கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும்.
அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன்வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம். அல்லது ஒரு ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு, 12 ஆண்டு, 14 ஆண்டுகள் என்ற முறையிலும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு தொடங்கும் முன்பாக இத்தனை ஆண்டுகள் விரதம் அனுஷ்டிப்பேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும். சந்திர பகவான், கார்த்திகை மாதம் சுக்ல பட்ச அஷ்டமியில் தோன்றியவர். சந்திரன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி நடத்திப் பெரும் புகழ் பெற்றான்.
சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு மனைவி களாகக் தாரை வார்த்துக் கொடுத்தார். ஆனால் சந்திரன், அவர்களில் உரோகினியிடம் மட்டும் அதிகமாக அன்பு காட்டினான். அதனால் கவலை அடைந்த மற்ற பெண்கள் இதுபற்றி தன் தந்தையான தட்சனிடம் முறையிட்டனர்.
அவர் சந்திரனிடம், ‘எனது பெண்கள் எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்து’ என்று கூறினார். ஆனால் சந்திரன் அதனை கேட்பதாக இல்லை. மீண்டும் உரோகினியிடம் மட்டுமே அதிக ஈடுபாடுடன் நடந்து கொண்டான். இதனால் கோபம் அடைந்த தட்சன், ‘நீ நாளுக்கு நாள் தேய்ந்து போவாய்’ என்று சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.
தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதை கண்ட சந்திரன் மிகவும் கவலையுற்றான். இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டி, பிரம்மதேவரிடம் போய் முறையிட்டான். ஆனால் பிரம்மதேவரோ, சிவனைத் தஞ்சம் அடையுமாறு கூறினார். சந்திரன் உடனடியாக சிவபெருமானை தஞ்சம் அடைந்தான்.
சிவன் மனமிரங்கி, சந்திரனைத் தனது சடை முடியில் வைத்துக் கொண்டார். இதனால் சந்திரனின் சாபம் பாதியாக குறைந்தது. மாதத்தில் 15 நாட்கள் தேய்வதும், வளர்வதுமாக அவனது சாபம் மாறுதல் பெற்றது. இவ்வாறு சந்திரன் தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் அழைக்கலாயினர்.
கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரன் சிவனுடைய தலை முடியில் அமர்ந்து கொண்டான். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான். ‘இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான்.
அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம்.
அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும். இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது.
இந்த விரதத்தை பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதுமாகவே அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடித்து நலம் பெறலாம்.
அனைவருக்கும் என் இனிய வணக்கம் இந்த நாளும் இனிய நாளாக எல்லாம் வல்லவனைத் இத்தருணத்தில் வேண்டுகிறேன் ~ சாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக