தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 செப்டம்பர், 2015

காணாமல் போன கடவுளின் நகரம்: தியோதிஹகான் !

பல்வேறு அறிவியல் வசதிகள் உள்ள இந்த காலத்தில் ஒரு நகரம் சிறந்து விளங்குவது பெரியதல்ல.
ஆனால் இது எதுவுமே இல்லாத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகத்தின் உச்சமாக இருந்த ஒரு நகரம் தான் தியோதிஹகான்.
தியோதிஹகான் (Teotihuacan)  மெக்சிகோவின் மிக பெரிய புராதான நகரமாகும். இது கி.பி 6ஆம் நூற்றாண்டில் உலகளவில் 5வது பெரிய நகரமாகவும் விளங்கியுள்ளது.
மேலும் எகிப்தில் உள்ளதை போன்று இந்நகரத்திலும் உயரமான பிரமிடுகள் காணப்படுகின்றன. அவற்றுள் சூரியனுக்கான பிரமிடு மிக பெரியதாகும். அறிவியல் வசதிகள் எதுவும் இல்லாத அக்காலத்திலேயே சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்ட வீதிகள், கோவில்கள், கட்டிடங்கள் என ஒரு சிறந்த நகரமாக விளங்கியுள்ளது.
கி.மு 100ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது இந்த நகரத்தின் வரலாறு. மெக்சிகோ பள்ளத்தாக்கில் 5000 மக்களுடன் இரண்டு குக்கிராமங்களாக விளங்கியது.
பின்னர் கி.பி 150ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இதன் வளர்ச்சி தொடங்கியது. மரணத்தின் சாலை எனப்படும் அகன்ற சாலை மற்றும் சூரியனுக்கான பிரமீட் ஆகியவை அந்த காலக்கட்டத்தில் தான் கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் கி.பி.150 மற்றும் கி.பி. 300ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் சதுர வடிவிலான இதன் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
கி.பி. 300 மற்றும் கி.பி. 650ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் இந்நகரத்தின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது.
அந்ந காலகட்டத்தில் இப்பகுதி நாகரீகத்தின் உச்சமாக திகழ்ந்ததாகவும் அப்போது சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்பகுதியில் வசித்துள்ளனர் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பின்னர் கி.பி. 650ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நகரத்தின் வீழ்ச்சி தொடங்கியதாகவும் கி.பி. 750 ஆண்டு வாக்கில் இந்நகரம் முழுமையாக அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தியோதிஹகான் நகரத்தில் தற்போது உள்ள பிரமிடு உலகளவில் மூன்றாவது பெரிய பிரமீடாகும். 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது அக்காலத்தில் சிகப்பு வண்ணத்துடன் விளங்கியுள்ளது.
எனினும் இந்நகரத்தின் உண்மையான பெயர் கூட யாருக்கும் தெரியாது. தியோதிஹகான் என்ற பெயர் கூட கி.பி.700ஆம் ஆண்டுகளில் போது தான் இந்நகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தியோதிஹகான் என்பதுக்கு கடவுள்களின் நகரம் அல்லது கடவுள்கள் பிறக்கும் இடம் என்று அர்த்தம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்நகரத்தை உருவாக்கியவர்கள் யார், இங்கு வசித்தவர்கள் எங்கு சென்றனர், நாகரீகத்தின் உச்சமாக விளங்கிய இந்நகரம் அழிந்தது எப்படி என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே உள்ளது.
இந்நகரம் எப்படி அழிந்தது என்பதை விட எப்படி இத்தனை காலங்கள் தாக்குபிடித்தது என்பதுதான் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை அளிக்கிறது.
சுமார் 800 ஆண்டுகள் வரை இந்நகரம் சிறப்பாக விளங்கியது என்றால் அதன் சமுதாய, அரசியல் மற்றும் மதக்கொள்கைகள் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும்.
எது எப்படியே தற்கால மனிதர்களை விட பண்டைய மனிதர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கியுள்ளனர் என்பதற்கு தியோதிஹகான் ஒரு சிறந்த உதாரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக