எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத், மகாராட்டிரம் நகரிலிருந்து 30 கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.]இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும் .
இங்குள்ள இந்துக் குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத் திறனையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால் இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் கைலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக் குடைவரை, பல மாடிகளைக் கொண்ட கோயில் வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ள இக் கோயில் ஏதென்ஸில் உள்ள பார்த்தினனிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும்
எல்லோரா மலையில், குடைந்து கட்டப்பட்டிருக்கும் கைலாசநாதர் கோயிலைப் பார்த்தவுடன் அனைவரின் மனங்களிலும் ஒரு கேள்வி எழும். உலக அதிசயங்களில் ஒன்றாக இதை ஏன் சேர்க்கவில்லை என்பதே எது.
அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலின் அடி முதல் நுனி வரை மலையை குடைந்தே வடிக்கப்பட்டுள்ளது. மலையின் 3 பக்கங்கள் செங்குத்தாக வெட்டப்பட்டுள்ளன. கோயில் பிரகாரத்துக்காக அந்தக் கற்பாறை யில் பெரிய பள்ளம் வெட்டப்பட்டு ள்ளது. நடுவில் பெரிய பாறையை உளியால் செதுக்கி, அதில் பிரதான கோயிலை வடித்திருக்கிறார்கள். 83 மீட்டர் நீளம், 46 மீட்டர் அகலம், 33 மீட்டர் ஆழத்தில் கோயில் உருப்பெற்றுள்ளது.
விமானத்துடன் கூடிய இந்த கைலாசநாதர் கோயிலை வடிக்கச் செய்தவர் ராஷ்டிரகூட வம்சத்தைச் சேர்ந்த முதலாவது கிருஷ்ணர் என்ற மன்னர். அவருடைய காலம் கி.பி. 757 முதல் 773 வரை.
இந்துக் கோயில்களின் கட்டிடக் கலை அமைப்பை ஆராய்ந்த அறிஞர் ஜி.பி. டேக்லுர்கார் இந்தக் கோயிலுக்கு 100 முறைக்கு மேல் வந்துள்ளார். ஒரு முறை இந்தக் கோயிலுக்கு அவருடன் ஓர் ஆங்கிலேயேரும் வந்தார். கோயிலை மிகவும் பாராட்டிய அவர், "அப்படி என்னதான் இந்தக் கோயிலில் சிறப்பு?" என்று கேட்டார். "மலையைக் குடைந்து அதிலிருந்து பெரும் பாறையைத் தனியாக வெட்டி, அந்தப் பாறையையே சிறு பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி சன்னதிகளாகவும் யானைகளாகவும் கீர்த்தி ஸ்தம்பங் களாகவும் கட்டியிருக்கிறார்கள். கோயில்கட்ட வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்துவரவில்லை. இந்தக் கோயிலில் உள்ள அனைத் தும் இதே மலையின் கற்களாலா னவை" என்று டேக்லுர்கார் பதில் அளித்தார்.
கி.பி. 6-வது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரை இக்கோயிலை கட்டும் வேலை யில் ஏராளமான ஸ்தபதிகள், கல் தச்சர்கள், கைவினைக் கலைஞர் கள், கோயில் கட்டுமானத்தில் தலைசிறந்த விற்பன்னர்கள், மலைகளைக் குடைவதில் கைதேர்ந் தவர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 34 குகைகள் குடையப்பட்டன. எண்கள் இடப்பட்ட 34 குகைகளும், எண்களிடப்படாத 7 குகைகளும் ஜைன, பவுத்த, இந்து மத நம்பிக்கை களை உணர்த்துவதாக உள்ளன.
இவற்றில் 1 முதல் 12 வரையிலான குகைகள் பவுத்தர்களின் நினைவாலயங்கள். 13 முதல் 29 வரை இந்துமதச் சாயல் உள்ளவை. 30 முதல் 34 வரையுள்ளவை ஜைனர்களுடையவை. 16-ம் எண் குகைதான் நாம் வியந்து கொண்டிருக்கும் கைலாசநாதர் கோயில் வளாகம்.
இந்தக் கோயிலைக்கட்டி முடிக்க 150 ஆண்டுகள் ஆகியிருக் கின்றன. மூன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். முதலாவது கிருஷ்ணர் காலத்தில் தொடங்கிய கோயில் கட்டுமானம் யாருடைய காலத்தில் முடிந்தது என்று தெரியவில்லை. அதே வேளையில், கோயில் கட்டுமானம் இன்னமும் பூர்த்தியடையவில்லை என்பதற்கு அடையாளமாக ஆங்காங்கே சில வேலைகள் முடிக்கப் பெறாமல் இருக்கின்றன.
