ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி வரும் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களை ஏளனமாக பேசிய பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான நிக்கோலஸ் சர்கோஸி, கடந்த வெள்ளியன்று பாரீஸ் நகருக்கு அருகில் தனது கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை. வேலை வாய்ப்பு மிக குறைவாக உள்ளது. புதிதாக வீடுகள் கட்டிக்கொடுக்கும் வசதியும் இல்லை.
இவ்வாறான சூழலில், ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக ஐ.நா சபை அந்த எண்ணிக்கையை மேலும் விரிவு படுத்த முயற்சி செய்கிறது.
இந்த நிலையை நிக்கோலஸ் ஒரு குட்டி உருவகத்துடன் விளக்குகிறார். ஒரு வீட்டில் உள்ள சமையல் அறையின் தண்ணீர் குழாய் உடைந்து விடுகிறது.
தண்ணீர்(அகதிகள்) பெருக்கெடுத்து அங்கும் இங்கும் பரவுகிறது. அப்போது குழாயை சரி செய்யும் ஊழியர்(ஐ.நா சபை) வருகிறார். இந்த பிரச்சனைக்கு தன்னிடம் ஒரு தீர்வு இருக்கிறது எனக்கூறிய அவர், கீழே சிந்தும் தண்ணீரில் பாதியை சமையல் அறையிலேயே வைப்போம்.
எஞ்சிய கால்வாசி தண்ணீரை வீட்டின் ‘ஹாலில்’ வைப்போம். மீதி கால்வாசி தண்ணீரை பெற்றோர்களின் தனி அறையில் வைப்போம். இந்த திட்டம் செயல்படவில்லை என்றால் எஞ்சிய தண்ணீரை குழந்தைகள் அறையில் வைப்போம் என ஊழியர் ஆலோசனை கூறுவதாக நிக்கலோஸ் கூறி கை கொட்டி சிரித்ததாக செய்திகள் வெளியானது.
ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி வரும் வெளிநாட்டு அகதிகள் தொடர்பாக அவர் கூட்டத்தில் ஏளனமாக பேசியது பல தரப்பு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தனது கட்சிக்காரர்களின் மலிவான கை தட்டல்களை பெறுவதற்காக அகதிகளை ஏளனமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
நிக்கோலஸ் சர்கோஸி தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு நாடு முழுவதிலிருமிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதால், அந்நாட்டின் தற்போதைய அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே, அனைவரையும் அமைதி காக்குமாறு தனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக