தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 டிசம்பர், 2014

மனிதர்களின் மூலமாக உள்ள உடல், உயிர், ஆன்மா ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு குரு பீர்முகமது சித்தர் கூறிய விளக்கத்தினை அறிவோம்.


 மனிதர்களின் மூலமாக உள்ள உடல், உயிர், ஆன்மா ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு குரு பீர்முகமது சித்தர் கூறிய விளக்கத்தினை அறிவோம்.
அன்பர்கள் "ஜீவ நாடி' கட்டுரைகளைப் படித்துவிட்டு ஏராளமான கேள்விகளைக் கேட்டார்கள். அவற்றுக்கு தமிழர்களின் ஆதி குருவாகிய அகத்தியர் முதலான பதினெட்டு சித்தர்களும் தங்கள் ஞானத்தால் அறிந்து சைவத் தமிழ் சித்தாந்தத்தில் கூறிய உண்மைகளையே பதிலாகத் தருகின்றேன்.
மனிதன் எப்படி உருவாகிறான்? யாரால் பூமியில் படைக்கப்படுகின்றான்?
"எப்படியுலகில் இப்படியுருவானோம் சிங்கி- அது
அப்பன்தன் னட்புக்கு ஒப்பிய தாயாலே சிங்கா.'
தந்தையின் சரீர மோகத்திற்கும், ஆசைக்கும் தாய் ஒப்புக்கொண்டு, இருவரும் தாம்பத்திய உறவுகொண்டதால், தந்தையின் மூலவிந்து தாயின் கர்ப்பத்தில் சேர்ந்து கருவாகி, நம் உடல் உருவாகி வளர்ந்து, ஒரு குழந்தையாக இந்த பூமியில் பிறந்தோம்.
இந்த பூமியில் பிறக்கும் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களும், ஆண்- பெண் இனச்சேர்க்கை மூலம் கரு உண்டாகி பிறக் குமே தவிர, வேறு எந்த சக்தியாலும் பூமியில் உயிரினங்களைப் பிறக்கச் செய்யமுடியாது.
பூமியில் பிறந்த உடலுக்கு உயிர் எப்படி வருகின்றது?
"இந்த வுடலுக்குயிர்வந்த தெப்படி சிங்கி- அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா.'
ஒரு குழந்தை பிறக்கும்போது, ஒரு சதைப் பிண்டமாகத்தான் பிறக்கும். கர்ப்பத்தில் வளரும்போது தாயிடமிருந்து உணவு, சுவாசம் ஆகியவற்றைத் தந்த தொப்பூழ்க் கொடியை வெட்டி தாயிடமிருந்து குழந்தையைப் பிரிக்கும் போது, காற்று மண்டலத்தில் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கும் அந்தக் குழந்தையின் வம்ச முன்னோர்களின் "ஆத்மா' என்ற உயிர்க் காற்று, இந்த தொப்பூழ்க் கொடி வழியாக உடலின் உட்புகுந்து இதயத்தை இயங்கச் செய்து, உடலின் அனைத்து பாகங்களிலும் ஓடிப் பாய்ந்து, சுவாச மண்டலத்தினை செயல்பட வைத்து, மூக்கின் வழியாக சுவாசித்து, அந்தக் குழந்தையைத் தானே இயங்கச் செய்கின்றது.
இந்த உயிர்க்காற்று உடலினுள்ளே சென்றபின்புதான் பிறந்த குழந்தைக்கு அசைவுகள் தோன்றும். அதன்பின் கண், காது, மூக்கு, வாய், கை, கால் என சரீரத்தின் அனைத்து உறுப்புகளும் செயல்படத் துவங்கும். ஆனால் உயிர் வந்த வழியான தொப்பூழ் பகுதி அதன்பின் மனிதன் இறப்புவரை எந்த செயலுக்கும் பயன்படாது.
மனிதன் உடலுக்குள் உயிர்வரும் இந்த சூட்சும ரகசியத்தை, மனிதன் உயிர் பற்றிய ரகசியத்தை தன் மெய்ஞ்ஞானத்தால் குரு பீர்முகமது சித்தர் அறிந்து ஒரு வார்த்தையில் கூறியுள்ளார்.
"ஜீவாத்மா' என்ற மனிதன் பிறப்புக்கு முன்பு
எங்கிருந்தான்? தன் இறப்புக்குப் பின்பு எங்கிருப்பான்?
"என்ன விதமாக தன்னை யறிவது சிங்கி- அது
தன்னவன் தாய் தந்தையாகி நாமானது சிங்கா.'
ஒரு மனிதன் தன் பிறப்புக்கு முன்பும் இதே வம்சத்தில் இந்தக் குடும்பத்தில் ஏற்கெனவே பிறந்து பாட்டன், பாட்டி, தாய், தந்தை என உறவுமுறைகளாக வாழ்ந்தவன்.
மனிதன் இறப்புக்கு பின்பு "ஆத்மா' என்ற உயிர்க்காற்று, தன் முற்பிறவி வாழ்க்கையில் தானே செயல்பட்டு உருவாக்கிக் கொண்ட பாவ- புண்ணியப் பதிவுகளுக்கான பலன்களை இந்த பூமியிலேயே தீர்த்துமுடிக்க வேண்டி, தன் வம்சத்தில் அடுத்தொரு சரீரம் கிடைக்கும் வரை காற்று மண்டலத்தில் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கும்.காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் என பல பிரிவுகள் உண்டு இது போன்றே "ஆத்மா' என்ற உயிர்க்காற்றும் உண்டு. உயிர்க்காற்றுக்கு உறுதுணையாக இருப்பது' "ஆக்ஸிஜன்' என்ற காற்று தானே தவிர, இதுவே உயிர்க்காற்று அல்ல. பசிக்கு உணவுபோல உயிர்க்காற்றுக்கு இதுவொரு துணை; அவ்வளவுதான்.
"நமது முன்னோர்கள்தான் நாம்' என்று அறிவது எப்படி?
"முப்பொருளென்று நீமுன்சொன்ன தாரடி சிங்கி- அது
அப்பனுமாயிர நாதியாம் நாமடா சிங்கா.'
உடல், உயிர், ஆன்மா என்ற முப்பொருள்
தான் மனிதனின் மூல ஆதாரமாகும். வான்வெளியில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்த நமது முன்னோர்களின் ஆத்மாவுடன் இணைந்த உயிர்க்காற்று, நமது உடலின் உள் சென்றபின் நமது சரீரத்தில் அவர்களின் சாயல் அமைந்துவிடும்.
இதனைத்தான் நாம் குழந்தை பிறந்தவுடன் "குழந்தை யார் சாயலில் உள்ளது' எனக் கேட்டுக்கொள்வது. குழந்தையைப் பார்த்து பாட்டனின் காது போன்றுள்ளது; மூக்கு அத்தையைப் போன்றுள்ளது; தந்தையின் நெற்றிபோன்றும், தாயின் நிறம்போன்றும் உள்ளதென வம்ச முன்னோர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றோம்.
வளர்ந்து பெரியவர்களான பின்பு குணம், செயல்களையும் நமது முன்னோர்களுடன் ஒப்பிட்டுப்பேசுகின்றோம்.
சரீரம் நம்முடையது! ஆனால் அதன் உள்ளே நமது தந்தைவழி, தாய்வழி முன்னோர்கள் ஆயிரம் பேர் தங்கள் முன்வினை பாவ- புண்ணியப் பதிவுகளைத் தீர்க்க அதே குடும்பத்தில் மறுபடியும் வாரிசுகளாகப் பிறக்கிறார்களென அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பிறவியில் உயிர்- உடலுடன் இயங்கும் மனிதன் "ஜீவாத்மா' ஆவான். உள்ளிருந்து அவனை இயக்கும் நமது முன்னோர்களின் சக்தியே "பரமாத்மா' வாகும். மனிதன் "பிரம்மம்' என்றால், நமது முன்னோர்கள் "பரப்பிரம்மம்' ஆவார்கள்.
மனிதனின் வாழ்வில் நன்மை- தீமைகள் முன்னோர்களால் எப்படி நிர்ணயிக்கப்படு கின்றன?
"இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி- அது
முந்திய தொப்பூழ்மாக் கொடியல்லவோ சிங்கா'.
ஒரு தாவரத்தின் விதையிலிருந்து, அதே தன்மையுள்ள செடியின் தோற்றமும், கனியின் சுவையும் அமைந்திருப்பது போன்றுதான், மனிதனும் அவன் முன்னோர்களின் சாயலும், குணமும் தன்னிடத்தே கொண்டிருப்பான்.
ஒரே குடும்பத்தில், ஒரு தாய்- தந்தைக்குப் பிறந்த நான்கு குழந்தைகளின் வாழ்க்கையில் வித்தியாசங்களும், ஏற்றத்தாழ்வுகளும் அமைந்துவிடும். ஏன்? அடுத்தடுத்து இரட்டைப் பிள்ளைகளாய் ஒரே சமயத்தில் பிறக்கும் குழந்தைகள் வாழ்க்கையிலும் வேறுபாடு காணப்படும். இதற்குக் காரணம்- பிறக்கும்போது புண்ணியப் பதிவுகளுள்ள முன்னோர்களின் ஆத்மா எவனிடமிருந்து வாழ்வில் செயல்படுகின்றதோ அவன் வாழ்க்கை செல்வம், செல்வாக்கு, பதவி என அமைந்துவிடும்.
பாவப்பதிவுகளைச் செய்து, அதற்குண்டான தண்டனையை அனுபவிக்கக்கூடிய முன்னோர்களின் ஆத்மா எவருக்குள் இருந்து செயல்படுகின்றதோ, அவருக்கு கஷ்டம், பிரச்சினை, தடை என துயரமான வாழ்வை அமைத்து விடும். இதைத் தான் குரு முந்தைய தொப்பூழ்க்கொடி வழிப் படியே என கூறுகின்றார்.
நமது சரீரம் பஞ்சபூதங்களால் உருவானது.
பூமியில் மழை, வெயில், காற்று என பஞ்சபூதங் கள் சுழற்சி முறையில் தோன்றி மறையும். அதைப்போன்றே மனிதனின் உடலும், ஆத்மாவும் தோன்றி மறையும். சரீரம் அழியும்: ஆனால் அதன் உள்ளேயிருந்து செயல்படும் ஆத்மா அழியாது. பூமியில் பிறந்தது இறக்கும்; இறந்தது பிறக்கும். மூலம் அழியாது. நமது முன்னோர்களே நாம். நாமே நமது முன்னோர்கள். முன்பிறவியில் வங்கியில் புண்ணியம் என்ற பணத்தைப் போட்டவன் இந்தப் பிறவியில் அந்தப் பணத்தையெடுத்து வசதியாக வாழ்வான். பாவம் என்ற கடனைச் சுமந்தவன் இந்தப் பிறவியில் கஷ்டப்பட்டு கடனைத் தீர்க்கிறான் என்கிறார் குரு.
செல்: 99441 13267
நன்றி ; நக்கீரன்,,,சித்தர் தாசன் சுந்தர்ஜி.
இனிய வணக்கம் தோழமை(களே)!!! அன்புடன் சகோதரன், நண்பன்
Vickna Sai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக