தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 மே, 2014

தூர்வாச முனிவரின் சாபத்திற்கு................


தூர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவர்கள் தங்களின் இளமையையும் செல்வத்தையும் இழந்தனர். தேவர்களின் தலைவன் இந்திரன் தேவ குருவின் உபதேசப்படி பாற்கடலை கடைந்து தான் இழந்த செல்வங்களையும், அமுதத்தையும் பெற முற்பட்டான். தேவர்கள் மட்டும் இச்செயலை செய்ய இயலாது என்பதை உணர்ந்த இந்திரன், தன் தேவர் குல வைரிகளான அசுரர்களையும் துணைக்கு அழத்தான். 

மந்திரமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைய தொடங்கினார்கள். மலை கடலில் அமிழாவண்ணம் கூர்மவதார பெருமான் தாங்கி நின்றார். ஆனால் மத்தாகிய மலை அசையவில்லை.

எனவே தேவர்க்கோன் பலசாலிகளான கார்த்தவீரியார்ச்சுன்ன் என்ற 1000 கரங்களையுடைய அரசனையும், ஈடில்லா சிவபக்தனும், மாபெரும் வீரனுமாகிய வானர வேந்தன் வாலியையும் துணைக்கு வேண்டினான். வாசுகியின் தலைப்புறத்தில் அசுரர்களுடன் 1000 கை படைத்த வேந்தன் கார்த்தவீரியார்ச்சுனனும், வாசுகியின் வால்புறத்தில் தேவர்களுடன் வானர வேந்தன் வாலியும் சேர்ந்து ஏகாதசி திதியன்று பாற்கடலை கடைந்தார்கள்.

இவ்வாறு கடையும் போது முதலில் அபசகுணமாக ஆலகால நஞ்சு தோன்றியது. போதாதக்குறைக்கு வாசுகியும் நச்சினைக் கக்கியது. ஆலகால விடத்தைக் கண்ட அனைவரும் அச்சம் கொண்டு இறைவன் சிவபெருமானை சரண் புகுந்தனர்.

ஈரேழு 14 உலகத்தையும் காக்க சிவபெருமான் அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால நஞ்சினை உண்டார். அதனைக் கண்டு பதறிய இறைவி பார்வதிதேவி, இறைவன் நஞ்சினை உண்டால் அனைத்துலகங்களும் அழிந்து போகும் எனக் கருதி இறைவனின் கழுத்தினில் தனது கையை வைத்து இறுகப் பற்ற, நீல நிறமான அந்த நஞ்சு கீழேயும் இறங்காமல், மேலேயும் ஏறாமல் கண்டத்திலேயே தங்கியது. சிவபெருமானின் அருளினால் மறுநாள் அதாவது துவாதசி திதியன்று பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.

விநாயகர் வழிபாடு செய்யாமல் பாற்கடலை கடைந்த்தன் விளைவாகத் தான் ஆலகால விடம் தோன்றியது என்பதை உணர்ந்த தேவகுரு கடல் நுரையையே விநாயகராக பிடித்து வைத்து வழிபாடு செய்தார். பின்பு பாற்கடலைக் கடைந்து அமுதத்தையும், இழந்த செல்வங்களையும் பெற்றார்கள் தேவர்கள். திருமால் மோகினி அவதாரம் கொண்டு அமுத்த்தை வழங்க அதை உண்ட தேவர்கள் இறைவனை நினையாமல் மகிழ்ச்சியுடன் இருந்தனர். பின்பு தங்களின் பிழையை உணர்ந்து சிவபெருமானை துதித்த திரயோதசி திதியே பிரதோஷ நாள் ஆகும்.

இறைவன் நஞ்சுண்டதனால் நஞ்சுண்ட நாதன் எனவும், நீல நிறமான கழுத்தினை உடையதால் நீலகண்டன் எனவும் அழைக்கப்பட்டார். நஞ்சின் வேகத்தினால் சிவபெருமான் மயக்கமுற்று கிடந்தார். அவர் நஞ்சினை பருகிய அந்த நேரம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அதன் பின்பு எழுந்த இறைவன் தாண்டவம் ஆடினார்

நந்தி மத்தளம் வாசிக்க, கலைவாணி வீணை மீட்ட, இந்திரன் குழல் ஊத, திருமகள் தாளம் வாசிக்க தேவரும், மூவரும் அனைத்துலக உயிர்களும் இறைவனை போற்ற சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடினார். அந்த சமயத்தில் நந்தி தனது தவத்தை துறந்து சிவனை நோக்க, அவரின் இரு கொம்புகளுக்கிடையே இறைவி இறைவனின் திருநடனத்தை கண்டாள்.
பிரதோஷ காலத்தில் அனைத்து கடவுளர்களும் இறைவன் சிவபெருமானின் திருநடனம் காண சிவாலயம் வந்து சேர்வர். சிவாலயத்தில் உள்ள மற்ற கடவுளர்களின் சந்நிதிகளும் மூடப்பட்டோ அல்லது திரையிடப்பட்டோ இருக்கும். இச்சமயத்தில் மற்ற கோவில்களுக்கு செல்லக் கூடாது. அங்குள்ள தெய்வங்களும் சிவாலயம் வந்து சிவதரிசனம் காண குழுமியிருக்கும்.
பிரதோஷ காலங்களில் நாம் (வீட்டிலோ அல்லது திருத்தலங்களிலோ அல்லது வேறு இடங்களிலோ) உணவை உட்கொள்ளல் ஆகாது. சிவ சிந்தையுடன் சிவாலய வழிபாடு செய்திடல் வேண்டும். அச்சமயம் நமக்கு மற்ற தெய்வங்களின் ஆசிகளும் கிட்டும். பிரதோஷ காலத்தில் நந்தி தன் தவத்தை துறந்து இறைவன் மற்றும் இறைவியுடன் அபிசேக ஆராதனைகளை ஏற்பார். அச்சமயங்களில் நந்தியெம்பெருமானிடம் நமது கோரிக்கைகளை வைக்க அவர் இறைவிக்கும், இறைவனுக்கும் தெரிவித்து அவற்றை நிறைவேற்றுவார்.

பிரதோஷ காலத்தில் செய்யும் சிவ வழிபாடு மிக மிக உயர்வானது. நாள் முழுவதும் உண்ணாநிலையை கடைபிடித்து பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்து பிரதோஷ காலம் முடிந்தவுடன் தமது விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இவ்வாறு செய்து வர நமது அனைத்து பாவங்களும் அழிந்து போகும். பிரதோஷ காலங்களில் ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரத்தை மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து செபிக்க வேண்டும். அவ்வாறு செபிப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
பிரதோஷ காலங்களில் மேற்கண்ட திருநீலகண்ட பதிகத்தை பாராயணம் செய்து வர நமது கர்ம வினைகளும், சகல பாவங்களும் அழிந்து போகும். நமது கர்ம வினைகள் தொலைந்தால் செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் இவை நெருங்காது.
பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரையும், பிரதோஷ காலம் முடிந்த பின்பு கால பைரவரையும் வழிபாடு செய்யும் உயிர்கள் பிறவிக் கடலிலிருந்து விடுபட்டு சிவ லோகத்தில் சிவ கதியை அடையும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் ஹ்ரீம் சரபேஸ்வராய நமஹ

ஓம் ஹ்ரீம் மகா பைரவாய நமஹ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக