தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 21, 2017

கண்ணியம் கொண்டு கருட பகவானை வழிபடுங்கள்: அப்புறம் பாருங்க உங்கள் வாழ்க்கையை..!

ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருட பஞ்சமியும் ஒன்று. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம்.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும் திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம்.
கருடனைப் போல பலசாலியும், புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக தாய்மார்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.
பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார்.
விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு.
கருடஆபரணங்கள்
கருடனை, எட்டு வகையான ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. அந்த எட்டு ஆபரணங்களும் எட்டு பாம்புகளை குறிக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
  • பூணூல் - வாசுகி.
  • இடது கையில் - ஆதிசேஷன்
  • அரையில் அணி - தட்சகன்
  • மாலை - கார்கோடகன்
  • வலது காதில் - பத்மன்
  • இடது காதில் - மகா பத்மன்
  • திருமுடியில் - சங்கபாலன்
  • வலது தோள்பட்டையில் - குளிகன்
கருட பஞ்சமி விரதமுறை
கருடன் பஞ்சமியில் பிறந்ததாலும், ஆவணி மாதம் வளர்பிறையில் பஞ்சமி அன்று அமிர்தத்தைக் கொண்டு வந்ததாலும் இது கருட பஞ்சமி என்றானது.
ஒவ்வொரு வருஷமும் ஆடி அல்லது ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுவது, கருட பஞ்சமி என்று சொல்லப்படுகின்ற நாகபஞ்சமி நோன்பு. இதை சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் விரதம் இருந்து செய்வார்கள்.
கருட பஞ்சமியன்று வீட்டைத் தூய்மை செய்து, மாவிலைத் தோரணம் கட்டி, அன்னை கௌரியை பூஜிக்க வேண்டும்.
கௌரி அம்மன் நாகத்தின் உருக்கொண்டு வருவதாக ஐதிகம். நம்முடைய சக்திக்கு தகுந்தாற்போல வெண்கலம், செம்பு அல்லது வெள்ளி உலோகத்தில் சிறு நாக உருவத்தை வைத்து வணங்கலாம்.
முதலில் முழுமுதற் கடவுள் விநாயகருக்கு பூஜை செய்தபின் ஒரு சிறிய தட்டில் நாக உருவத்தை வைத்து, மஞ்சள், குங்குமம் தரித்து, பூக்களால் அஷ்டோத்திரங்களைக் கூறி பூஜிப்பர். பின்பு பசும் பால் ஊற்றி வணங்குவர். நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை, பாயசம் செய்து வைத்து, தூபம், தீபம், கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்குதல் மரபு.
அன்று விரதம் இருந்தால் நாகதோஷம் விலகும். சிலர் கூடுதலாக கருட பஞ்சமியன்று ‘பணிகௌரி பூஜை’யும் செய்வர். மாலையில் அம்மன் கோயிலில் உள்ள புற்றுகளுக்கு பசும்பாலும், நைவேத்தியமாக பால் கொழுக்கட்டையும், பாயசமும் படைத்து வணங்குவர்.
கருட பஞ்சமி பூஜை செய்த பின்பு, நாக உருவத்திற்கு நோன்பு கயிறு சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.
கருட தரிசனம் தரும் பலன்கள்
அதிகாலையில் அருணோதய நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். கிழமைகளில் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
  • ஞாயிறு– பிணி விலகும்.
  • திங்கள்– குடும்ப நலம் பெருகும்.
  • செவ்வாய்– துணிவு பிறக்கும்.
  • புதன்– பகைவர் தொல்லை நீங்கும்.
  • வியாழன்– நீண்ட ஆயுள்.
  • வெள்ளி– திருமகள் திருவருள் கிட்டும்.
  • சனி– முக்தி அடையலாம்.

No comments:

Post a Comment