கோபுரம் இரட்டை அடுக்கிலா னது. நந்தி மண்டபமும் கோபுரமும் 2 அழகிய கல்துண்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிகரம் 3 அடுக்கு களைக் கொண்டது. போகப்போக குறுகிச் செல்லும் அகலம் உள்ளது. இந்தக் கோயிலில் கைலாசநாதர் மேற்கு நோக்கியவண்ணம் இருக் கிறார்.
இந்தக் கோயில் முழுவதையும் தங்களுடைய தோளில் தாங்குவ தைப்போல மிகப்பெரிய யானைச் சிற்பங்கள் அடிபீடத்தில் வரிசை யாக வடிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்பங்களில் ராவணன் தன்னு டைய 10 தலைகளில் 9 தலைகளை சிவனுக்கு காணிக்கை தருவது வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த 9 தலைகளையும் சிவன் மாலையாகக் கோர்த்து அணிந்திருப்பதைப்போல சிற்பம் காட்சி தருகிறது.
இன்னொருபுறத்தில் பக்த மார்க்கண்டேயரைப் பற்றிய காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.
சிவனுக்கும் பார்வதிக்கும் திரு மணம் நடந்ததைக் காட்டும் கல்யாணசுந்தரர் சிற்பமும் அருகிலேயே முப்புரங்களையும் எரித்த திரிபுராந்தகர் சிற்பமும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. ஒரு தேரில் சிவன் தன்னுடைய கால்களை அகலவிரித்து நின்று கொண்டு வில்லில் அம்பைப் பூட்டி 3 அசுரர்களின் தலைகளுக்கும் குறிவைப்பதுபோல் திரிபுராந்தகர் சிலை இருக்கிறது. அந்தத் தேருக்கு பிரம்மாதான் சாரதி. 4 வேதங்கள் தேரின் சக்கரங்களாகத் திகழ்கின்றன. இதையே அடிப்படை யாகக் கொண்டு தஞ்சாவூர்க் கோயிலொன்றில் திரிபுராந்தகர் அழகிய ஓவியமாகத் தீட்டப்பட் டிருக்கிறார்.
ஒரு சிற்பம் சிவனின் நாதாந்த தாண்டவத்தைச் சித்தரிக்கிறது. 108 தாண்டவங்களில் இதுதான் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதில்தான் சிவன் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கிறார்.
இந்தக் கைலாசநாதர் கோயிலில் சிற்பிகள் எது எது எங்கே இருக்க வேண்டுமென்று தங்களுக்குள் நன்கு தீர்மானித்துவிட்டு அற்புத மாக அப்படியே வடித்துள்ளனர். கைக்குவந்தபடி சிற்பங்களை வடிக்கவில்லை. உலகின் அதிசயங் களில் ஒன்றாகக் கருதத்தக்க வகை யில் அற்புதமான பக்தியோடு, கலை ரசனையோடு, ஈடுபாட்டோடு இந்தச் சிற்பங்களை வடித்துள் ளனர், ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். அதிலும் 3 வெவ்வேறு தலைமுறை யைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஒரே கோயிலுக்காக உழைத்துள்ளனர். இதில் பக்தி மட்டும் இல்லை, மிகச் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கவேண்டும் என்ற தாகமும் சேர்ந்து பரிணமித்துள்ளது.
தென்னிந்திய கோயில்களே முன்னோடி
எல்லோரா கைலாசநாதர் கோயிலுக்கு முன்னோடி தென்னிந்தியாவில் கட்டப்பட்ட 2 கோயில்கள்தான் என்று அறிஞர்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கர்நாடகத்தின் பட்டடக்கல் என்ற இடத்தில் உள்ள விருபாட்சீஸ்வரர் கோயில் ஆகியவற்றைப் பார்த்துத்தான் எல்லோரா கோயில் கட்டப்பட்டது என்கின்றனர். இரண்டுமே அடியிலிருந்து மேல் வரை கட்டப்பட்ட தரைதளக் கோயிலாகும். எல்லோரா கோயில் மேலிருந்து கீழாக குடைந்து கட்டப்பட்டது. மலையில் பாறை எந்த ஆழம் வரை இருக்கும், போகப்போக என்ன தன்மையில் இருக்கும் என்றெல்லாம் தெரியாது. எனவே காஞ்சிபுரத்திலும் பட்டடக்கல்லிலும் உள்ள கோயில்களை முதலில் பார்த்து அளவெடுத்து, அதை இரண்டால் பெருக்கிக்கொண்டு அவற்றைப்போலவே எல்லோராவில் அமைத்துள்ளனர் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
https://youtu.be/
இந்த video வை உங்களின் விருப்பத்திற்கு படங்களாக மாற்றி எடுத்து
இணையங்களில் பரப்புங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக