தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 2, 2014

நயினையிலும் பிரவாகமெடுத்த கங்கா தரணி!


ஜகம் புகழும் முன்னை ஜம்பு மாநகரினிலே
திருத்தலம் கொண்ட அன்னையவள் பூமியிலே
அலை தவழும் வங்கக் கடல் ஓரத்திலே 
அமுதம் கலந்திருக்கும் அற்புதமே ! கங்கா தரணி,

குமரி மலை சாரலில் பிரவாகம் எடுத்து ஈழம் தென்னிந்தியா உட்பட்ட குமரி நாடு முழுவதும் பாய்ந்து ஓடி ,இந்திய வடநாட்டுக்கும் பல்வேறு துணை ,கிளை நதிகளாக பிரிந்து ஓடி புராதன மக்களின் வாழ்வை வளமாக்கிய சரஸ்வதி நதி எங்கே ,என்று நாம் தேடினால் எமது பழமையான பல ஆதிகால வரலாறுகள் பற்றிய பல்வேறு சான்றுகளும் வரலாற்று தடயங்களும் தெரிய வரும் .

ஏழுகடல்களும் கொதித்தெழுந்து கோர தாண்டவம் ஆடி ஊழிக்காலத்தில் உலகின் பல பகுதிகளை அழித்தாக புராண வரலாறுகளும் ஆராய்சியாளர்களின் முடிவுகளும் சான்று பகர்கின்றன .

ஆதிகால வரலாறு கூறும் வேத புராண இதிகாசங்களில் சரஸ்வதி நதியை பற்றி குறிப்பிடாமல் வரலாறுகள் இல்லை . என்று கூறும் அளவுக்கு அந்த நதியின் முக்கியத்துவம் எடுத்துகாட்டப்பட்டுள்ளது .
சிவன் பிரம்மா விஸ்ணு பற்றிய புராண கதைகளாக இருக்கட்டும் ஆதி சக்தியின் அற்புத வரலாறுகள் சொல்லும் புராணங்களாக இருக்கட்டும் ,மனித குலங்கள் தோன்றிய மூல வரலாறுகள் கூறும் சப்த ரிஷிகளின் வரலாறுகளாக இருக்கட்டும் அனைத்து புராண வரலாறுகளிலும் சரஸ்வதி நதி பற்றிய பல்வேறு கருத்துக்கள் உள்ளது .

இன்றைக்கு ,//கணிப்பு 2013//,,,11596 வருடங்களுக்கு முன்னம் பூமி அதிர்ந்து ஆர்பரித்து ஆவிநீராக கொதித்தெழுந்த கடல் அலையால் பல நாடுகள் அழிந்துபோனதாக அத்திலாந்து சமுத்திரம் என்ற நூலை எழுதிய பெர்டினண்ட் கித்டேல் என்ற மேலைத்தேச எழுத்தாளர் குறிப்பிட்டு இருக்கின்றார்.இந்த கடல் அழிவில் பொழுது குமரி மலைசார்ந்து பிரவாகித்து ஓடிய சரஸ்வதி நதியில் பெரும் பகுதி நில வெடிப்புக்குள் சங்கமித்து கடலோடு கலந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது .பின்னர் காலத்துக்கு காலம் ஏற்பட்ட கடல் கோள்களாலும் பூமி அதிர்வுகளாலும் அந்த நதி தனது தோற்றுவாயை முழுமையாக இழந்து இருக்கலாம். சரஸ்வதி இன்றைய வட இந்தியாவில் இருந்து பாய்ந்த ஒரு நதியாக இருந்து இருந்தால் இன்றும் அதன் பெயர் சகல வரலாறுகளிலும் நிலைத்து இருந்து இருக்கும் .ஆனால் இன்றைய வரலாறுகளில் அந்த நதி பற்றிய குறிப்புக்கள் இல்லை இதுவே அது இன்றைய இமயத்தில் உற்பத்தியாக வில்லை .கடல் கொண்ட குமரியில் உற்பத்தியாகியது என்பதற்கு போதுமான ஆதாரம்.
கி மு 1900 ஆண்டுக்கு முன்னம் இந்த நதி நீர் ஏனைய நதிகளோடு கலந்தும் கடலோடு சங்கமித்தும் தனது நீரோட்டத்தை இழந்து போய்விட்டது என்றே வரலாற்று தகவல்கள் கூறுகின்றன .

சரஸ்வதி நதியை கடல் நீர் உள்வாங்கிய ஏழுகடல்களும் ஒன்றாக சங்கமித்து ஆர்பரித்து ரீங்காரமிடும் இடமாக இன்றும் எம்மவர்களால் கருதப்படும் எழாற்று பிரிவு என்ற கடல் பகுதி ஈழநாட்டின் வடபால் அமைந்துள்ள தீவுகளை பிரிக்கும் இந்து சமுத்திரத்தின் ஜலசந்தியில் எழுவைதீவுக்கு அருகில் இன்றும் அடங்காத அலையாக எழுவதும் வீழ்வதுமாக ஆர்பரித்துகொண்டு இருக்கிறது .அந்த கடல் சார் பகுதியிலேயே புராண இதிகாசங்களில் சிறப்பாக சொல்லப்படும் நாகலோகத்தின் பெரும் பகுதியும் தண்ணீரில் மூழ்கி காணாமல் போய் இருக்கிறது .இன்றும் நயினை நாக பூசணி அம்மன் ஆலய தேர் ,தீர்த்த பூங்காவன திருவிழா தினங்களான மூன்று தினங்களிலும் தேவ கணங்களில் பிறந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிப்போன நாகலோகத்தின் நகரங்களையும் அம்பிகையின் புராதன ஆலயங்கள் தேர்களையும் அந்த கடல் பகுதியை பார்த்தால் கண்ணார காணலாம் என்ற ஜதிக கர்ண பரம்பரை கதைகளை பலர் ஞாபகத்தில் வைத்திருகின்றார்கள் .இன்றைய நவீன ஆய்வாளர்கள் நாகலாந்து என்று இந்தியாவில் ஒரு வரலாற்று தொடர்புகள் இல்லாத பகுதியை கூறி நம்பவைத்து வரலாறுகளை மாற்ற நினைக்கின்றார்கள் .

தேவர்களும் அசுரர்களும் அந்த இந்துசமுத்திர ஜல சந்தியில் வைத்தே //சமுத்திர //அமுதம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தார்கள் என்று கூறப்படும் புராண கதைகளும் இருக்கிறது .
.இன்று நயினாதீவுக்கு வடக்கே அனலைதீவோடு இணைந்த புளியந்தீவு பகுதி கடலை அனைவரும் பாம்பன் கடல் என்றே அழைகின்றார்கள்.இந்த கடலுக்கு அடியில் பர்வத மர்த்தினி என்ற மாதேவி அம்மையின் மிகப்பெரிய ஆலயம் கடலில் மூழ்கி இருக்கிறது அந்த ஆலயத்தை அட்டநாகங்களும் அவர்தம் உறவுகளும் தாங்கி நிற்கின்றார்கள் என்று ஒரு கர்ண பரம்பரை கதை இருக்கிறது .இதையே ஆதிசேடன் ஆயிரம் தலை கொண்டு தாங்கி நிற்கின்றான் என்று எம்மவர்கள் கூறுகின்றார்கள் .கடலில் மூழ்கி இருக்கும் மிகப்பெரிய பர்வத மர்த்தினி ஆலயத்தின் நிலம் சார் பகுதியில் இருப்பதே புளியம் தீவு நாகதம்பிரான் ஆலயமும் ,நயினை நாகபூசணி அம்மன் ஆலயமும் ,இதற்கு ஒரு சிறு சான்றாக பல வருடங்களுக்கு முன்னம் எம் மூதாதையர் கூறும் கர்ண பரம்பரை கதைக்கு மூலமாக வலு சேர்க்க நாக பூசணி அம்மன் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் இன்று இருக்கும் நாகத்தில் வால் பகுதி எங்கே முடிகின்றது என்று செய்த ஆராய்சியில் அது ஒரு முடிவில்லாத நீளமாக செல்கின்றது என்றே ஆராச்சியின் முடிவில் புளியம் தீவு நாகதம்பிரான் ஆலயம் வரை செல்லலாம் என்று கூறினார்கள் .

புளியம் தீவில் இருக்கும் நாகபுஸ்கரணி தீர்த்தமும் சேது தீர்த்ததோடு கடலோடு சேர்ந்து சங்கம தீர்த்தமாகி இருக்கிறது .இதுவும் பண்டையகாலத்தில் தீவுகள் பிரியாத நிலப்பரப்பாக இருந்த காலத்தில் கங்கை நீர் கலந்த நர்மதை நதியால் கங்கா தரணியோடு கலந்து ஓடி வந்து இருக்கலாம் .இன்று கடலோடு பெரு நதிகளும் இணைத்து கொண்ட நீரால் நிலங்களும் தீவுகளாக பிரிந்து நிற்பதால் பல வரலாறுகளை நிறுவுவது மிகவும் கடினமாக இருக்கின்றது .
வேதகால புராண வரலாறுகளில் ஆரம்பத்தில் தனித்தே ஒரு நதியாக சரஸ்வதி பற்றி கூறப்பட்டாலும் வரலாற்று நகர்வில் பல இடங்களில் இன்னும் 6 நதிகளை சேர்த்து நதிகள் ஏழு என்றும் அவை ஒன்றோடு ஒன்று கலக்கின்றது அதில் தாயான நதி சரஸ்வதி என்றும் ஏனையவை துணை நதிகள் என்றும் கூறப்படுகின்றது .துணை நதிகளாக ,நர்மதை ,காவேரி ,கோதாவரி ,யமுனை ,சிந்து ,கங்கை ஆகிய நதிகள் கூறப்படுகின்றது .புராண காலத்தில் நாக லோகத்தை ஆண்ட கார்த்தவீரியார்ச்சுனன் என்ற நாக அரசன் நர்மதை நதியில் தினமும் அதிகாலையில் நீராடி மண்ணினால் சிவலிங்கத்தை செய்து சிவவணக்கம் செய்தான் .இவன் காமதேனுவை கவர்ந்து நாகலோகத்துக்கு கொண்டுவந்தான் என்ற குற்றத்துக்காக பரசுராமனுடன் போரிட வேண்டி ஏற்பட்டது போரில் வென்ற பரசுராமன் அவன் உயிர்பறித்த பிரமகத்தி தோஷம் நீங்க நர்மத்தை ஆற்று மண்ணில் சிவலிங்கம் செய்து சிவவணக்கம் செய்தார் என்றும் புராண வரலாறுகள் கூறுகின்றன .போரில் தான் வென்ற நாடுகள் அனைத்தையும் காசிப ரிஷியிடம் ஒப்படைத்துவிட்டு மகேந்திர பர்வதத்தில் தவம் செய்ய பரசுராமர் சென்றபின் நாகலோகத்தை ஆண்ட காசிபன் மகன் ஆதி சேடனும் நர்மதை நதி கரையில் மண்ணினால் செய்யப்பட்ட சிவலிங்க வணக்கத்தை செய்தான் என்று கூறப்படுகின்றது .குபேரன் நர்மதை நதி கரையில் விரதம் இருந்து சிவனை நோக்கி தவம் செய்தான் என்றும் வரலாறுகள் சொல்கின்றன . பிற்காலத்தின் இராவணனுடன் போர் புரிந்த இராமனும் இராமேஸ்வர கடல் கரையில் பிரம்மகத்தி தோஷம் நீங்க மண்ணினால் சிவலிங்க உருவம் செய்து வழிபட்டான் என்றும் வரலாறுகள் சொல்கின்றது .இதுவும் கங்கை நீர் கலந்த நர்மதை நதி கலந்த இடமாக இருக்கலாம் .இவ்வாறாக நர்மதை நதி சிவ வணக்கத்தோடு தொடர்புபட்டு பேசப்படுகின்றது .

ஆதி சேடனும் அவன் மாற்று தாயின் மகனான அவன் தம்பி கருடனும் அரசு உரிமைக்காக போரிட்டதாக வரலாறுகள் கூறுகின்றன .அந்த போர் நடந்ததாக கருதப்படுவது இன்றைய நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு அண்மித்த கடல் என்பதற்கு உறுதியான ஆதாரம் இன்றும் அங்கு இயற்கையான உருவ வடிவில் கடலின் நடுவில் சிலை கற்களாக இருகற்கள் இருக்கிறது .உறுதியாக எழுதப்படாத வரலாறுகள் காலபோக்கில் மாற்றம் அடையும் என்பது உண்மைதான் ஆனால் சான்றாக உள்ள ஒரு உண்மையை மறைப்பது மிகவும் கடினம் .எனவே அந்த போர் அங்கு நடந்ததாக கருதப்படுவதில் இருந்து ஆதிசேடன் ஆண்ட நிலப்பரப்பு அந்த பகுதி சார்ந்தது என்பதை நிறுவ முடிகின்றது .அப்படியாயின் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் விந்திய மலை தொடரில் உற்பத்தியாகி ஓம் வடிவில் இந்தியாவில் ஓடி கொண்டு இருக்கும் இன்றைய நர்மதை தான் புராணங்களில் ஈழ நாட்டையும் தொட்டு சென்றதாக கூறப்படும் நதியா என்ற சந்தேகம் எழுகின்றது .விண்ணில் இருந்து மழையாக பொழிந்து உருவாகிய கங்கை இமயத்தில் இருந்து ஈழம் வரை ஓடி வங்க கடலில் கலந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் .அதே கங்கை குமரி நாட்டிலும் தாய் நதியான சரஸ்வதியோடும் துணை நதிகளோடும் கலந்து பிரவாகித்து நர்மதை நதியிலும் கலந்து ஈழத்தின் வடபகுதியையும் தொட்டு சென்றது என்று கூறத்தகு வகையில் இந்த பகுதியை ஆண்ட அரசர்கள் பற்றிய வரலாறுகள் குறிப்புகள் சான்று பகர்கின்றன .இதை உறுதிபடுத்தும் வகையில் ஆய்வாளர்கள் ஈழத்தின் புண்ணிய தீர்த்தமான பாலாவி, நர்மதை நதியின் ஊற்றில் இருந்து பிரவாகித்தது என்று பலர் கருத்து கூறியுள்ளார்கள்.இந்த ஆய்வாளர்களின் கூற்றை நான் வரவேற்கும் அதே வேளை துணை நதிகளில் மிக பெரிய நதியான கங்கை நீர் கலந்த நர்மதை நதியின் நீரில் இருந்து ஊற்றெடுத்தவையே ஈழத்தின் ஏனைய தலங்களின் புண்ணிய தீர்த்தங்கள் என்ற கருத்தையும் முன்வைக்கின்றேன் .அந்த வகையில் திருகேதீச்சரத்தின் பாலாவி தீர்த்தமும் நகுலேச்சரத்தின் கீரிமலை தீர்த்தமும், புளியந்தீவு நாகேஸ்வரத்தின் நாகபுஸ்கரணி தீர்த்தமும் , நயினை கங்கா தரணியும் சிறப்பு பெறுகின்றது .
இந்த தீர்த்தங்கள் அனைத்துக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன வென்றால் எம்மவர்களால் இந்த கேணிகள் இன்று உள்ள கடல்கரை பகுதியில் வெட்டி உருவாக்கிய பொழுது கடலுக்கு மிக அருகில் நன்னீர் ஊற்றுகளாக இவை பிரவாகம் எடுத்தது ஒரு அற்புதமாகவும் அனைத்துக்கும் உள்ள ஒற்றுமையாகவும் கருதப்படுகின்றது .

ஊழிக்காலத்தில் ஏற்பட்ட நில அதிர்வாலும் கடல் அழிவாலும் தாய் நதியான சரஸ்வதி கடலோடு சங்கமித்ததால் துணை நதிகளான நர்மதை ,காவேரி ,யமுனை ,கோதாவரி ,சிந்து,போன்றன நீரற்ற வறட்ட நிலங்களாக மாற தொடங்கின .அழிவுகளில் இருந்து தப்பி பிழைத்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்கு பெரும் கஸ்ரப்படும் நிலை தோன்றியது .அந்த வேளைகளில் தான் ஆயகலைகள் அனைத்தையும் கற்று தேர்ந்த ஆதி சிவனும் சக்தியும் மக்களை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த தொடங்கினார்கள் .சிவன் மக்களின் வாழ்வாதார பிரட்சனையை தீர்க்க அடிப்படைதேவையாக இருந்த தண்ணீரை மக்களுக்கு பெற்றுகொடுக்க மழை நீரை பூமிக்கு கொண்டுவர தான் கற்ற கலைகளை உபயோகித்தார் .இதையே நாம் புராணங்களில் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டுவந்தான் பகீரதன் என்று படிக்கின்றோம் .பூமிக்கு வந்த மழை நீர் பூமியில் பல்வேறு இடங்களில் தேங்கி சிதறி ஓடியே கங்கை என்ற நதி பிரவாகம் எடுத்து ஏனைய நதிகளுக்கு நீர் வழங்கியது .இதனால் தான் கங்கையை விண்ணிலும் மண்ணிலும் மூவுலகிலும் தோன்றுவதாக கதைகளை எழுதி உள்ளார்கள் .கங்கையின் தோற்றுவாயை ஏனைய நதிகளை போல் மலை சாரல்களில் இருந்து பெருகி ஓடியதாக குறிப்பிடவில்லை .இவை புராண தகவல்களில் இருந்து எடுக்கபட்ட வரலாறுகளாய் இருந்தாலும் கற்பனைகளுக்கு அப்பால் சென்று ஒரு உண்மையை நிறுவி செல்கின்றது .செயற்கையாக மழையை வரவைக்கலாம் என்பதையும் வரும் மழையை நிறுத்தலாம் என்பதையும் 2008 ஆண்டு ஒலிம்பிக் தொடக்க விழாவில் சினா செய்து காட்டியது .இன்றைய சீனால்வால் முடியும் என்றால் அது அன்றைய சிவனாலும் முடியும் என்று நாஸ்திகர்களும் நம்புவார்கள் என்று கருதுகின்றேன் .

கங்கை நீர் பூமியில் தங்கிய இடமெல்லாம் மக்கள் மீண்டும் குழுமி வாழ்கையை வாழ தொடங்கினார்கள் .அவர்கள் வாழ்கையை மேன்மையுற செய்ய ஆதி சக்தி பீடங்களை உருவாக்கி மக்கள் வாழ்வை நெறிபடுத்தினார்.இவையே இன்று நாம் வரலாறுகளில் படிக்கும் 64 சக்தி பீடங்கள் இவற்றில் 52 பீடங்களே இதுவரை உறுதிபடுத்த தக்கவகையில் அமைந்துள்ள இடங்களோடான ஆதாரங்களுடன் இருக்கிறது .ஏனையவை பின்வந்த கடல்கோள்களால் பாதிக்கபட்டு இருக்குமா இல்லை எம்மால் இதுவரை அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றதா என்பது இன்னும் ஆராச்சிக்கு உரியவிடயமாகவே கருதுகின்றேன் . ஆயகலைகளை கற்றுகொடுத்து மனித குலத்தை மீண்டும் தழைத்தோங்க செய்ய ஆதி சக்தியால் அமைக்கப்பட்ட பீடங்களில் ஒன்றுதான் ஈழத்தின் வடபால் அமைந்துள்ள நயினாதீவில் உள்ள புவனேஸ்வரி பீடம் .இது வரலாற்றில் சம்புநகர் அல்லது மணிதீவு புவனேஸ்வரி பீடம் என்று அழைக்கபடுகின்றது.இந்த திருத்தலத்தில் இருக்கும் மூலஸ்தான ஐந்து தலை நாகமும் அதனோடு இருக்கும் அருவுருவ திருமேனியும் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று பல்வேறு ஆய்வாளர்கள் உறுதிபடுத்தி உள்ளார்கள் .இதற்கு பின்வந்த புராண கதைகளில் ஆதி சக்தியின் மறு அவதார கதைகளில் தட்சன் மகள் தாட்சாயணியாக பிறந்து ,தந்தை தன் கணவனான சிவனுக்கு முதன்மை கொடுக்காததால் தந்தையோடு தர்க்கம் செய்து அக்கினி குண்டத்தின் குதித்த தாட்சாயணியின் உடலின் கை விரல் பாகம் மகா விஷ்ணுவால் எடுத்துவந்து கங்கையில் கரைக்கபட்ட இடம் நயினாதீவு அங்கு இந்திரனால் சக்தி பீடம் அமைக்க பட்டது என்ற வரலாறும் இருக்கிறது .ஆதிசக்தி பர்வத ராஜன் மகள் பார்வதியாக மீண்டும் புனர் ஜென்மம் எடுத்த பொழுது அவள் அக்காவாக கங்கை தோன்றினாள் என்றும் பகீரதன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து ஆகாய கங்கையான அவளை பூமிக்கு கொண்டுவந்து சிவனோடு சங்கமித்த இடம் கங்கை என்றும் வரலாறுகள் இருக்கின்றது . பர்வத ராஜன் //மலைஅரசன் //பெண் பிள்ளைகளுடன் நதிகளை தொடர்பு படுத்தி எழுதப்பட்ட புராண கதைகள் இவ்வாறு சொல்கின்றது .வரலாறுகள் பல வழிகளில் எழுதப்பட்டு இருந்தாலும் ஏதோ ஒரு உண்மை நிலை மறைமுகமாக இங்கு இருக்கிறது என்பது உறுதியானது.

காலத்துக்கு காலம் எழுதப்படும் வரலாறுகளின் உண்மைகளை நிறுவுவதற்கு பல சித்தர்கள் ஞானிகள் தோன்றுவார்கள் அந்த வகையில் நயினாதீவில் கங்கா தரணியை அமைக்க வைத்து அதன் புராதன வரலாற்றை நிறுவுவதற்கு நயினை மண்ணில் அவதரித்த சித்தரே முத்துக்குமார சுவாமிகள் .இவர் ஈழத்து சித்தர்கள் வரிசையில் மிகவும் போற்றுதற்கு உரியவர் .இவர் காவி உடை தரித்து சடா முடியுடன் 1933 ஆம் ஆண்டு அம்மாள் ஆலய உயர்திருவிழாக்கு தன்னை நயினை மைந்தன் என்று யாருக்கும் தெரியாத விதத்தில் திருவிழா காலத்தில் வந்த பல சுவாமிகளுடன் சேர்ந்து நயினாதீவுக்கு வந்தார் .வந்தவர் திருவிழா முடிந்து அனைத்து சுவாமிகளும் தங்கள் பிரதேசங்களுக்கும் சிவலிங்க புளியடிக்கும் யோகநிலைக்கு திரும்பினார்கள் .ஆனால் இவர் மட்டும் போகவில்லை அம்மன் ஆலய வீதியில் இருந்த அன்னபிள்ளை மடத்தில் யோக நிலையில் ஆழ்ந்தார் .தன்னை யார் என்று காட்டி கொள்ளாமலே தியானத்தில் இருந்தவர் .சில பக்குவ பட்ட ஊரவர்களுக்கு ஞான ஒளியை காண்பித்தார் .யாழ் சிவலிங்க புளியடியில் இவர் யோகநிலையில் இருந்த காலத்தில் இவரிடம் பலர் சீடர்களாக இருந்தவர்கள் அவர்களில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரான சண்முகசுந்தரம் என்பவரும் ஒருவர் அவருக்கு பணிப்புரை வழங்கி நயினாதீவில் தென் மேற்கு பகுதியில் ஒரு இடத்தை குறிப்பிட்டு சிறு தீர்த்த கேணியை உருகாக்கும் படி கூறினார் .என்ன அதிசயம் என்றால் இவர் சொன்ன இடம் அலை கடல் வந்து தட்டும் கடல் கரைக்கு மிக குறுகிய தூர இடைவெளியில் இருந்தது பக்கத்தில் இடிபாடுகளுக்கு இடையில் அழிவடைந்த நிலையில் ஒரு ஆலயமும் இருந்தது ,அதை நாம் இன்று தீர்த்தக்கரை சிவன் கோவில் என்று அழைக்கின்றோம் .ஆனால் அடியவர் இவர் சொன்ன படி அந்த இடத்திலேயே கருகல்லை பொழிந்து கேணியை வெட்டினார் .வெட்டிய இடத்தில் ஊற்றெடுத்த தண்ணீர் நன்னீராகவே இருந்தது.இது தாயவள் நாகபூசணி அம்மாள் கருணை என்று அனைவரும் கருதினர் .சில காலங்களுக்கு பின்னர் சுவாமிகள் கரம்பொன் என்ற கிராமத்தை சேர்ந்த வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகஸ்தரும் சமூக சேவையாளருமாக இருந்து பல்வேறு நற்பணிகள் செய்த தம்பி ஐயா என்பவரது கனவில் தோன்றி ஒரு இரத்தினகல் புதையுண்டு உள்ள இடத்தை கூறி அதை எடுத்து நயினாதீவு தீர்த்தக்கரையை விசாலமாக கட்டுமாறு வேண்டிகொண்டார் .காலையில் விழித்து எழுந்த தம்பி ஐயா சிவாமிகள் கூறிய இடத்துக்கு சென்று அவர்கூறியது போலவே அங்கு இருந்த இரத்தின கல்லை எடுத்து விற்பனை செய்து அதன் மூலம் வந்த பணத்தை கொண்டு கேணியை கிண்ட தொடங்கினார் அவர் தொடக்கும் பொழுது கடும் கருங்கல் பாறைகளாக இருந்த அந்த இடத்தை கிண்டுவது மிகவும் கடினமாக இருப்பதை உணர்ந்தாலும் பாறைகளை பொழிந்து முயற்சி செய்து கிண்டி கொண்டு இருக்கும் வேளையில் இலகுவாக கிண்டி முடிக்க கூடியதாக இருந்திருகின்றது .கிண்டிய கேணியை கட்டி முடித்தார் அருகில் ஒரு தீர்த்த கிணறும் அமைத்து கொடுத்தார் .மேலான ஒரு இறை சக்தியே இந்த கடுமையான பணியை முழுமையாக செய்ய தனக்கு உதவியதாக அவர் சுவாமிகள் பற்றி கூறிய குறிப்பில் கூறி இருக்கின்றார்.

பாம்பன் கடல் கருடன் பாம்பு கல்லுக்கு பிற்காலத்தில் விளக்கங்கள் எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் ,புளியம் தீவு நாகதம்பிரான் கோவிலில் இருந்து நயினை அம்பிகைக்கு சூட மலர் கொண்டுவந்த பாம்பை கருடன் மறித்து சண்டை இட்டதாகவும் அந்த வழியில் வந்த இரத்தின கல் வியாபாரி விராசாமி செட்டியார் இடை மறித்து பாம்பையும் கருடனையும் விலத்தியதால் சண்டை நின்றதாகவும் ,அதில் இருந்து அவர் மரக்கலம் அசையாமல் நின்றதால் தனது செல்வத்தை கொண்டு அந்த இடத்துக்கு அண்மையில் அம்பாளுக்கு கோவில் கட்டியதாகவும் கோவில் பணிகள் முடிந்து வீடு சென்ற வேளை அவர் வீட்டில் விலை மதிப்பு மிக்க நாக ரத்தினகற்கள் இருந்ததாகவும் கதைகள் உண்டு .இவை எழுதப்பட்ட உறுதிபடுத்த முடியாத வரலாற்று கதைகளாக இருந்தாலும் ,முத்துக்குமார சாமி கூறிய படி இருந்த இரத்தினகல் விடயம் ஒரு உண்மை சம்பவம் .
.
சுவாமி ஒரு தீர்க்க தருசனத்திலேயே அந்த இடத்தில் கங்கா தரணி என்ற பெயர் கொண்ட தீர்த்த கேணியை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார் .அம்பாள் கோவிலும் அந்த தீர்த்த கரை இருக்கும் இடமும் மிகவும் தூரம் அவர் விரும்பி இருந்தால் அம்பாள் ஆலய அமைவிடத்துக்கு அண்மையில் அமைத்து இருக்கலாம் இல்லை வேறு இடங்களில் அமைத்து இருக்கலாம் ,அல்லது வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு பக்கத்தில் அமைத்து இருக்கலாம் .ஆனால் சுவாமிகளின் ஞானத்தால் இன்று கங்கா தரணி அமைந்துள்ள இடத்துக்கு ஒரு வரலாற்று சிறப்பு இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து இருக்கின்றார்.அதுவும் கடலுக்கு அருகில் நன்னீர் ஊற்றெடுக்கும் வகையில் அமைந்தது கற்பனைகளுக்கு அப்பால் பட்ட ஒரு அற்புதமான சிறப்பான விடயம் .அருகில் சிதைத்த நிலையில் இருக்கும் அந்த பழைய கோவில் வரலாறுகள் பற்றி இதுவரை ஒரு உறுதியான வரலாறு யாராலும் எழுத படவில்லை ஆனால் அந்த கோவிலுக்குள் ஏதோ ஒரு மிக பெரிய வரலாறு மறைந்து இருக்கிறது .அந்த வரலாற்று கோவில் பற்றி சித்தரால் தெரிந்து கொள்ள முடிந்திருகின்றது என்றே கருதுகின்றேன்.அதனால் தான் அவர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கின்றார் .

மறைந்து போன வரலாறுகளை தேடி பிடிப்பதற்கு எமக்கு சிறு ஆதாரங்களே கிடைகின்றன அந்தவகையில் .கங்கா தரணியும் ஒரு வரலாற்று சான்று ,இந்த கங்கா தரணி ஆகாயத்தில் இருந்து மழையாக பொழிந்து பூமியில் பிரவாகித்து நர்மதை போன்ற நதிகளுக்கு புத்துயிர் கொடுத்த அந்த ஜீவ நதி நீர் ஓடிய இடத்தில் மீண்டும் சித்தரால் அமைப்பட்டு உள்ளதா என்று எண்ண தோன்றுகின்றது .இதே நதி நீரில் மகாவிஷ்ணு தாட்சாயணியின் அங்கத்தை கரைதாரா என்றும் எண்ணத்தோன்றுகின்றது. மகாவிஷ்ணு பாதத்தில் இருந்தே கங்கை தோன்றியது என்று கருட விஷ்ணு புராணங்களில் கூறப்படுகின்றது .இந்த கதைகள் ஏதோ ஒரு உண்மையை வைத்தே புனையப்பட்டவையா என்றும் பல கோணங்களில் சிந்திக்க தோன்றுகின்றது.புராணங்களில் அதீத கற்பனையில் பாம்பு ,பறவை வடிவம் கொடுக்கபட்ட காசிப முனிவர் பிள்ளைகளான நாகலோக அரசர்கள் ஆதிசேடன் கருடன் ,வாசுகி போன்றவர்களுக்கும் மகா விஷ்ணுவுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதும் பல்வேறு கதைகளில் வருகின்றது .பிற்காலத்தின் மகாபாரத அர்சுனனும் தான் செய்த தவறுக்காக பாவம் போக்க தீர்த்த யாத்திரையாக மணித்தீவு வந்ததாகவும் வரலாறு இருக்கிறது .

பல்வேறு வரலாறுகளோடு தொடர்பு பட்ட கங்கை என்ற புனித நதியின் பெயர் கொண்டு அழைக்கப்படும் புனிதமான தீர்த்த கரையில் அன்றில் இருந்து இன்றுவரை நாகபூசணி அம்மன் தீர்த்தமாட வரும் திருக்காட்சி கண்கொள்ளா காட்சி அன்றைய தினம் ஊரில் ஒரு பெரு விழா ஆகவே கருதப்படுகின்றது .வீதிகள் தோறும் மக்கள் சந்தோசம் போங்க வரவேற்பது .ஊரில் உள்ள சிறு ஆலயங்களுக்கு அம்பாள் சென்று அருள்பாலிப்பது போன்ற சிறப்புக்கள் கங்கா தரணியின் அமைவிடத்தால் உருவான மாற்றங்களே அதை பின்பற்றி மாசி மகத்தில் விநாயகரும் ஆடிவேல் தினத்தில் முருகனும் ,மகோற்சவ காலத்தில் வீரபத்திரரும் கங்கா தரணியில் தீர்த்தமாடுவது அதன் சிறப்பு அமைவிடத்தால் வந்த சிறப்புக்களே ,,,

புவியியல் அமைவிடத்தை பார்க்கும் பொழுது இந்து சமுத்திர தலைவாசலில் தென் இந்தியாவை நேர் எதிர் நோக்கி தில்லை சிற்றம்பலத்துக்கு நேராக இருக்கும் இடத்தில் கங்கா தரணி என்ற புண்ணிய தீர்த்த கரை அமைந்து இருக்கிறது .

1980 களில் இந்த புண்ணிய தீர்த்தத்தின் தண்ணீர் கடலோடு கால்வாய் ஊடாக கலக்க விடப்பட்டது .கடலில் கலந்த அந்த புனித நீர் சங்கம தீர்த்தமாகி இறந்த ஆன்மாக்களின் பிதிர்கடன் தீர்க்கும் ,காசி ,கீரிமலை போன்ற தீர்த்தங்கள் போல ,பரசுராமன் ,இராமன் போன்றவர்கள் பிரமகத்தி தோஷம் தீர்த்த கங்கையில் நீர் கலந்த நர்மதை நதி நீர் பிரவாகித்த பகுதியில் இருப்பது சிறப்பான விடயமாகும் .சூரிய குலத்து வழிதோன்றல்களில் ஒருவனான பகீரதன் கங்கையை பூமிக்கு கொண்டுவந்து அந்த புனித நீரில் தம் முன்னோர்களுக்காக பிதிர்கடன் தீர்த்ததாகவும் வரலாறுகளில் வருகின்றது .

மூவுலக சஞ்சாரம் செய்த கங்கை பூமியில் திரிவேணி சங்கமமாகி நதிகளோடு சேர்ந்து பூமியின் சகல பகுதிகளுக்கும் ஓடி நீர் வழங்கி வங்க கடலிலும் கலக்கின்றது .அந்த கங்கையின் சஞ்சாரம் எமது புண்ணிய பூமிக்கும் கங்கா தரணி என்ற புனித தீர்த்தம் மூலம் கிடைக்கின்றது.

காலத்தால் அழியாது பிரவாகித்து ஓடிய கங்கையில்
ஞாலத்தில் நாக குடை நிழல் நயினையம்பதி நாயகி
திருகோலத்தில் எழுந்தருளிவந்து தீர்த்தமாடும் காட்சி
காண கிடைத்தவர்கள் பெற்றது சாலசிறந்த பெரும்பேறே !
,,,நன்றியுடன் சிவமேனகை ,,

No comments:

Post a Comment