தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஜனவரி, 2017

சரியானவரிடம் பெற்றால்தான் மந்திரம் மகிமை... மற்றபடி வெற்றுச் சொற்களே!

இந்து மதத்தின் அடிப்படை வேதங்கள்தான். வேத மந்திரங்களின் சாரம் உபநிஷதங்கள். பிற்காலத்தில் இந்த புண்ணிய பூமியில் தோன்றிய எண்ணற்ற மகான்கள் நம்முடைய நல்வாழ்க்கைக்காக பல மந்திர சக்தி கொண்ட ஸ்லோகங்களை அருளி இருக்கின்றனர். இந்த மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவோ அல்லது பாராயணம் செய்யவோ வேண்டும். உச்சரிப்பு சிறிது பிசகினாலும், மந்திரங்களின் அர்த்தம் மாறி விபரிதமான பலன்களைத் தந்துவிடும். அதனால்தான், மந்திரங்களை தகுந்த குரு மூலமாக உபதேசம் பெற்று, உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவேண்டும். அப்போதுதான் அந்த மந்திரத்துக்கு உரிய பலனை நாம் பெற முடியும்.
மந்திரம்
இந்த தத்துவத்தை விளக்கும் வகையில் பகவான் ரமண மகரிஷி அருளிய ஒரு கதையை இங்கே பார்ப்போம்.
ஒரு அரசன் மாலை வேளையில் தனது மந்திரியைச் சந்திக்க விரும்பினான். மந்திரியின் வீட்டுக்குச் சொல்லி அனுப்பினான். காவலர்கள் சென்று அழைத்தும் மந்திரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காரணத்தைத் தெரிந்துகொள்ள நினைத்த அரசன், மந்திரியின் வீட்டுக்கே போனபோது, மந்திரி வெளியே வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அரசனைச் சந்தித்தார். “இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்?” என்று கேட்டான் அரசன். ‘’அரசே! நான் வெளியே சென்றிருந்தேன். வீட்டுக்குத் திரும்பிய பின் நீராடிவிட்டு மாலை நேரத்தில் செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தைச் செய்து முடித்தேன். அதனால் நேரமாகிவிட்டது!” என்று மந்திரி சொன்னார்.
“சந்தியாவந்தனமா? அது என்ன? அதை எனக்குக் கற்றுக் கொடும்!” என்று கேட்டான் அரசன். “அரசே! எனக்கு அந்தத் தகுதி இல்லை. தக்க ஓர் ஆசானிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு அதற்கு உரிமை உண்டு என்று கருதினால் அவர் கற்றுக் கொடுப்பார்!” என்றார் மந்திரி. “சந்தியாவந்தனத்தின் முக்கியமான பகுதி என்ன?” என்று கேட்டான் அரசன். “காயத்ரீ மந்திரமே அதில் முக்கியமானது!” என்று மந்திரி கூறியதும் அரசன் “அதையாவது எனக்குக் கற்றுக் கொடும்!” என்று கேட்டான் மந்திரி. “அரசே! மன்னிக்க வேண்டும். மந்திரம் எதையுமே ஓர் ஆசாரியன் உபதேசிக்கக் கற்றுக் கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் அதற்கு மதிப்பு இல்லாமற் போய்விடும்!” என்றுகூறி, மறுத்துவிட்டார்.
ரமண மகரிஷி
அரசன் இதை ஓர் அவமானமாகக் கருதினான். காயத்ரீ மந்திரத்தை ஒரு சுவடியில் வேறு இடத்திலிருந்து எழுதிக் கொண்டு வரச் சொல்லிப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டான். ஆயினும் அவனுடைய மனதுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. மந்திரியிடமே இதையும் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது என்று எண்ணினான். அன்று அரச சபையில் வேலைகள் முடிந்ததும் தளபதியை மட்டும் உடன் நிறுத்திக் கொண்டு, மந்திரியிடம் இதைப்பற்றிக் கேட்டான். “நீங்கள் சொல்லும் மந்திரம் சரிதான். ஆனால், உச்சரிப்பும் சொல்லும் முறையும் சரியில்லை. ஓர் ஆசானிடம் கற்றிருந்தால் அவர் சரியாகக் கற்று கொடுத்திருப்பார்!” என்றார் மந்திரி. “ஏன்? அதற்கு என்ன அவசியம்?” என்று மீண்டும் கேட்டான் அரசன்.
மந்திரி ஒருகணம் யோசித்தார். பிறகு, திரும்பித் தன்னுடன் இருந்த தளபதியிடம், “தளபதியாரே! இவரைக் கைது செய்யும்!” என்று அரசரைச் சுட்டிக் காண்பித்தார். தளபதி நடுநடுங்கிப் போனார். அரசரைக் கைது செய்வதாவது? ஆனால், தனது அச்சத்தை வெளியிடாமல், எதுவும் செய்யாமல் இருந்துவிட்டார். அரசனுக்கு மந்திரியின் செய்கை மிகுந்த கோபத்தை உண்டாக்கிற்று. வேகமாகத் தளபதியிடம் திரும்பி, “தளபதியாரே! இவரைக் கைது செய்யும்!” என்று கோபத்துடன் உத்தரவிட்டான். தளபதி உடனே பாய்ந்து மந்திரியின் கையைப் பற்றிக் கைது செய்ய முற்பட்டார்.
குரு
மந்திரி புன்னகையுடன் “அரசே! மன்னிக்க வேண்டும். நான் கூறியதன் பொருளை விளக்கவே அப்படிச் செய்தேன்!” என்றார். “அது எப்படி?” என்று கேட்டான் அரசன். “நான் சொன்ன அதே சொற்களை நீங்கள் சொன்னீர்கள். அதற்குப் பலன் கிடைத்தது. ஏனெனில் அதை உபயோகிக்கும் பாத்திரமும், சொன்னவிதமும், அதற்குரிய அதிகாரமும் அதற்கு மதிப்பைத் தந்தன. அதையே நான் சொன்னபோது பலன் கிடைக்கவில்லை. மந்திரங்களின் விஷயமும் அதுவேதான்!” என்றார் மந்திரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக