மாபெரும் கோட்டைகள் மனிதனின் வாசஸ்தலமாகலாம்,ஆனால் மனிதனின் வாசஸ்தலமே பின்னாளில் கோட்டையாக உருவான வரலாறு இலங்கைக்கு மட்டுமே உண்டு.
ஆம்! இராவணன் கட்டிய கோட்டை, மன்னாரின் அடையாளச்சின்னம், என பல சாதனைகளை தன்னகத்தே கொண்ட வரலாற்று இடம்தான் அல்லிராணி கோட்டை.
கம்பீரத்தின் அடையாளம் போல் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவும், அல்லிப்பூக்களின் வாசனைக்கு மத்தியில் குறித்த கோட்டை அமைந்திருப்பதானால் அல்லிராணி கோட்டை எனப் பெயர் வந்ததாக வரலாறு கூறுகின்றது.
மன்னார் முசலிப்பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராமத்தின் கடலோரப்பகுதியல் அமைந்துள்ளது இக்கோட்டை. ஆனால் தற்போதைய நிலைமையில் பெரும்பாலான பாகங்கள் அழிவடைந்து எஞ்சியுள்ள மிகுதி பகுதிகளைக் கொண்டு நிலைத்து நிற்கின்றது.
இப்பகுதி மக்களால் இராவணன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை என்றே அல்லிராணி கோட்டை அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் வரலாறு கூறும் உண்மைகளையும் ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அந்தவகையில் இலங்கைத்தீவின் முதல் பிரித்தானிய ஆளுனர் பிரட்ரிக் நோர்த் அவர்களால் உருவாக்கப்பட்ட வாசஸ்தலமே இக்கோட்டை எனவும் கூறப்படுகின்றது.
அவரால் உருவாக்கப்பட்ட வீடு எனவும் 4 அறைகளை கொண்டிருந்ததாகவும் இரண்டு தட்டுக்களை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகின்றது.
மன்னார் தீவின் அழகிய கட்டடமாகவும், நிர்மாணக்கலைக்கு அமைவாக கட்டப்பட்ட ஒரேயொரு கட்டடம் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
ஆனால் உண்மையில் இக்கோட்டை இராவணனால் உருவாக்கப்பட்டதா? அல்லது பிரட்ரிக் நோர்தினால் உருவாக்கப்பட்டதா? என்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவிய வண்ணமே உள்ளன.
உண்மையில் இக்கோட்டை இராவணனால் கட்டப்பட்டதாக இருந்தால் பல யுகங்களை தாண்டி பரிணமிக்கும் உலகின் ஒரேயொரு கோட்டை என்ற சிறப்பை பெறும்.
தனித்த கடற்பகுதி, அலைகளின் சத்தம், அமைதியான காற்று?, என அல்லி ராணி கோட்டையின் சிறப்பம்சம் வேறெங்கும் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.
கடல் அலையின் தாக்கத்தால் கோட்டையின் பகுதிகள் சில கடலில் மூழ்கி போய்விட மிகுதி பாதியும் சுனாமியின் தாக்கதால் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
யுத்த காலத்தில் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் யுத்தத்தின் பின் பெரும்பாலானோர் படையெடுக்கும் ஓரிடமாகவும் அல்லி ராணி கோட்டை மாறி வருகின்றது.
முறையான புனரமைப்பு பணிகள் இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இக்கோட்டை எதிர்காலத்தில் புணரமைக்கப்படுமா? என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாகவும் மாறியுள்ளது.
பெயருக்கேற்ற பிரமிப்பும் அழகும் அடியோடு அழிந்து போய்விட இன்று செங்கல் சுவர் மட்டுமே இக்கோட்டையின் அடையாளச் சின்னமாக திகழ்கிறது.
தனிமையின் அடையாளமாக திகழ்ந்த அல்லிராணிக் கோட்டை இனியும் தனிமையில் அழியவிடாமல் காப்பது எம்மவரின் தலையாய கடமையும், அதேவேளை உணர்சி பூர்வமான செயற்பாடும் ஆகும்.
எதிர்காலத்தில் எமக்கு தமிழில் பெயர்சொல்லும் அளவுக்கு இன்னுமொரு கோட்டை அமையப்போவதில்லை, மீண்டும் உயிர் கொடுத்து அழிந்த சுவடுகளை தூசு தட்டித் எடுப்போமானால் கம்பீரமாக தலைநிமிர்ந்து சொல்லலாம் நிர்மாணக்கலைக்கு அமைவாக இலங்கையில் கட்டப்பட்ட ஒரேயொரு கோட்டை “அல்லிராணி கோட்டையென்று”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக