சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சிப் பிரிவு சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் பணிகள் நடைபெறுகிறது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரம் புதையுண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் தமிழரின் தொன்மையான நகர நாகரிகத்துக்கான தடயங்களும், சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோமானிய குறியீடுகளுடன் கூடிய பானைகள், பாண்டிய மன்னர் காலத்தில் பயன்படுத்திய முத்து மாலைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பழங்காலத்தில் பயன்படுத்திய அகலமான செங்கற்களுடன் கூடிய கட்டுமான அறைகள், தொட்டிகள் ஆகியவற்றையும் தற்போது கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகையில், தென் தமிழகத்தில் மதுரையை மையமாக கொண்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சிகாலம் குறித்த முதல் அகழ்வாராய்ச்சி இது.
குந்திதேவி நகரம் என்பது தான் மருவி கொந்தகையாக மாறியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. இதனை உண்மையா என ஆராய இந்த பணி நடைபெறுகிறது.
பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் வணிகம் சிறப்பாக நடந்தது என்பதற்கான பல்வேறு சான்றுகள் இரண்டு மாத ஆராய்ச்சியில் கிடைத்துள்ளன.
அதிலும் குறிப்பாக அழகிய கலைநயமிக்க சங்க கால மண்பாண்ட கொள்கலன் கிடைத்துள்ளது. இது உடையாமல் முழு அளவில் உள்ளது.
72 செமீ அகலமும், 42 செமீ உயரமும் கொண்டுள்ளது. சுமார் 3.80 மீ ஆழத்தில் கொள்கலன் கிடைத்துள்ளது. இதை மிக விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் மருந்துகளை சேமிக்கும் கலனாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
இங்கு ஏற்கெனவே சுடுமண் உறை கிணறுகள் கிடைத்துள்ளன. இவை சங்க காலத்தில் கடைக்காலத்தைச் சேர்ந்தவை. ஆனால், தற்போது கூடுதலாக 2 உறைகிணறுகள் கிடைத்துள்ளன. இவை முதல் காலத்தைச் சேர்ந்தவை.
தற்போது நடைபெறும் ஆராய்ச்சி 20-ம் திகதியுடன் நிறைவடைகிறது, அடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டுள்ளோம்.
அடுத்த ஜனவரி மாதம் முதல் பணிகள் மேற்கொள்ளும்போது மேலும், பல அரிய பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதன் மூலம் மதுரையின் தொன்மை, தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் தொன்மையை ஆதாரப்பூர்வமாக, அறிவியல் பூர்வமாக நிரூபிக்க இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக