருக்கின்றன. குட்டியைப் பிடிக்க வரும் ஏனைய விலங்குகளைச் சிறுத்தை விரட்டுகின்து. தனது பிள்ளையைப் போல மெதுவாகக் கவ்வி எடுத்து மரத்தில் பாதுகாப்பான இடத்தில் விடுகின்றது. நாவால் நக்குகின்றது. மார்போடு அணைத்துக் கொள்கின்றது.
அப்போதும் அதன் துயரம் தீரவில்லை. தப்புச் செய்து விட்டேன். ஒரு அம்மாவுக்கும் குழந்தைக்கும் பெரும் கொடுமை செய்துவிட்டேன் என்ற வேதனை அதன் மனதை விட்டு சிறிதும் அகலவில்லை! தருமம் தவறிவிட்டேன் இரக்கம் இல்லாமல் நடந்துவிட்டேன் என்ற எண்ணத்தில் பித்துப் பிடித்தது போலச் சோர்ந்து படுத்து விடுகின்றது அந்தச் சிறுத்தை! அப்போது கூட அந்தக் குட்டி மரத்தில் இருந்து விழுந்து விடாமல் அதன் வாலை தன் முன் கால்களால் பிடித்துக் கொள்கின்றது. ஒரு தாயின் பரிவோடு!
இந்தக் காட்சியை அவர்கள் படமாக்கி இருக்கிறார்கள்! LEOPARD KILLS MONKEY AND DISCOVERS BABY என்ற தலைப்பில் வெளியிட்டும் இருக்கிறார்கள் இணையத்தில்!
இங்கே ஒரு விலங்கு தருமம் தவறி விட்டோம் என்று சிந்திக்கின்றது! தன் குற்றத்துக்கு பிராயச்சித்தம் தேடித் தவிக்கின்றது! நீதி தவறிய செயலால் கிடைத்த ஆகாரத்தை உண்ண அது விரும்பவில்லை! இந்த மூன்று செயலும் ஆறு அறிவு படைத்த மனித வர்க்கத்துக்கு உரியவை. இலங்கை போன்ற நாடுகளில் மனித வர்க்கமே கடைப்பிடக்கத் தவறிய ஒழுக்க நெறிகள் இவை! ஒரு விலங்கு இதை பின்பற்றியது எப்படி?
இங்கேதான் விஞ்ஞானத்தை மதங்கள் வென்று விடுகின்றன. எல்லா மதங்களிலும் இந்த ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் நூல்கள் இருக்கின்றன. ஆனால் விலங்கு படிக்க வாய்ப்பு இல்லை! எனினும் இந்த நூல்களின் சாராம்சப்படி விலங்கு ஒன்று நடந்து கொள்கின்றது என்றால் இந்த மெய்யறிவு எப்படி அதற்கு வந்தது?
இதற்கு விடையாக சில மதங்கள் முற்பிறப்பைச் சொல்கின்றன. இப்போது விலங்காகப் பிறந்து உணவுக்காக குரங்கைக் கொல்லும் ஆத்மா முந்தைய ஜென்மங்களில் வேதங்களையோ குரானையோ பைபிளையோ படித்து நீதி நெறிகளை உணர்ந்து இருக்கின்றது. தரும நெறிகளைக் கைக்கொண்டு வாழ்ந்திருக்கின்றது! அந்த உணர்வின் தாக்கம் இன்று சிறுத்தையாகப் பிறந்தாலும் நல்லது கெட்டதுகளை அதற்கு அறிவிக்கின்றது. அதற்கேற்ப அது நடந்து கொள்கின்றது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக