அருணகிரிநாதரும் வில்லிப்புத்தூராரும் (காதறுக்கும் போட்டியும் கந்தர் அந்தாதியும்):
*
குமரக் கடவுள் உறையும் பற்பல தலங்களைப் பாடிப் பரவி வரும் அருணகிரிநாதர் வில்லிப்புத்தூர் தலம் வழியே சென்று கொண்டிருக்கிறார். வழியில் காது அறுபட்ட நிலையில் பல இளம் பண்டிதர்களைக் காண நேர்கிறது. 'புலவர்களே உங்களுக்கு இந்நிலை எதனால் எய்தியது' என்று வினவியருள்கிறார்.
*
பண்டிதர்களும் 'பெருமானே வில்லிப்புத்தூரார் என்பார் இவ்வூரில் வசிக்கிறார்; வைணவ மரபைச் சார்ந்தவர்; எண்ணற்ற சாத்திரங்களைக் கற்றுணர்ந்த பண்டிதர்; அச்செருக்கினால் பல புலவர்களை வாதப் போருக்கு அழைத்து, தோற்போரின் காதினை அரிந்து விடுகிறார்' என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
*
அருணகிரிப் பெருந்தகையும் 'அன்பர்களே வருந்த வேண்டாம். இனி இந்நிலை பிறிதொருவருக்கு எய்தாது செய்வோம்' என்று ஆறுதல் மொழிகள் கூறியருளி வில்லிப்புத்தூர் ஆழ்வாரின் இல்லம் நாடிச் செல்கிறார். தமது வருகையின் காரணம் வினவும் ஆழ்வாரிடம் 'யாம் உமது கல்வியின் ஆழத்தைக் காணவே வந்தோம்' என்று உரைத்தருள்கிறார்.
*
ஆழ்வார் 'போட்டிக்கு இங்கு ஒரு நிபந்தனை உண்டு. தோற்போரின் காதுகள் அரியப் படும்' என்று உரத்த குரலில் கூற, அருணகிரிப் பெருமானும் 'அறிவோம்; அது தமக்கும் பொருந்தும் தானே' என்று வினவியருள்கிறார். சிறிது அதிர்ந்த நிலையில் வில்லிபுத்தூர் ஆழ்வாரும் 'ஆம்' என்று மறுமொழி கூற, அப்போட்டி துவங்குகிறது.
*
இருவர் காதிலும் மற்றொருவரின் காதறுக்கும் குறடு. ஆழ்வார் 100 கவிகள் பாட ஒவ்வொரு பாடலையும் அருணகிரியார் திரும்பப் பாடியருளிப் பின் பொருள் கூறுகிறார். அது போல அருணகிரியார் கந்தரந்தாதிப் பாடல்களைப் பாடியருளத் துவங்குகிறார்; ஆழ்வாரும் ஒவ்வொரு பாடலையும் திரும்பப் பாடிப் பொருளையும் கூறி வருகிறார்.
*
கந்தர் அந்தாதி 100 பாடல்களைக் கொண்டது. 53 பாடல்கள் வரை உரை கூறி வந்த ஆழ்வார் 54ஆம் பாடலுக்கு உரை கூற இயலாது தன் தோல்வியை ஒப்புக் கொண்டு பணிகிறார். கருணையே வடிவாய் விளங்கும் அருணகிரிப் பெருமான் காதினை அறுக்கும் செயலைப் புரிவாரா!!
*
ஆழ்வாரே 'இனி வரும் காலத்தில் பண்டிதர்களை பேதமின்றி ஆதரிப்பீர். இதுவரை காதறுத்த பாவம் போக தீந்தமிழில் மகாபாரதம் இயற்றுவீர்' என்று ஆசி கூறியருள்கிறார். அவ்வாறே வியாச மகாபாரதத்தின் 18 பர்வங்களுள் 10 பர்வங்களை வில்லிப்புத்தூரார் தமிழில் இயற்றியருள்கிறார்.
*
ஒரு விளக்கம்; வைணவ மரபின் 12 ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வாரும் வில்லிப்புத்தூர் தலத்தைச் சேர்ந்தவரே; எனினும் பெரியாழ்வாரின் காலமோ மிக முற்பட்டது. மாபாரதம் இயற்றியருளிய வில்லிப்புத்தூர் ஆழ்வார் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்.
*
(கந்தர் அந்தாதி: வில்லிபுத்தூர் ஆழ்வாரால் பொருள் கூற இயலாத 54ஆம் பாடல்):
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே!!!
*
இப்பதிவின் வலைத் தள முகவரி:
http://hindusanatanadharmam-kaumaram.blogspot.com/…/blog-po…



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக