தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 மே, 2014

முனிவர்களும், ஞானியரும், கடவுளிடம், அதைக் கொடு; இதைக் கொடு என்று, வேண்டுவதில்லை!!


மனிதனின் ஆசைகள், எல்லைகள் அற்று, விரிந்து கொண்டே செல்லக் கூடியவை என்பதால், ஆசைக்கு அளவில்லை என்றனர். அத்தகைய ஆசைகளே, மனிதனின் துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். பிரார்த்தனையின் போது கூட, நாம், கடவுளிடம், ஆத்ம ஞானத்தையோ, முக்தியையோ வேண்டுவதில்லை. மாறாக, நம் ஆசைகளை, விண்ணப்பங்களாக சமர்ப்பித்து, அஸ்திவாரமே இல்லாமல், அரண்மனை கட்ட விரும்புகிறோம்; அல்லல்படுகிறோம். மகாபாரதத்தில், பாண்டவர்களுக்காக கண்ணன் தூது சென்ற போது, நடந்த நிகழ்ச்சி இது: கண்ணன், துரியோதனனிடம் தூது செல்லத் தயாராகிறார். சகாதேவனைத் தவிர, மற்ற ஐவரும் (திரவுபதி உட்பட) தங்கள் கருத்தை கூறினர்.

ஞானியான சகாதேவன், கண்ணனுடைய தெய்வத் தன்மையை விரிவாக வர்ணித்து, கண்ணா... பரம்பொருளே... ஆட்டி வைப்பவன் நீ! உன் திரு உள்ளத்தில் நினைத்திருப்பதை, எங்களால் எப்படி அறிய முடியும். உன் விருப்பத்தை ஏற்க வேண்டியவர்கள் நாங்கள்... என்றெல்லாம் சொல்லி, கடைசியாக, இந்தப் பாரதப் போரில், உன்னை சரணாகதி அடைந்திருக்கும் எங்கள் ஐவரையும், நீ, காக்க வேண்டும்... என, வேண்டுகிறார். அவர் வேண்டியது அப்படியே நடக்கிறது. ஆனால், அவர்களின் பிள்ளைகளான, உப பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டனர். அதனால்தான், முனிவர்களும், ஞானியரும், கடவுளிடம், அதைக் கொடு; இதைக் கொடு என்று, வேண்டுவதில்லை. மாறாக, அவன் விருப்பத்திற்கு, தங்கள் வாழ்க்கையை ஒப்படைப்பதாக கூறி, முழு சரணாகதி அடைகின்றனர்; காக்கப்படுகின்றனர். ஆகையால், ஆண்டவனிடம், அதையும், இதையும் வேண்டாமல், தூய்மையான பக்தியை மட்டும் வேண்டுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக