வாழ்க்கையில் நல்ல திருப்பம் வேண்டுபவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம்; பிறக்கும் மனிதர்க்கெல்லாம் புகலிடமாக அமைந்திருக்கும் கோயில்; முன்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம்; வீடு கட்டுவதற்கு பூஜிக்கப்பட்ட கற்கள் வேண்டுவோர் செல்லவேண்டிய தலம்!
கோயில்
இத்தனை சிறப்புகளுக்கும் உரியதாக அமைந்திருக்கிறது ஓர் அற்புத திருத்தலம். நாகப்பட்டினம் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் திருத்தலம்தான் அந்தத் தலம். நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர்; இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு.
வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் இந்தக் கோயிலில் 18 சித்தர்கள் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோர் வந்து பாடியும் வழிபட்டும் இருக்கின்றனர். இங்கு ஒரு சித்தரின் சமாதியும் இருக்கிறது. போகரின் சமாதியாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
திருப்புகலூர் கோயில்
தலத்தின் சிறப்பான விசேஷங்கள்:
ஆன்மீக அன்பர்களால் நம்பி வழிபடும் முக்கிய விஷயங்கள் இவைதான்.
* அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து காட்சி தந்த தலம் இது என்பதால், அக்னிக்கு உருவச் சிலை இந்தக் கோயிலில் அமைந்திருப்பது விசேஷம்.
* பண்டைய காலத்திலேயே சாதி மத வேறுபாடின்றி அப்பர், திருஞானசம்பந்தர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகிய ஐவரும் ஒரே சமயத்தில் ஒன்றாக அமர்ந்து ஸ்ரீ அக்னீஸ்வரரை வணங்கியது குறிப்பிடத் தக்கது.
* கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் உரிய தோஷ நிவர்த்தி அருளும் தலம். அதற்கேற்ப இங்கே பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.
புண்ணை மரம்
* அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் அம்பாள் கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும். திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் சாயரட்சை கால பூஜையின்போது அம்பாளுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வேண்டுதல் செய்தால் அது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.
* நளமகராஜன், சனி தோஷம் விலக இக்கோயில் குளத்தில் குளித்தெழுந்த போதுதான் இங்கிருந்து 7 கல் தொலைவில் இருக்கும் திருநள்ளாற்றில் விலகிக்கொள்கிறேன் என்று சனிபகவான் அசரீரியாகக் கூறினாராம். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் அனுக்கிரஹ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். காக்கையை தோளில் சுமந்தபடி நளமகராஜனுக்கு இக்கோயிலில் சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
* சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது இங்கு வந்து வணங்கிச் செல்வதை பிறவிப் பெருமையாகக் கருதுகிறார்கள்.
செங்கல் வழிபாடு
* திருவாரூரில் மண்டபம் கட்டி வருவோர்க்கெல்லாம் அன்னதானம் செய்வதற்காக சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகலூரானை பாடி படிக்காசு வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு திருப்புகலூர் கோயிலுக்கு வரும்போது இரவாகிப் போனதால் கோயில் மூடப்படவே, வாசலிலேயே தலையில் செங்கல் வைத்து உறங்கி இருக்கிறார். அவர் வந்த நோக்கத்தை அறிந்த அக்னீஸ்வரர் அவர் தலைக்கு அடியில் வைத்திருந்த செங்கல்லை தங்க கல்லாக மாற்றிக் கொடுத்திருக்கிறார். நேரில் தரிசிக்காமல் நான் விரும்பி வந்ததை அள்ளிக்கொடுத்த அக்னீஸ்வரரை என்னவென்று புகழ்வேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் மனமுருகி பாடியிருக்கிறார். அன்று முதல் புதிதாக வீடுகட்ட விரும்புவோர், அக்னீஸ்வரர் முன்பாக 6 செங்கல் வைத்து பூஜித்து, அதில் மூன்றை இறைவனுக்கு கொடுத்துவிட்டு மீதி மூன்றை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அந்த கற்களை வீட்டில் தினந்தோறும் பூஜித்து வீடுகட்டும்போது வாசல்நிலை மேல் ஒன்றும், ஈசான்ய மூலையில் ஒன்றும், பூஜை அறைமேல் ஒன்றும் வைத்து கட்டினால் எவ்வித தடையுமின்றி கிரஹபிரவேசம் நடக்கும் என்பதோடு, அந்த வீட்டிற்கு என்றும் அக்னீஸ்வரர் அருள்பார்வை இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதற்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். அவர்களுக்குரிய செங்கல் கோயில் வாசலில் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
* நல்லாத்தூரைச் சேர்ந்த தனசேகரன், என் வீடுகட்டும் கனவை நனவாக்கித் தந்தது அக்னீஸ்வரர்தான் என்று உறுதியாக நம்புகிறேன். நான் வீடு கட்டிய பின்பு நண்பர்கள் உறவினர் அனைவரையும் இக்கோயிலுக்கு அழைத்து வந்து செங்கல் பூஜை செய்து கொடுப்பதை புண்ணியமாகக் கருதுகிறேன்・என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக