தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 30, 2014

கற்பித்தானா?


கல்லைத்தான் மண்ணைத்தான்

….காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான்

….எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?

அல்லைத்தான் சொல்லித்தான்

….ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்

….புவியில்தான் பண்ணினானே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்

சூழல்: வறுமையில் வாடும் ஒரு புலவர். தன்னுடைய நிலைமையை எண்ணி வருந்திப் பாடுகிறார்

தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா, என்னைப் படைத்தபோதே கையில் கொஞ்சம் தங்கத்தைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கவேண்டும், இல்லாவிட்டால், கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும்.

அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் படுகின்ற துன்பத்தை எங்கே சொல்லி நோவது? இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே!

துக்கடா
உரையைவிடப் பாட்டுதான் நன்றாகக் களை கட்டுகிறது. இல்லையா? 
அதனால்தான், ’பராசக்தி’ என்ற திரைப்படத்தில் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள் அழகான வசனமாகப் பயன்படுத்தப்பட்டன. மீதிப் பாட்டையும் சேர்த்துப் படித்தால் அந்தக் காலக் கவிஞர்கள் அனுபவித்த வேதனை முழுசாகப் புரியும்

இந்தப் பாட்டை நினைவில் வைத்துத்தான் அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் என்று கவியரசர் எழுதியாகச் சொல்வார்கள். அதை மெல்லிசை மன்னரும் உறுதிபடுத்தியிருக்கிறார்.

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது மருவிய காலத்தில் வாழ்ந்த புலவரல்லவா. அதான் இந்த நிலை.

பசியில் வயிறு சுருக்கிடும் போது, கையில் உணவில்லாத போது, எதையாவது சாப்பிட்டு வயிறு நிறையாதா என்று ஒரு வேதனை வரும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பஞ்சம் வந்ததாகச் சொல்வார்கள். அப்போது மக்கள் களிமண்ணையும் உண்டிருக்கிறார்களாம். வீட்டுப் பெரியவர்கள் பார்த்ததைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்காவிலிருந்து வந்த சோளம் பலருக்குப் படியளந்திருக்கிறது அப்போது.

அதனால்தான் கொடிது கொடிது வறுமை கொடிது என்று சொன்ன ஔவை, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்றாள்.

ஏன்? சிறுவயதுதான் இன்பங்களை அனுபவிக்கும் வயது. ஒரு வயதுக்கு மேல் இன்பங்களில் நாட்டம் குறைந்து விடும். விதம்விதமாக சாப்பிடுவதில் ஆசை குறையும். ஒருவேளை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பெரிதாகத் தோன்றாது.
ஆனால் இளமையில் ஒருவன் கிடக்கும் பட்டினி ஈரேழு பதினாறு உலகங்களும் தீப்பிடித்து எரியும் வெப்பத்திற்கு இணையானது. அதனால்தான் இன்றைக்கு உலகளாவிய அளவில் பிரச்சனைகள். தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிக்க வேண்டாம். ஜெகம் கொஞ்சம் கொஞ்சமாக தானே அழியும்.

வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.

கவிஞர்கள் உண்ண உணவின்றி தவிப்பது எவ்வளவு பெரிய கொடுமை. .இன்றும் எத்தியோப்பியாவில் பஞ்சக் கொடுமையினால் மண்ணை உருட்டிக் காயவைத்து சாப்பிடுவதாகப் படித்தேன். என்ன ஒரு இயலாமை நிலை. இராமச்சந்திரக் கவிராயர் சரியாகத்தான் பிரம்மனைக் கேட்டு இருக்கிறார். கலைமகளின் அருள் கிடைத்தவருக்கு திருமகளின் அருள் கிடைக்காதது எந்த வகையில் நியாயம்? பசி பட்டினியால் யார் வாடினாலும் அது தர்மம் ஆகாது, அதனினும் கலைஞர்கள் வாடினால் வள்ளலார் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்
ஈடு – ஒப்பு, முதற் பதிப்பு

பசிக் கொடுமை அறியா உலகத்தை படைக்க இறைவனை வேண்டுவோம்!!!
ப-பி.

No comments:

Post a Comment