ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தை மாத பூச நட்சத்திரத்தன்று, முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும்.
அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.
திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக் கரையில் தவமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.
பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குருபகவானாகிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.
பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.
நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வேள்வி மலை. இங்குள்ள கோவிலில் முருகப் பெருமான் எட்டடி, எட்டு அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் சுமார் ஆறடி, இரண்டு அங்குல உயரத்தில் ஸ்ரீவள்ளியம்மை உள்ளாள். வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. எனவே இங்கு தெய்வானை விக்கிரகம் இல்லை. ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்சவம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள ‘அசுவமேத’ பிராகாரத்தை வலம் வந்தால் ‘பிரம்மஹத்தி’ தோஷம் நீங்கும் என்பர்.
தைப்பூசத்திருநாள் முருகப் பெருமானுக்குரியதாகப் போற்றப்பட்டாலும், தில்லை வாழ் நடராஜப் பெருமானுக்கும் உரிய நாள் என்றும் புராணம் கூறுகிறது.
ஆதிகாலத்தில் புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன், தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார். அதுவே ஆனந்த நடனம் ஆகும். இந்த அற்புத நிகழ்வு சிதம்பரத்தில் தை மாதத்தில் பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் பல திருத்தலங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன்.
அப்போது ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது.
கும்பகோணத்திலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. இத்தலத்தில் மட்டும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய தன் ஐந்து பத்தினிகளுடன் தேரில் பவனி வருவார்.
இலங்கையில் நல்லூர் என்னும் திருத் தலத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் வேலாயுதத்தை கருவறையில் எழுந்தருளச் செய்து, அதை முருகப் பெருமானாகக் கருதி வழிபடுகிறார்கள். வேலின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகிறார்கள். இங்கு தைப்பூச விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர்.
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரி லிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ‘பத்து குகை’ என்னும் இடம். தரைமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் இந்தக் குகை உள்ளது. இந்தக் குகைக் கோவிலின் முகப்பில் 42.7 மீட்டர் உயரமுள்ள முருகப்பெருமான் அருள் புரிகிறார். 140.09 அடி உயரமுள்ள. இந்தச் சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானதாம். இந்த முருகன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். பத்து குகை முன்புறமுள்ள பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள். இங்கு தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள் மற்றும் முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அப்பொழுது அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முருகப் பெருமானைத் தரிசித்தால் புண்ணியம் சேரும் என்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக