மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய காதல் சின்னத்தைப் போலவே, (அதை விட அழகாகவும் , கிணற்றைப் போல தரைக்கு அடியில் இருந்தும் )முதலாம் பீமதேவரின் நினைவாக அவர் மனைவி உதயமதி கட்டிய நினைவகம் குஜராத்தில் உள்ளது. உதயமதி இதைக்கட்ட ஆரம்பித்தாலும் 1050 -இல் கட்டிமுடித்தவர் அவள் மகன் முதலாம் கரன்தேவ்.இந்தக் கிணற்றில் இருந்து கிட்டத்தட்ட 30 கிமீ தூரத்துக்கு ஒரு சுரங்கவழி உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை சென்றிருக்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா, தப்பிச்செல்லும் வழியா என்று சொல்லமுடியவில்லை. இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழியும் இதுவே.
படிகளாக இறங்கிச்செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. பாதிக்குமேல் செல்ல இன்று அனுமதி இல்லை. உள்ளே எல்லா இடங்களிலும் இடைவெளி இல்லாமல் சிற்பங்கள். இந்த நிலத்தடிக் கிணறு 64 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இந்தக் குளத்தின் வடிவ நேர்த்தியை எந்தக் கோணத்தில் நின்று நோக்கினாலும் பரவசத்துடன் அல்லாது உணர முடியாது. 1998 முதல் இது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படுகிறது. (ஜலால
அலாவுதீன் கில்ஜியால் இடித்துத் தள்ளப்பட்ட இந்தக் கலை அற்புதம் மேலே மேலே செங்கல் குவியல்கள் விழுந்து மண்மூடிப் புதைந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் எவருக்கும் தெரியாமல் கிடந்தது. அந்த இடம் மக்களால் ராணி கி வாவ்-ராணியின் கிணறு என அழைக்கப்பட்டது.
1958 இல் இந்த இடம் அகழ்வாராய்ச்சிக்கழகத்தின் கவனத்துக்கு வந்தாலும் 1972இல்தான் முறையான அகழ்வு-மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1984இல்தான் இது பொதுப்பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் சுற்றுலாப்பயணிகள், கலையார்வலர் பெரும்பாலானவர்களுக்கு இந்த இடம் பற்றி ஒன்றுமே தெரியாது. மிகமிகக் குறைவாகவே இங்கே பயணிகள் வருகிறார்கள். மிகுந்த கவனத்துடன் இந்த ஆழமான கிணற்றில் இருந்து சிற்பங்கள் மீட்கப்பட்டு உரிய இடம் கண்டடையப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பில் முப்பது சதம் மீட்கப்பட்டுள்ளது. அதுவே பிரமிக்கச்செய்கிறது. இதைப்போன்ற ஒரு மகத்தான கட்டுமானம் இன்னொன்று உலகில் உண்டா என்பதே ஐயம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக