தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 மே, 2014

மறுமணம்??? (சிறுகதை)


அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவரது இருண்ட முகம் உணர்த்தியது.அந்த முகத்தில் தெரிந்த இருண்மை கொஞ்சம் மகிழ்ச்சி தருவதாகக் கூட இருந்தது. அடுத்தவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு கொடூர மனமோ வக்கிர புத்தியோ எனக்கு இல்லையெனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை, இத்தனைக்கும் அந்த மனிதர் முன்பின் அறிமுகமாகாதவர் என்று கூடச் சொல்ல முடியாது. மிக நன்றாக அறிமுகமானவர் என்பது தவிர தூரத்துச் சொந்தமும் கூட. இந்த தூரத்துச் சொந்தம் என்ற வார்த்தை எனக்குள் ஏற்படுத்தும் சிரிப்பை இம்முறையும் ஏற்படுத்தியது அவரை நான் வேண்டுமென்றே சீண்டுவதாகக் கூட எண்ண வைத்திருக்கக் கூடும். இருந்து விட்டுப் போகட்டும். இப்போதைய நிலையில் இதை விட்டால் வேறு வழியில்லை.

எதிர்பாராத ஒரு சோக நிகழ்வில் மனைவியை இழக்க நேர்ந்ததில் உடைந்து போகக் கூட வழியில்லாமல் அடுத்த நிகழ்வுகளைக் கவனிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டபோது காலத்தின் நகர்வுகளில் எதிர்காலம் பற்றிய கேள்விக் குறியோடுதான் வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் நட்பும் குடும்பமும் சூழலும் தந்த ஆறுதலில் விரைவாக அலுவல்களுக்குள் என்னைத் திணித்துக் கொள்ள முடிந்தது - வலுக்கட்டாய மாகவேனும்.

விமானமேறும்போதும், துபாய் வந்திறங்கியபோதும் குழந்தைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணமே ஓங்கி உயர்ந்து நின்றது. எதைப் பற்றியும் கவலைப்பட அவகாசமில்லாமல் முழுமையாக அலுவலில் மூழ்கி இருந்ததில் சில வாரங்கள் கண் திறப்பதற்குள் ஓடி விட்டன. அதற்குள்ளாகவே குழந்தைகளும் என்னோடே சேர்ந்து கொள்ள புதிய பள்ளி தேடுவதும் அங்கே குழந்தைகளைச் சேர்ப்பதுமாக இன்னும் வேகமாக ஓடியது காலம். இடைப்பட்ட காலங்களில் தொலைபேசிகளில் அழைத்து துக்கம் விசாரிப்பவர்களை நேரில் சந்திக்கத் தேவையில்லையென தவிர்க்கவும் முடிந்தது.

ஒருவித தப்பித்தலுணர்வோடு எவரையும் சந்திக்க அவகாசமில்லாமல் இருந்தபோதும் இந்த மனிதர் வீடு தேடி வந்து துக்கம் விசாரித்தபோது தவிர்க்க முடியவில்லை. வந்தவருக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்ததும் பெருங்குரலெடுத்து அழுதார் அவர்" தங்கச்சி இருந்திருந்தா இதெல்லாம் செஞ்சிருக்க வேண்டியது வருமா?" என்றொரு அனாவசியக் கேள்வியை எழுப்பினார். 'இருந்திருந்தால் நீரெல்லாம் வந்திருக்கவா போகிறீர்?' என்று திருப்பிக் கேட்கலாம் என்று தோன்றியது. ஏனோ சில மனிதர்கள் துக்கம் என்ற பெயரில் கொஞ்சம் அதீதமாக தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றத் துவங்கியிருந்தது எனக்கு.

'என்ன நடந்தது?' என்ற கேள்வியைத் தடை செய்யலாமா என்று கூட சமயங்களில் யோசனை வந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் வந்து' இப்பத்தான் கேள்விப்பட்டேன். என்ன சொல்றதுன்னே தெரியலை' என்று தொடங்கும்போது 'சொல்ல முடியாவிட்டால் சும்மா இருக்க வேண்டியதுதானே?' என்று சட்டென்று சினம் கிளர்ந்தது. ஆனால், இதெல்லாம் ஒரு விதமான சம்பிரதாயங்கள் எனப் புரிபடத் துவங்கியபோது கேட்பவரின் குரலுக்கேற்ற ஒத்திசைவில் அதே குரலில் பதிலளிக்கத் துவங்கியதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பெருங்குரலெடுத்து அழுது அரற்றி தங்கள் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவே எல்லாரும் தலைப்பட்டார்களோ என்று தோன்றிய எண்ணத்தைத் தடை செய்ய பெரும் முயற்சி எடுத்துக் கொண்டேன். தோழியொருத்தி அருகே வந்தமர்ந்து எதுவும் பேசாமல் என்னருகில் ஐந்து நிமிடம் இருந்து விட்டு, 'பார்த்துக்கடா' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியபோது தெரிந்த ஒற்றைத் துளி கண்ணீர் இழப்பின் ஆழத்தை எனக்குச் சொல்லாமல் சொல்லிப் போனது. தெரியாதவர்கள் தெரிந்தவர்கள் என்று எப்போதும் எவரேனும் வந்து கொண்டேயிருந்தார்கள் - விசாரணை செய்து தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்ள. 'கொஞ்சம் என்னைத் தனியாக அமைதியில் இருக்க விடுவீர்களா?' என்று யாரிடம் கேட்பதென்று தெரியாமல் தயாரித்து வைத்த புன்னகையோடு எல்லாரையும் அணுகுவது சிரமமாகவே இருந்தது..

ஒரேயடியாக எல்லாரது அனுதாபங்களையும் ஒதுக்கி விடுவதற்கில்லை. சக மனிதனின் சங்கடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற அக்கறைதான் அது என்பதை எனக்கு நானே உணர்த்திக் கொள்ள திரும்பத் திரும்ப முனைந்தபோதும், ஏதோ ஒருவித சடங்கு போல அதனைப் பாவிக்கத் துவங்கியதன் பாதிப்பும் தெளிவாகவே தெரிந்தது.

ஒரே சூழல் மீண்டும் மீண்டும் அதே விசாரிப்புகள் - தவிர்ப்பதற்காக காலையிலேயே வெளியே கிளம்பி விட்டேன். யாரும் ஏதும் கேட்கவில்லை. வந்து விடுகிறேன் என்று மட்டும் சொல்லி விட்டு இலக்கில்லாமல் நடக்கத் துவங்கினேன். நண்பனொருவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்து கிடைக்காமல் நேரே புத்தகக் கடை வாசலொன்றில் போய் நின்றேன். உள்நுழைந்து புத்தகங்களோடு பேசிக் கொண்டிருந்த நேரம் பெரும் சுமையாக இருப்பது போலத் தோன்றியது.'எப்ப பாரு. ஒரே புஸ்தகம்தான்' என்றொரு குரல் அசரீரி போலக் கேட்பதாக உணர்ந்தேன். என்னையறியாமல் சிரிப்பு வந்தது. புத்தகங்களை மூடி வைத்து விட்டு வெளியே வந்தபோது வெயில் நன்றாக ஏறியிருந்தது. 'இந்த வெயிலில் எங்கே போவது?' என்ற யோசனை வந்ததும் தோழியை அழைத்தேன். பதில் இல்லை மறுமுனையில். அருகில் வந்த தானியை நிறுத்திப் போக வேண்டிய இடம் சொன்னேன். மிக அதிசயமாக 50 ரூபாய் என்றார் தானி ஓட்டுனர். காலையில் இதே இடம் வருவதற்கு 90 ரூபாய் பேரம் பேசி வந்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை தானி ஓட்டுனருக்கும் என் மேல் ஏதேனும் அனுதாபம் இருக்குமோ என்று 'சட்'டென்று ஓடிய யோசனையை நிறுத்தி விட்டு வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.

சரம் சரமாக மனிதர்கள் தங்கள் கவலைகளை வெயிலில் உலரவைத்து விட்டு நடந்து கொண்டிருந்தார்கள். பேருந்துகள் காலை நேரப் பிரசவம் முடிந்து தளர்ந்த நிலையில் ஓடிக் கொண்டிருந்தன. பெரிய நெரிசல் ஏதுமில்லாமல் இருந்தும் வளைந்தும் நெளிந்தும் போய்க்கொண்டிருந்தனர் இருசக்கர வாகன ஓட்டிகள். தெருமுனையில் இருந்த சுவரொட்டியில் ஹிந்திப்படம். 'வெளியானதும் பார்க்க அழைத்துச் செல்ல வேண்டுமென' அவள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. கடைசியாக எப்போது சேர்ந்து படம் பார்க்கப் போனோம் என்று யோசித்துப் பார்த்தேன். அந்நேரத்து வெயிலைப் போல 'வெறிச்'சென்ற வெறுமைதான் பதிலாகக் கிடைத்தது.

கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறும்போது செல் சிணுங்கியது. தோழிதான். "என்ன. கூப்பிட்டிருந்தியா?"
"ஆமா. பார்க்கலாம்னு தோணிச்சு"
"சரி வா"
"இல்ல. பிறகு பார்க்கலாம்"
"நான் வேணும்னா வீட்டுக்கு வரட்டுமா?"
"வேணாம்"
"சரி வேணாம்னா விடு. சாயங்காலம் குழந்தைகளோட தயாரா இரு. எங்காவது வெளில போகலாம்."

வெளியில் போனோம். கடைசியாகக் குழந்தைகளோடு அவர்கள் வீட்டுக்குப் போனதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கவனமற்று கேட்டுக்கொண்டிருந்தேன். குழந்தைகள் கண்ணுக்கெட்டும் தூரத்தில் கடலில் மகிழ்ச்சியாக கால் நனைத்து ஆடிக்கொண்டிருந்தார்கள் . அலைகள் வந்து விடாத தூரத்தில் மணலில் நாங்கள். லேசாக வானம் நிறம் மாறத் துவங்கியிருந்தது.

"போன தடவை வந்திருந்தபோது அவங்க ரொம்பப் பேசவேயில்லை. வழக்கம்போல நீதான் அவங்களைக் கேலி பண்ணிக்கிட்டு இருந்தே. நான் கூட, 'ஏன் இப்படி இவனுக்குப் பயந்து அமைதியா இருக்குறீங்க? இந்த மாதிரி 'எம்சிபி' எல்லாம் உங்களை மாதிரி ஆளாலதான் உருவாகுறாங்க'ன்னு சொன்னபோது கூட லேசா சிரிச்சு வச்சாங்க. என்னமோ சொல்ல வந்து சொல்லாம விட்டுட்டு போன மாதிரியே இருந்தது தெரியுமா?"

அவள் பேசிக் கொண்டிருக்க நான் அமைதியாய் தூரத்தில் அலைகளை வெறித்துக் கொண்டிருந்தேன்
அப்போதுதான் அவள் கேட்டாள். "சரி. குழந்தைகளை யார் கவனிச்சுக்கப் போறாங்க?"
நான் நிமிர்ந்து பார்த்தேன் ஒரு கேள்வியுடன். "வேற யாரு? நான் தான்"
"உன்னால முடியுமா?"
"என்ன கேள்வி இது? முடியுமாங்குறது முக்கியமில்ல. முடியணும்"
"ம்ம். முடியணும்கறது நிர்பந்தமா உனக்கு நீயே போட்டுக்கிற வேலி. ஏன் அப்படி யோசிக்கணும்?"
"பிறகெப்படி யோசிக்கணும்?"
"குழந்தைகளைப் பார்த்துக்க உனக்கு ஒரு துணை வேணும்கற மாதிரி"
எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவளையே கொஞ்ச நேரம் பார்த்துவிட்டுக் கேட்டேன்
"சரி. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
"இன்னைக்கா, நாளைக்கா?"
"யேய் என்ன உளர்றே?"
"உளறல் இல்ல. நீ என்னை வெறுப்பேத்துறதுக்காகத்தான் சொன்னேன்னு எனக்குத் தெரியும். தோழியாய் இருக்குறது வேறு. துணையாய் வர்றது வேறங்குறது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதனால என்னைச் சீண்டுறதை விட்டுட்டு பதில் சொல்லு"
"என்ன பதில்?"
"இன்னொரு கல்யாணம்?"
"உனக்கென்ன பைத்தியமா?"
"உன்னை நாளைக்கே பண்ணிக்கோன்னு சொல்லலை. ஆனா இப்பவே யோசிக்க ஆரம்பின்னு சொல்றேன்"
"உளறாதே"
"நான் ஒண்ணும் உளறலை. இவ்வளவு நாளா குழந்தைங்க என்ன செய்றாங்க என்ன படிக்குறாங்க அவங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு எதுவுமே தெரியாம வாழ்ந்து பழகிட்டே."
"அதனால என்ன?? இனி மேலயாவது அவங்க தேவை என்னன்னு தெரிஞ்சு அவங்களுக்காக வாழப் பழகிக்கிறேன். அதற்கான சந்தர்ப்பம் இதுன்னு வச்சுக்கலாமே?"
"கிழிச்சே. இவ்வளவு நாளா இல்லாம இனிமே மட்டும் உன்னால 'சட்'டுன்னு அப்படி எல்லாத்தையும் தலைகீழா மாத்துறதெல்லாம் முடியாது"
"அப்படின்னு யாரு சொன்னா?"
"யாரு சொல்லணும். உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"
"அதனால கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்றியா?"
"ஆமா. ஏதாவது ஏழைப் பொண்ணா குழந்தைகளைப் பாத்துக்குற மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னுல்லாம் நான் சொல்லலை. உனக்கேத்த மாதிரி மீதியுள்ள வாழ்க்கைல உனக்கு ஒரு சக தோழியா இருக்குற மாதிரி ஒரு பொண்ணப் பார்த்துக்கோன்னு சொல்றேன்"
"சரி"
"என்ன கிண்டலா? நான் சீரியஸா சொல்றேன்"
"சரி நானும் சீரியஸாத்தான் சொல்றேன் நாளைக்கே 'மணமகள் தேவை'ன்னு விளம்பரம் கொடுக்குறேன். போதுமா?"
"இந்தக் கிண்டல் மயிருக்கெல்லாம் கொறச்சல் இல்ல" - நான் சொல்லிக் கொடுத்த மொழிநடைதான். எனக்குச் சிரிப்பு வந்து விட்டது
"நாளைக்கு இதே மாதிரி உன் புருஷன் கிட்ட பேசி அவன் உன்னை அதோட வீட்டுக்கு அனுப்பப் போறான்"
"அதை நான் சமாளிச்சுக்குறேன். நீ என்ன சொல்றே?'
"என்ன சொல்லணும்"
"'சரி'ன்னு சொல்லணும்"
"சரி"
"என்ன பழையபடியும் கிண்டலா?"
"அட! நெசமாத்தான்யா" இப்போது என்னால் அடக்கவே முடியவில்லை சிரிப்பை. ஏன் சிரிக்கிறேன் என்றே எனக்குப் புரியாமல் கண்ணில் நீர் வர வாய்விட்டு நான் சிரித்துக் கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். இப்போது அவள் முகத்திலும் கோபத்தின் அறிகுறி ஏதுமில்லை. மாறாக மெலிதான புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.
"மன்னிச்சுக்கய்யா. ரொம்ப நாளாச்சு இப்படி வாய்விட்டு சிரிச்சு" என்றேன் சிரிப்பை அடக்க முடிந்தபோது
"உன் கிட்டல்லாம் மனுசன் பேசுவானா?"
"அதனாலதான நீ பேசிக்கிட்டிருக்கே?" என்றேன். 'சட்' டென்று சிரித்தாள் அவள்.
"இப்படியே பேசிக்கிட்டிரு நீ. எப்பதான் திருந்துவே?"
"இதெல்லாம் ஒரே நாள்ல முடிஞ்சிடுமா என்ன? நாள் எடுக்கும். அதே மாதிரிதான் குழந்தைகளை கவனிச்சுக்குறதும் கொஞ்ச நாள் எடுக்கும் அப்புறம் பழகிடும்"
என் கண்களையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். கண்களின் ஓரம் மீண்டும் ஓர் ஒற்றைத் துளி. "உன் விருப்பம்பா. நான் எதையும் வற்புறுத்த விரும்பலை. எனக்கென்னமோ நீ தனியா கஷ்டப்படுவேன்னு தோணிச்சு. அதனாலதான்..." இப்போது அந்த ஒற்றைத்துளி கன்னத்தில் உருண்டோடியது. நான் கவனிக்காதது போல கண்களை அகற்றிக் கொண்டேன். கொஞ்ச அவகாசத்துக்குப் பின் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு அவளிடம் சொன்னேன். "எனக்குத் தெரியும். நீ கவலைப்படாதே"

மணலைத் தட்டி விட்டு எழும்பும்போதே அவள் பேசியது முழுவதையும் மனதிலிருந்தும் தட்டி விட்டுத்தான் புறப்பட்டேன். அந்த மாலைப் பொழுது எனக்குத் தந்த ஆறுதலை வார்த்தைகளில் ஒதுக்கிவிட முடியவில்லை.

துக்க விசாரிப்புகள் முடிந்ததும் அது அலுத்துப் போனவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக 'இனி என்ன செய்யப் போகிறீர்கள்?' என்பதை விதம் விதமாகக் கேட்டார்கள். ஆரம்பத்தில் ஏதோ சொல்லி விட்டுப் போகட்டும் என பொறுமை காத்தது போல வரும் நாட்களில் இருக்க முடியவில்லை. பேச்சைத் துவங்கியதுமே கோபம் வரத் துவங்கியது. பேசிக் கொண்டே கடைசியில் 'கல்யாணம் பண்ணிக்கோ' என்று அறிவுரை சொல்ல வந்திருக்கிறார்கள். ஏதாவது காரணம் மறக்காமல் சொல்கிறார்கள். 'இந்த நேரத்துல இப்படி பேசக் கூடாதுதான்' என்றொரு முகவுரை வேறு. 'அதான் தெரியுதுல்ல. அப்புறம் ஏன்யா?....' என்று கேட்கலாம் போலக் கோபம் வரத் துவங்கியது. ஆனாலும் பொறுமையாய் இருக்க மிகுந்த பிரயத்தனம் செய்து கொண்டேன். வயதில் முதிர்ந்தவர்கள் என்பதால் கூட இருக்கலாம்

ஆனால் மற்றவர்கள் எல்லாம் ஒருமுறையோடு கடமை முடிந்ததாக எண்ணிப் போய் விட்டபோதும் இந்த மனிதர் மட்டும் சளைக்காமல் காலையும் மாலையும் இதையே ஒரு கடமையாகச் செய்து கொண்டிருந்தார்.'என்ன தம்பி, எப்படி இருக்கீங்க?' என்று தொடங்கி அரைமணி நேரம் மறுமணம் செய்ய வேண்டியதனவசியத்தை வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். "யோசிக்கலாம்ங்க' என்றொரு பொதுவான பதிலை அவருக்கு ஆறுதலாகச் சொல்லிய போதும் என் சம்மதம் பெறாமல் போய்விடக் கூடாது என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார் என்பது புலப்பட்டதும்தான் எனக்கு எரிச்சல் அதிகமானது

"சரி இப்ப என்னை என்ன செய்யச் சொல்றீங்க?"
"இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கோங்க தம்பி. தப்பில்ல"
"யாருங்க ரெண்டாம் தாரமா கலயாணம் பண்ணிப்பாங்க.?"
"ஏன் ஆளா இல்லை? நீங்க ம்ம்ம்ன்னு சொல்லுங்க நான் கொண்டு வரேன் ஆயிரம் பேரை"
"சரி.ம்ம்ம் சொல்லிட்டேன் ஆனா, நீங்க ஆயிரம் பேரையெல்லாம் கொண்டு வர வேண்டாம்"
"அப்புறம்.."
"உங்க இளைய மகளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைதானே? அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு கொடுங்க போதும்"

இனி முதல் பத்தியைத் திரும்பப் படியுங்கள். அதன் பின்னர் நான் ஊருக்குத் திரும்பும்வரை அவர் வரவேயில்லை. வரமாட்டார் என்றும் எனக்கு நன்றாகவே தெரியும். அதற்காகத்தானே அப்படிக் கேட்டேன்.

நன்றி: ஆசிப் மீரான்
அமீரகத் தமிழ் மன்றம் - துபாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக