குளிர் கால உணவுக் குறிப்புகள்
கிச்சடி, பொங்கல் போன்றவை, குளிர் காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருள்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும்.
சாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு, மல்லிக் காப்பி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது. சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும். கால்வலி, வாதத்தால் ஏற்படுகிறது.
வலியால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது பெருஞ்சீரகம், மிளகு, ஓமம், சீரகம் ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். கால்வலி குறையும். இஞ்சிக்கு வீக்கத்தைக் குறைக்கும் மருத்துவக் குணம் உண்டு.
ரத்த ஓட்டத்தில் பிரச்சனை இருந்தாலும், இஞ்சி சரிசெய்யும். மூட்டுவலி, உடல்வலி இருப்பவர்கள் டீயில் இஞ்சியைத் தட்டிப்போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சமையலில் நிறைய இஞ்சி சேர்க்கலாம். இதனால் கால் வீக்கம் குறைவதுடன், வலியும் நீங்கும்.
உணவில் இஞ்சி, கொத்துமல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்க்கவேண்டும். இவையெல்லாமே சிறந்த வலி நிவாரணிகள்தான். பனிக் காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவேண்டும்.
இதனால் கபத்தின் குணம் குறையும். அரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி, பார்லி போன்ற தானியங்களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். ஓட்ஸை விட பார்லி மிகவும் நல்லது. சில குழந்தைகளுக்கு 'வீசிங்’ எனப்படும் இளைப்பு ஏற்படும். சளித் தொந்தரவும் இருக்கும்.
துளசியைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது. பேக்கரி உணவுகளான கேக், பஃப்ஸ், பன் போன்றவை மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, கொட்டைப் பருப்பு வகைகள் (நட்ஸ்), உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
முளைகட்டிய பயறு சுண்டல், பாசிப்பருப்பில் செய்த லட்டு, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை சிறந்த ஸ்நாக்ஸ். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், மற்ற செயல்பாடுகளுக்கும் கொழுப்பு மிக அவசியம். எனவே எண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம். நெய் போட்டுச் செய்த முறுக்கு, சீடை சாப்பிடத் தரலாம்.
சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகிய குழந்தை, 'ஜங்க் ஃபுட்’-ஐ நாடிப் போகாது. இந்தப் பருவத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்களை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆனால், பூசணி, வெள்ளரி போன்ற நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழத்தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத்துக்கு இதுதான் சீஸன். ஆனால், சளி, ஜலதோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சைத் தவிர்த்துவிட்டு, நெல்லிக்காய் சாப்பிடலாம்.
http://www.maalaimalar.com/2014/01/21093342/winter-season-Eating-healthy-f.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக